Monday, November 16, 2009

இஸ்ரேலை காப்பாற்ற வேண்டாம்-பிரதமருக்கு தமுமுக தலைவர் கடிதம்


பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கடிதம்
பாலஸ்தீனத்தில் நிலவும் சூழல் குறித்த கோல்ட்ஸ்டோன் அறிக்கையை ஐ.நா. பொது மன்றத்தில் இந்தியா ஆதரித்ததை வரவேற்கும் அதே நேரத்தில் அந்த ஆதரவிற்கு சில நிபந்தனைகளை இந்திய விதித்தது குறித்து எங்கள் அமைப்பின் எதிர்ப்பையும் பதிவுச் செய்ய விரும்புகிறேன். கோல்ட்ஸ்டோன் அறிக்கைக்கு இந்தியா நிபந்தனைகளுடன் கூடிய ஆதரவு அளித்தது அணிசேர நாடுகள் இயக்கம் எடுத்த நிலைப்பாட்டிலிருந்து மாறுபட்டு இருந்ததை சுட்டிகாட்ட விரும்புகிறேன்.

கோல்ட்ஸ்டோன் அறிக்கை குறித்து ஐ.நா. பொது மன்றத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பி.கே. ஹரிபிரசாத் ''கோல்ட்ஸ்டோன் அறிக்கை செய்துள்ள பரிந்துரைகளை முழுமையாக ஆதரிக்க முடியாது என்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இப்பிரச்னையை எடுத்துச் செல்ல வேண்டும், ஐ.நா.வின் பாதுகாப்பு அவையிலும் இதனை விவாதிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கை கூறும் நடைமுறைகளையும் ஏற்றுக்கொள்ள இயலாது'' என்றும் பேசியுள்ளார்.

கோல்ட்ஸ்டோன் அறிக்கையை ஏன் முழுமையாக ஏற்றுக் கொள்ள இயலாது என்பதற்கான காரணங்களை ஹரிபிரசாத் தனது உரையில் குறிப்பிடவில்லை. காஸா மோதல்கள் குறித்த ஐ.நா.வின் உண்மை அறியும் குழு தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த யூதரான மிகுந்த மதிப்பிற்குரிய நீதிபதி ரிச்சர்ட்; கோல்ட்ஸ்டோன் தலைமையில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த குழுவின் அறிக்கையில் தான் கண்ட பலவீனங்களையோ அல்லது அந்த குழு தேர்ந்தெடுத்துக் கொண்ட நடைமுறைகளில் உள்ள குறைகளையோ ஹரிபிரசாத் தனது உரையில் அடையாளம் காட்டவில்லை.உண்மையில் தனது தரப்பு வாதங்களை எடுத்துரைக்க இஸ்ரேலுக்கு உண்மை அறியும் குழு அளித்த வாய்ப்பை அந்த நாடு பயன்படுத்திக் கொள்ளவில்லை. இது மட்டுமின்றி விசாரணைக்காக இந்த குழுவின் உறுப்பினர்கள் இஸ்ரேலுக்குள்ளும் காஸாவிற்குள்ளும் செல்வதையும் இஸ்ரேல் தடுத்து விட்டது. இஸ்ரேல் இந்த போக்கை மேற்கொள்வதற்கான காரணம் எதையோ மறைக்க வேண்டும் என்பதற்காகவும், காஸாவில் தான் புரிந்த போர்குற்றங்கள் அம்பலமாகிவிடக் கூடாது என்பதற்காகவும் தான்.

ஹரிபிரசாத் தனது உரையில் குறிப்பிடவில்லை. தனது செயல்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்ற குழுவின் நிலைப்பாட்டை ஆதரித்த அதே வேளை இதற்காக ஐ.நா பாதுகாப்பு மன்றம் மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் இப்பிரச்னையை எடுத்துச் செல்;ல வேண்டும் என்ற குழுவின் பரிந்துரையை ஏற்க மறுத்து ஹரிபிரசாத் தனக்கு தானே முரண்பட்டுக் கொண்டார்.

கோல்ட்ஸ்டோன் அறிக்கை அளித்துள்ள பரிந்துரைகளில் இஸ்ரேலும் ஹமாஸூம் போர் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளனவா என்பது பற்றி சர்வதேச தரத்திற்கு இணையான அளவிலான விசாரணைகளை நடத்தி தொடர் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென்று கூறுகின்றது. இதனை அவர்கள் செய்ய தவறினால் பாதுகாப்பு சபை இது தொடர்பான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். தேவைப்பாட்டால் இஸ்ரேல் மற்றும் ஹமாஸின் வரம்பு மீறல்கள் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இப்பிரச்னையை எடுத்துச் செல்ல வேண்டும் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகின்றது. தனது குடிமக்கள் செய்யும் தவறுகளை சம்பந்தப்பட்ட நாடுகள் விசாரித்து தண்டிக்க மறுத்தால் குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐ.நா.வையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தையும் அணுகுவதை தவிர வேறு வழி இல்லை. எனவே போர் குற்றவாளிகளை தண்டித்து பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக செய்யப்பட்ட பரிந்துரையை இந்தியா ஏன் எதிர்க்க வேண்டும் என்று எங்களுக்கு புரியவில்லை.

குற்றவியல் விசாரணைகளின் தரத்தில் கோல்ட்ஸ்டோன் அறிக்கை அமையவில்லை என்று ஹரிபிரசாத் தனது உரையில் விவரம் தெரியாமல் குறிப்பிட்டுள்ளார். ஒரு உண்மை அறியும் குழுவிற்கும் ஒரு நீதிமன்றத்திற்கும் உள்ள வேறுபாடுகளை புரிந்துக் கொள்ளாமல் அவர் இவ்வாறு பேசியுள்ளார். விவரங்களை சேகரித்து பூர்வாங்க முடிவுகளை எடுத்து பரிந்துரைகளை செய்வது மட்டுமே உண்மை அறியும் குழுக்களின் பணியாகும். வாய்வழி மற்றும் எழுத்துபூர்வமான சாட்சிகளை விசாரித்து அதன் தரத்தை பகுபாய்வு செய்து குற்றம்சாட்டப்பட்டவர்களின் பங்கை தீர்மானிப்பதே நீதிமன்றத்தின் பணியாகும். இதனால் தான் கோல்ட்ஸ்டோன் அறிக்கை இஸ்ரேலும் ஹமாஸூம் போர்குற்றங்கள் பற்றிய புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றது. ஐ.நா.வின் விதிமுறைகள் மற்றும் சர்வதேச சட்டங்களை தொடர்ச்சியாக மீறி வரும் இஸ்ரேலை காப்பாற்றும் நோக்கத்தில் மாபெரும் ஜனநாயக நாடான இந்தியாவின் பிரதிநிதி ஒரு பொய்யான வாதத்தை ஐ.நா. மனற்த்தில் எடுத்துரைத்திருப்பது ஒரு பெரும் அவமானமாகும்.

விரிவான புலனாய்வு மற்றும் ஆழமான பகுபாய்விற்கு பிறகு காஸாவில் இருக்கும் இஸ்ரேலிய படைகள் போர் குற்றங்கள் புரிந்துள்ளன என்ற முடிவிற்கு கோல்ட்ஸ்டோன் குழு வந்துள்ளது. இஸ்ரேலிய படையினர் நான்காவது ஜெனீவா பிரகடனத்திற்கு முரணாக வேண்டுமென்றே கொலைச் செய்தல், சித்ரவதை செய்தல் போன்ற குற்றங்கள் புரிந்துள்ளனர் - சுகாதரத்திற்கு ஊறுவிளைவிக்கும் செயல்களை வேண்டுமென்றே செய்துள்ளனர் - வேண்டுமென்றே சொத்துக்களை நாசப்படுத்தியுள்ளனர் - எவ்வித இராணுவ நிர்பந்தங்களும் இல்லாமல் வேண்டுமென்றே இஸ்ரேல் இராணுவத்தினர் இக்குற்றங்களை புரிந்துள்ளனர் என்று கோல்ட்ஸ்டோன் அறிக்கை குற்றஞ்சாட்டுகின்றது. பாலஸ்தீனியர்களை பாதுகாப்பு கவசங்களாகவும் இஸ்ரேலியர்கள் பயண்படுத்தியுள்ளனர் என்றும் இது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோமா சட்டத்திற்கு முரணானது என்றும் கோல்ட்ஸ்டோன் அறிக்கை கூறுகின்றது.

மாண்புமிகு பிரதமர் அவர்களே, ஜெனீவா நடைமுறைகள்; உருவாக நமது நாடும் காரணமாக இருந்துள்;ளது. சர்வதேச மனிதாபிமான விதிகளை அனைத்து நாடுகளும் எல்லா காலக்கட்டத்திலும் மதித்து நடப்பதுடன் மட்டுமின்றி அச்சட்டங்கள் மதிக்கப்படுவதையும் கண்காணிக்க வேண்டும் என்று ஜெனீவா நடைமுறையின் முதல் விதி குறிப்பிடுகின்றது. எனவே சர்வதேச சட்டங்களை மதித்து நடக்கும் வகையில் இஸ்ரேல் நடந்துக் கொள்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை இந்தியா ஆதரிக்க வேண்டுமே அன்றி அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் இறங்க கூடாது.

சர்வதேச சட்டங்களையும் ஐ.நா.வின் தீர்மானங்களையும் மீறி செயல்பட்டதற்காக இஸ்ரேல் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை தடுப்பதின் மூலம் அந்நாடு பாலஸ்தீன் மக்கள் மீது தொடர்ந்து அராஜகம் புரிந்து அவர்களை ஒடுக்குவதை நமது நாடு உற்சாகப்படுத்துகிறது என்றே பொருள் கொள்ள வேண்டும். ஐ.நா.வின் உண்மை அறியும் குழுவிற்கு தலைமை தாங்கிய கோல்ட்ஸ்டோன் இப்பகுதியில் தொடர்ந்து அடக்குமுறை கலாச்சாரம் நீண்டகாலம் நிலவுவதாக குறிப்பிட்டுள்ளார். தனது அறிக்கையில் அவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

''போர்குற்றங்களுக்காகவும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காகவும் விசாரணைக்கு உட்பட தேவையில்லை என்ற எண்ணம் ஒரு எல்லை மீறிய நெருக்கடியான நிலைக்கு சென்றுள்ளது. நீதி நடைமுறைக்கு வழியில்லை என்ற நிலையின் காரணமாக அமைதிக்கான நடவடிக்கைகள் வெற்றிகரமாக நடைபெறும் என்ற எதிர்பார்ப்பை பின்னுக்கு தள்ளியுள்ளன. நீதியை புறந்தள்ளும் போது, அதிக மோதல்களுக்கும் வன்முறைகளுக்கும் அது அழைத்து செல்லும் என்பது தான் வரலாறு தரும் படிப்பினையாகும்.'

கோல்ட்ஸ்டோன் பின்வரும் அறிவுரையையும் தனது அறிக்கையில் குறிப்பிடுகிறார்:

'சர்வதேச சமூகம் இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள உண்மைகளை எதிர்கொள்ள வேண்டும். இப்பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் அமைதியும் பாதுகாப்பும் கிடைக்கும் வகையில் அவர்கள் அர்த்தமுள்ள அடிப்படையில் செய்லபட வேண்டும். இந்த வகையில் தான் இப்பகுதியில் வாழும் மனிதர்களின் கண்ணியத்திற்கும் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் அளிக்க இயலும்

பாலஸ்தீனப் பகுதியில் வாழும் அனைத்து தரப்பு மக்களுக்கும் அமைதியும் பாதுகாப்பும் கிடைக்க வேண்டும் என்பது நமது இந்திய அரசின் எண்ணமாக இருக்க வேண்டுமென்றால் நீதிபதி கோல்ட்ஸ்டோனின் இந்த அறிவுரையை அது செவிமடுக்க வேண்டும்.

ஐ.நா.வின் தீர்மானங்கள், அரபு அமைதி திட்டங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தான் பாலஸ்தீனப் பிரச்னைக்கு தீர்வாக அமையும் என்று இந்திய நம்புவதாக ஐ.நா.வின் பொது அமர்வில் பேசுகையில ஹரிபிரசாத் குறிப்பிட்டார். ஆனால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்திலும் கிழக்கு ஜெருசலத்திலும் நடப்பவற்றை பார்க்கும் போது அவரது வார்த்தைகள் வலுவில்லாதவையாகவும் நயவஞ்சகத்தனமாகவும் அமைந்துள்ளதை தான் உணர முடிகின்றது.

அமைதிக்கான முன்முயற்சிகளை நடைமுறைப்படுத்த இயலாத அளவிற்கு ஐ.நா.வின் பாதுகாப்பு சபை தீர்மானங்களையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஆலோசனைகளையும் அவமதிக்கும் வகையில் மேற்கு கரையை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்துள்ளதுடன் கிழக்கு ஜெருசலத்தில் இன சுத்திகரிப்பு நடவடிக்கையிலும் இஸ்ரேல் இறங்கியுள்ளது. இஸ்ரேலினால் அக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் 4 லட்சம் சியோனிசவாதிகள் வலுக்கட்டாயமாக குடியமர்ந்துள்ளார்கள்.

hஸாவில் தொடரும் பொருளாதார முட்டுக்கட்டையினால் அப்பகுதியில் வாழும் மக்கள் கடும் துன்பத்திற்கு இழக்காகியுள்ளார்கள். உணவு மற்றும் மருந்து உட்பட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இஸ்ரேல் கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. இஸ்ரேலிய படையினரால் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட வீடுகளை மீண்டும் கட்டுவதற்கு கட்டுமானப் பொருட்களை கொண்டு வருவதற்கு இஸ்ரேல் அனுமதிக்க மறுத்ததினால் காஸா மக்கள் கொட்டகைகளில் வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது. காஸாவில் இஸ்ரேல் ஏற்படுத்தியுள்ள முட்டுக்கட்டை அந்த பகுதியில் வாழும் அனைத்து மக்கள் மீது விதிக்கப்பட்டுள்ள ஒத்துமொத்த தண்டனையாக அமைந்துள்ளது. இத்தகைய நடவடிக்கையை சர்வதேச சட்டங்கள் தடைச் செய்துள்ளன. ஆனால் சர்வதேச நாடுகள் இந்த முற்றுகையை விளக்கிக் கொள்ள எவ்வித நிர்பந்தங்களையும் இஸ்ரேலுக்க ஏற்படுத்தவில்லை என்பது வருத்தமளிக்கின்றது. இச்சூழலில் கோல்ட்ஸ்டோன் அறிக்கை இஸ்ரேல் செய்துள்ள போர்குற்றங்களுக்காக அது பாதுகாப்பு சபை மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் விசாரிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளதை நமது அரசு ஆதரிக்காதது பெரும் வெட்க கேடாகும்.

பாலஸ்தீன மக்களுக்கு தொடர்ந்து ஆதரித்து வரும் போக்கிற்கு அடையாளமாக பாலஸ்தீன அகதிகளுக்கு மனிதாபிமான உதவிகளை அளித்து வரும் ஐ.நா. நிவாரண முகமைக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர்களை அளித்துள்ளதாக இந்திய பிரதிநிதி ஹரிபிரசாத் தனது உரையில் குறிப்பிட்டார். பிரதமர் அவர்களே பாலஸ்தீன மக்கள் விரும்புவது தர்மத்தை அல்ல. அவர்களுக்கு தேவை தங்கள் சொந்த தாய் மண்ணில் கண்ணயத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ்வதற்கு வழிவகுக்கும் விடுதலையும், நீதி மேலோங்கும் அமைதியும் தான்.

மாண்புமிகு பிரதமர் அவர்களே 2004ல் நீங்கள் பிரதமராக பொறுப்பேற்ற போது வெளியிடப்பட்ட குறைந்த பட்ச செயல் திட்டத்தில் பாலஸ்தீன பிரச்னை குறித்து அளிக்கப்பட்ட பின்வரும் வாக்குறுதியை இப்போது நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

பாலஸ்தீன மக்களுக்கென தனியான தாய் நாடு உருவாக வேண்டும் என்ற அவர்களது விருப்பத்தை நிறைவேற்றுவது நமது நாட்டின் நீண்ட கால வாக்குறுதியாக அமைந்துள்ளது. இந்த வாக்குறுதியை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீண்டும் உறுதி செய்கின்றது.

2009 நாடாளுமன்றத் தேர்தலுக்காக வெளியிடப்பட்ட காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில்;

நீண்டக் காலம் அவதிக்குள்ளாகியிருக்கும் பாலஸ்தீன மக்களின் நியாயபூர்வமான அமைதிபூர்வமான விருப்பங்களுக்கு இந்திய தேசிய காங்கிரஸ் எப்போது ஆதரவு தெரிவித்து வந்துள்ளது. விரைவில் பாலஸ்தீனத்தில தனி அரசு உருவாக வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த பத்தாண்டுகளில் மக்களில் கருத்துகளை அறிய எவ்வித சந்தர்ப்பமும் தராமல் இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் தலைகீழ் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நமது குடியரசை உருவாக்கிய சிற்பிகள் கடைபிடித்து வந்த அணிசேர கொள்கை மற்றும காலனி ஆதிக்கத்திற்கு எதிரான கோட்பாடுகளை நாம் கைகழுவி விட்டது போல் தோன்றுகின்றது. ஆதிக்க வெறிக் கொண்ட அமெரிக்கா மற்றும் மேற்காசியாவில் உள்ள அதன் முகவரான காலனி ஆதிக்கம் பிடித்த இஸ்ரேலுடனான நமது உறவும் தான் நமது வெளியுறவு கொள்கையை தீர்மானிப்பது போல் தோன்றுகின்றது. இத்தகைய நிலைப்பாடு மிகுந்த வருத்தத்திற்குரியது.

பிரதமர் அவர்களே கோல்ட்ஸ்டோன் அறிக்கை தொடர்பாக இந்தியா எடுத்துள்ள நிலைப்பாட்டை திருத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஐ.நா.விலும், சர்வதேச மற்றும் வட்டார அமைப்புகளிலும் வலிமையாக வலியுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். பாலஸ்தீன மக்கள் அமைப்புகள் நடத்தி வரும் இஸ்ரேலை புறக்கணிக்கும் இயக்கத்திற்கு (பி.டி.எஸ்.) இந்தியா ஆதரவு தரவேண்டுமென கோருகிpன்றேன். ஐ.நா.வின் தீர்மானங்கள் மற்றும் சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் பாலஸ்தீன பிரச்னையை தீர்த்துக் கொள்வதற்கும், காஸாவில் ஏற்படுத்தியுள்ள முட்டுகட்டையை நீக்குவதற்கு முன்வரும் வரையிலும் இஸ்ரேலுடனான ராஜ்ஜிய உறவுகளை இந்தியா துண்டித்துக் கொள்ள வேண்டுமென கோருகிறேன்.

No comments :