Sunday, November 15, 2009

தினமணியின் பார்வையில் தமிழகம் முழுவதும் டிச.6-ல் பேரணி, கண்டன ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிப்பை கண்டித்து தமுமுக சார்பில் தமிழகம் முழுவதும் டிச.6-ல் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமுமுக மாநில செயலர் கோவை உமர் தெரிவித்தார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக திருப்பூர் மாவட்ட செயற்குழுக் கூட்டம் திருப்பூரில் புதன்கிழமை நடந்தது. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாநில செயலர் கோவை உமர் பின்னர் செய்தியா ளர்களிடம் கூறியது:

பாபர் மசூதி இடிப்பு தினமான டிச.6-ல் ஆண்டு தோறும் தமுமுக சார்பில் கண்டனக்குரல் வித்தியாசமாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. பாபர் மசூதி நிலத்தை முஸ்லிம்களிடம் மத்திய அரசு ஒப்படைக்க வேண்டும்.

பாபர் மசூதி இடிப்பு தொடர்பான அறிக்கை தயார் செய்த லிபரகான் ஆணையம் இதுவரை அதை 64 முறை புதுப்பித்து தற்போது மத்திய அரசிடம் கொடுத்துள்ளது. இந்த அறிக்கை மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கிலுள்ள குற்றவாளிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி டிச.6-ல் தமிழகம் முழுவதும் பேரணியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தப் படும். திருப்பூரில் மேட்டுப்பாளையம் பஸ்நிறுத்தத்தில் தொடங்கி மாநகராட்சி அலுவலகம் வரை இப்பேரணி நடக்கும். இதைத்தொடர்ந்து மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார். நிர்வாகி ஜெய்னூலாப்தீன், மாவட்ட செயலர் நஷ்ருதீன், தலைவர் யூசுப், மனித நேய மக்கள் கட்சி மாநகர செயலர் அக்பர்அலி, மாவட்ட செ யலர் ஹாலிதீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments :