Friday, December 31, 2010

யூதர்களையும் கிறிஸ்த்துவர்களையும் பின்பற்றாதீர்


துபை மண்டல தமுமுக சார்பாக இவ்வாரம் ஜும்மா தினத்திற்கான நோட்டிஸ்

Wednesday, December 29, 2010

சட்டமன்ற தேர்தல் குறித்து செ.ஹைதர் அலி பேட்டி


தென்காசி: 27.12.2010 தமிழக சட்டசபைத் தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம் தெரிவித்துள்ளது.

தமுமுக பொது செயலாளர் ஹைதர் அலி தென்காசியில் நிருபர்களிடம் பேசுகையில்,

முக்கிய சுற்றுலா தலமான குற்றாலத்திற்கு செல்ல ரிங் ரோடு சரியாக இல்லை. தென்காசி மருத்துவமனையில் மருத்துவர்கள் நியமிக்க வேண்டும்.

தற்போது வக்பு வாரியத்தின் சார்பில் மருத்துவ கல்லூரி அமைக்க முன்வந்திருப்பதை வரவேற்கிறோம். தமிழகத்தில் நாங்கள் போட்டியிட வாய்ப்புள்ள தொகுதியாக 25 தொகுதிகளை கண்டறிந்துள்ளோம். அதில் கடையநல்லூர், பாளை தொகுதிகளும் அடங்கும்.

ஆனால் எத்தனை தொகுதி, எந்தெந்த தொகுதிகள் என்பது கூட்டணி தலைமைதான் முடிவு செய்யும் என்றார் அவர்.

அச்சன்புதூரில் தமுமுகவின் பொதுக்கூட்டம்



திருநெல்வேலி மாவட்டம் அச்சன்புதூரில் (26.12.2010) அன்று தமுமுகவின் எழுச்சிப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்திற்கு கிளைத்தலைவர் எம். பீர் மைன் தலைமை தாங்கினார்.

தமுமுகவின் பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி சிறப்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் எஸ். மைதீன் சேட்கான், மாவட்டச் செயலாளர் நயினார் முகம்மது, மாவட்டப் பொருளாளர் சுல்தான் மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தப் பொதுக்கூட்டத்தில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

அரசு அளித்துள்ள நிவாரணம் போதாது - ஜவாஹிருல்லா


பெரியபட்டினம் படகு விபத்தில் பலியானவர்களுக்கு அரசு அளித்துள்ள நிவாரணம் போதாது,'' என மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.

ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது: பெரியபட்டினம் விபத்துக்கு மாவட்ட நிர்வாகமே முழுப்பொறுப்பாகும். மீனவர்கள் தான் அனைவரையும் மீட்டுள்ளனர். இந்த விசயத்தில் அரசு இயந்திரம் செயல் இழந்துவிட்டது. இறந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியிருப்பது போதாது. தலா ஐந்து லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை திருப்தியளிப்பதாக உள்ளது. குற்றசாட்டுகள் வரும் போது அதில் பாரபட்சம் தேவையில்லை. தேவைபட்டால் கருணாநிதியின் குடும்பத்தாரிடமும் விசாரணை நடத்தலாம். அ.தி.மு.க., கூட்டணியில் எங்களுக்கு சாதகமாக கருதப்படும் தொகுதிகளை கேட்போம், என்றார்.

-தினமலர்-

Monday, December 27, 2010

பெரியபட்டினம் படகு விபத்து 6ஆம்புலென்சுகளுடன் தமுமுக நிவாரணப் பணி


ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் டிசம்பர் 26 அன்று நடந்த படகு விபத்தில் 16பேர் உயிரிழந்த செய்தி கேட்டு வேதனை அடைந்தோம். இறந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற செய்தி எங்கள் வேதனையை அதிகப்படுத்துகிறது.உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.



விபத்துப் பற்றிய செய்தி அறிந்து உடனே 6ஆம்புலென்சுகளுடன் அங்குச் சென்று நிவாரணப் பணிகளை இராமநாதபுரம் (கிழக்கு) தமுமுக செய்துள்ளது.

அப்பகுதி பவளப்பாறைகள் நிறைந்த பகுதி என்பதால், பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும், கடலோர காவல் படையின் கண்காணிப்புக்கு உட்பட்ட பகுதியாகவும் இருக்கிறது.

இச்சூழலில், அனுமதியின்றி அருகில் உள்ள அப்பா தீவுக்கு சுற்றுலா செல்ல மக்களை அனுமதித்தது எப்படி என்ற கேள்விக்கு உரியவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

மேலும் உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருந்த பலர், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில்,போதிய முதலுதவி கிடைக்காததால் உயிரிழந்துள்ளனர். மாவட்ட நிர்வாகத்திற்கு விபத்து பற்றிய செய்தி உடனடியாக தெரிவி்க்கபட்டப் போதினும் அரசின் மருத்துவ மற்றும் மீட்புக் குழு தாமதமாகவே சம்பவ இடத்திற்கு வந்துள்ளது. உரிய நேரத்தில் மருத்துவ குழு அங்கு வந்து முதலுதவி செய்திருந்தால் பல உயிர்களை காப்பற்றியிருக்கலாம்.

தமிழக அரசு இந்த விபத்தில் உயிர் இழந்த 15பேர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாயும் காயமடைந்தோருக்கு ரூ1 இலட்சம் இழப்பீடு தொகையும் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்
.

பெரியபட்டிணம் அருகே படகு கடலில் மூழ்கி 16 பேர் பலி



ராமநாதபுரம்.26:ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள பெரியபட்டணம் பகுதியைச் சேர்ந்த சிலர் கடலில் உள்ள தீவுக்கு படகுகளில் சென்றபோது ஒரு படகு கவிழ்ந்தது. இதில் 12 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 17 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

கீழ்க்கரே அருகே உள்ளது பெரியபட்டணம். இங்குள்ள மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு வசிக்கும் அனைவருமே முஸ்லீம் சமுதாயத்தினர் ஆவர்.தற்போது விடுமுறைக்காக வெளிநாடுகளிலிருந்து ஊர் திரும்பியிருந்தனர். இந்த நிலையில், சீனி உருது என்பவரது குடும்பத்தினரும், ஆஸ்திரேலியாவில் இருந்து கடந்த வாரம் வந்திருந்த அவரது உறவினர்களும் சுற்றுலா செல்ல திட்டமிட்டனர்.

இன்று காலை அவர்கள் 2 மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளில் பெரிய
பட்டிணத்திலிருந்து 7 கடல் மைல் தூரத்தில் உள்ள அப்பா தீவு மற்றும் முள்ளித்
தீவுக்குப் புறப்பட்டனர். ஒரு படகில் ஆண்கள் 20 பேரும் மற்றொரு படகில் குழந்தைகள் உள்பட பெண்கள் 20 பேரும் சென்று கொண்டிருந்தனர்.
தீவுக்கு சற்று தொலைவில் ஆண்கள் பயணித்த படகு சென்றபோது பின்னால் பெண்கள் வந்த படகை காணவில்லை. அந்த படகை தேடியபோது, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தென்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் பெரியபட்டிணத்தில் உள்ள தங்களது உறவினர்கள் மற்றும்
மீனவர்களுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சுமார் 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் புறப்பட்டனர். தீவை ஒட்டியுள்ள 4 பகுதிகளுக்கும் தனித்தனியாக பிரிந்து சென்ற அவர்கள் மாயமான படகை தேடினர்.

இந்த தகவல் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஹரிகரனுக்கும் தெரிவிக்கப்பட்டது. உடனே கடலோர காவல்படையினர் மற்றும் கடற்படை வீரர்கள் தேடும் பணியை தீவிரப்படுத்தினர். மாயமான படகை தேடும் பணியில் ஹெலி காப்டரும், அதிநவீன ஹோவர் கிராப்ட் படகும்
ஈடுபடுத்தப்பட்டது.இதற்கிடையே மாயமான படகு பலத்த காற்று காரணமாக நடுக்கடலில் மூழ்கியது. அந்த பகுதிக்கு கடற்படையினர் விரைந்தனர். கடலில் மூழ்கி பிணமாக மிதந்த பரக்கத் (36), ஹபீப்நிஷா (38) உள்பட 9 பேரின் உடல்களை மீட்டனர்.மேலும் நடுக்கடலில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 2 குழந்தைகள் உள்பட 11 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு 3 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.
அவர்கள் அனைவரும் பெண்கள். மீட்கப்பட்ட 8 பேருக்கும் தீவிர சிகிச்சை
அளிக்கப்படுகிறது.கடலில் படகு மூழ்கிய தகவல் கிடைத்ததும் பெரிய பட்டிணத்தை சேர்ந்தவர்கள் கடற்கரைக்கு திரண்டு வந்தனர். உரிய அனுமதி இல்லாமல் இவ்வாறு சுற்றுலாப் பயணிகளை சட்டவிரோதமாக
யார் கடலுக்குள் அழைத்துச் சென்றது என்பது குறித்து விசாரித்து வருவதாக கடலோரக் காவல் படையின் டிஎஸ்பி தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தால் பெரியபட்டணம் பகுதி பெரும் சோகமயமாக காணப்படுகிறது.

Friday, December 24, 2010

தொண்டியில் இலவச கண் சிகிச்சை முகாம்

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, தமுமுக மற்றும் ம.ம.க இணைந்து தொண்டியில் டிசம்பர் 4 அன்று நகர தமுமுக தலைவர் முகம்மது சாதிக் தலைமையில் தலைமையில் நடைபெற்றது.
முகாமில் சுமார் 250-க்கும் மேற்பட்டோருக்கு பயனடைந்தனர். 25க்கும் மேற்பட்டவர்கள் 42 பேர் கண்புரை அறுவைச் சிகிச்சைக்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் தமுமுக,மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

புதுவலசையில் இலவச கண் சிகிச்சை முகாம்


ராமநாதபுரம் மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி ஆகியன இணைந்து புதுவலசை கிராமத்தில் அரபி ஒலியுல்லா பள்ளி வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின. இந்த முகாமிற்கு ம.ம.க மாவட்டச் செயலாளர் எஸ். சலிமுல்லாகான் தலைமையில் 11.12.2010 அன்று நடைபெற்றது. புதுவலசை ஜமாஅத் தலைவர் ஷேக் முகம்மது, செயலாளர் ஜகுபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.டாக்டர் சந்தீப்குமார், டாக்டர் பூஜா ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் முகாமில் சுமார் 300-க்கும் மேற்பட்டோருக்கு இலவச கண் சிகிச்சையளித்தனர்.

42 பேர் கண்புரை அறுவைச் சிகிச்சைக்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தேவிபட்டிணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜூ, ஊராட்சி மன்றத் தலைவர் ஆயிசாமரியம், அரபி ஒலியுல்லா பள்ளியின் தாளாளர் லியாகத் அலிகான் மற்றும் தமுமுக,மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

Wednesday, December 22, 2010

பள்ளப்பட்டி:அநீதிக்கு எதிராக வெகுண்டெழுந்த சமுதாயம்!

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஊராகும். இந்தப் பகுதியை சில சமூகவிரோதிகள் விபச்சார பகுதியாக் கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களைக் கையும் களவுமாகப் பிடிக்க பள்ளப்பட்டி மக்கள் காத்திருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளப்பட்டி அதிமுக நகர செயலாளர் அபுதாஹிர், ஒரு குடும்பப் பெண்ணுடன் தொடர்ந்து தகாத உறவு வைத்திருந்தது நேரடியாக பெண் வீட்டாரால் கண்டுபிடிக்கப்பட்டு கையும் களவுமாக பிடிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து பெண் வீட்டாரால் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரம் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடந்த 12.12.2010 இரவு சுமார் 9 மணியளவில் சந்தேகத்திற்கு இடமாக இரண்டு பெண்கள் பிடிபட்டனர். அவர்களிடம் பொதுமக்கள் விசாரித்த போது, தகாத உறவுக்காக (விபச்சாரத்திற்காக) அதிமுக நகர செயலாளருக்காக வந்ததாக ஒப்புக் கொண்டனர். மேலும் ஷாஜஹான், கண்ணன் ஆகியோர்தான் தங்களை இந்தத் தொழிலில் ஈடுபடுத்தினர் என்றும் கூறியுள்ளனர்.

இதில் ஷாஜஹான் என்ற நபர் தற்போது ஊரில் இல்லாத நிலையில் பொதுமக்களின் கோபம் கண்ணன் மேல் திரும்பியது. கண்ணன் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த நபர். இவர் பள்ளப்பட்டி பேருந்து நிலையம் அருகே ‘கௌரி மெஸ்’ என்ற பெயரில் வியாபாரம் செய்து வருகிறார். கடையின் பின்புறம் கண்ணனின் குடும்பம் உள்ளது.



பொதுமக்கள் கண்ணனின் வீட்டை முற்றுகையிட முயன்ற போது பள்ளப்பட்டி பேரூராட்சித் தலைவரும், சமுதாய நலன் விரும்பிகளும் அவர்களைத் தடுத்துள்ளனர். இந்நிலையில் டி.எஸ்.பி. தலைமையிலான போலீசார் கண்ணனைக் கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.

மறுதினம் 13.12.2010 அன்று இது சம்பந்தமாக, பள்ளப்பட்டி உலமாக்கள் சபை மற்றும் முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் அழைப் பின் பேரில் அனைத்து இயக்கங்களும் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தின் முடிவில், தவறான பாதையில் பிடிபட்ட பெண்களை ஜமாஅத் மூலமாக நடவடிக்கை எடுப்பது என்றும், அந்தப் பெண்களிடம் தகாத நட்பை வைத்திருந்த நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

மேற்கண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக் கும் போதே பொதுமக்களில் சிலர் அதிமுக நகர செயலாளர் அபுதாஹிரின் மருந்துக்கடையையும், அதன் அருகே உள்ள அதிமுக அலுவலகத்தையும் தாக்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டது. அப்போது அத்தெரு வழியாகச் சென்றுகொண்டிருந்த முஹம்மது ஹக்கீம், இக்பால் ஆகிய இரண்டு தமுமுக உறுப்பினர்களை போலீசார் பிடித்துச் சென்றுள்ளனர்.
இத்தகவல் அறிந்தவுடன் தமுமுக நிர்வாகிகள் காவல் நிலையம் சென்றனர். அங்கு ஆய்வாளர் இல்லாத நிலையில் அவருடன் செல்பேசியில் தொடர்பு கொண்டு தமுமுக உறுப்பினர்களை விடுவிக்கும்படி வலியுறுத்தினர். இரண்டு பேரையும் விசார ணைக்காக அழைத்து வந்ததாகவும், அவர்களை விடுவித்து விடுவோம் என்றும் ஆய்வாளர் கூறியுள்ளார்.

இந்நிலையில் நள்ளிரவில் போலீசார் பொதுமக்களின் வீடுகளுக்குள் புகுந்து ஐந்து பேரை பிடித்துச் சென்றனர். மேலும் பலரைக் கைது செய்யும் முயற்சியில் இறங்கினர்.

இதையடுத்து பள்ளப்பட்டி தமுமுக நிர்வாகிகள் கரூர் மாவட்ட தமுமுக பொறுப் பாளரும் மாநில துணைச் செயலாளருமான கோவை சாதிக் அவர்களை தொடர்பு கொண்டு சம்பவங்கள் குறித்து விரிவாகக் கூறினர். மாநில துணைச் செயலாளர், பொதுமக்களைத் திரட்டி சாலை மறியல் போராட்டத்தில் இறங்குமாறு கேட்டுக் கொண்டார்.



இதையடுத்து 14.12.2010 அன்று காலை 11 மணிக்கு மறியல் போராட்டம் நடத்த தமுமுக நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர். மேலும் முழு அடைப்பு போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்தனர்.

இதையடுத்து தமுமுக போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கும் விதமாக பள்ளப்பட்டி பொதுமக்கள், பள்ளப்பட்டியின் வரலாற்றில் முதல் முறையாக அனைத்து கடைகளையும் அடைத்தனர். பள்ளப்பட்டியில் தமுமுக நிர்வாகிகள் தலைமையிலான சாலை மறியல் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

முழு அடைப்பு போராட்டத்தையும், சாலை மறியல் போராட்டத்தையும் கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறை, நள்ளிரவில் கைது செய்த ஐந்து நபர்களையும் உடனடியாக விடுதலை செய்தது. தமுமுக உறுப்பினர்களை விடுதலை செய்வதாக உறுதியளித்தது.

இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர். ஆனால், சாலை மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த தமுமுக நிர்வாகிகள் மீது கோபடைந்த காவல்துறை அதிகாரிகள், விசாரணைக்காக அழைத்துச் சென்றிருந்த முஹம்மது ஹக்கீம் மற்றும் இக்பால் ஆகிய இருவர் மீதும், இந்து முன்னணியைச் சேர்ந்த கண்ணன் வீட்டை தாக்கியதாகவும், பொதுச் சொத்தை சேதப்படுத்தியதாகவும் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

சிறைப்பட்ட இருவரையும் ஜாமீனில் எடுப்பதற்கான பணிகளில் தற்போது பள்ளப்பட்டி தமுமுக நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.

Tuesday, December 21, 2010

அபுதாபி சனையாவில்- தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக புதிய நிர்வாகம

10-12-2010 அன்று அபுதாபி சனையாவில் த மு மு க புதிய நிர்வாகிகள் தேர்வு மண்டல செயலாளர் சகோ.கீழை.இர்பான் தலைமையில் நடைபெற்றது அதில் புதிய நிர்வாகம்அமைக்கபட்டது.

தலைவர் : பீர் முஹம்மது – வாலி நோக்கம்

செயலாளர் : கே.எஸ். நஜ்முதீன்-சென்னை

பொருளாளர் : அப்துல் ரகுமான் - மண்டபம்

துணைச்செயலாளர் : இஸ்மாயில்-திருநெல்வேலி

துணைச்செயலாளர்: சாகுல்- சென்னை

செயல் குழு உறுப்பினர்கள் : முஹம்மது சல்மான்- இளையான்குடி , இப்ராகிம் பாதுஷா- தென்காசி, சுபைர் அலி- அத்திஉத்து

மக்கள் தொடர்பாளர் : இம்ரான்-மேலப்பாளையம்

தேர்தல் அதிகாரிகளாக அபுதாபி நகர தலைவர் தோப்புத்துறை ரசூல் முஹம்மது மற்றும் சகோ.உஸ்மான் ஆகியோர் பணியாற்றினார், அதனை தொடர்ந்து வாரந்திர பயான் நடைபெற்றது.

Wednesday, December 15, 2010

முதுகுளத்தூர் த.மு.மு.க., கூட்டம்

முதுகுளத்தூர்: முதுகுளத்தூரில் த.மு.மு.க., மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ஒன்றிய தலைவர் நசிம் தலைமையில் நடந்தது. ஏர்வாடியில் தெருக்களில் ரோடு, குடிநீர், தெருவிளக்கு, கழிவுநீர் வாய்க்கால் உட்பட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர பலமுறை முறையீடு செய்தும், நடவடிக்கை எடுக்காததால், டிச. 25 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. மாவட்ட தலைவர் சம்சுதீன்சேட், செயலாளர் சகுபர்சாதிக், துணை செயலாளர் அஜிஸ்கனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முஸ்லிம்களை இழிவுபடுத்திய காவல்துறையை கண்டித்து தமுமுக ஆர்ப்பாட்டம்


திவிரவாதிகள் தாக்குதலில் இருந்து போலீசார் எவ்வாறு பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து திண்டுக்கல்லில் போலீசார் ஒத்திகை நடத்தும் நிகழ்ச்சி டிசம்பர் 09, 2010 அன்று நடந்தது. திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவது போலவும், தபால் நிலையத்தில் பதுங்கிக் கொள்வது போலவும் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் தீவிரவாதி களாக சித்தரிக்கப்பட்டவர்கள் தாடி வைத்த முஸ்லிம்கள் போன்ற தோற்றத்தை போலீசார் அமைத்திருந்தனர். இந்த செய்தி மறுதினம் புகைப்படத்துடன் வெளிவந்தது. புகைப்படத்தைப் பார்த்த முஸ்லிம்கள் கடும் கொந்தளிப்புக்கு ஆளாயினர். போலீசாரின் ஒத்திகை நிகழ்ச்சி தங்களை அவமானப்படுத்துவது போல் இருப்பதாக கூறி, திண்டுக்கல் பேகம்பூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புகளைச் சேர்ந்தவர்கர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். திண்டுக்கல்-மதுரை சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், போலீசாரைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

உயர் அதிகாரிகள் வருத்தம்

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சந்திரன், முருகன் ஆகியோர் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன் பாடு ஏற்பட வில்லை. போலீஸ் உயர் அதிகாரிகள் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பொன்.சிவானந்தம், நகர போலீஸ் துணை சூப்பிரண்டு ராமமூர்த்தி ஆகியோர் வந்து சமரசம் செய்தனர். இறுதியில் போலீஸ் தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

திண்டுக்கல் மதுரை சாலையில் சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சாலை மறியலால், போக்குவரத்து பாதிக்கப் பட்டது. மதுரை செல்லும் வாகனங் கள், திண்டுக்கல்லுக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. மறியல் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து வாகன போக்குவரத்து தொடங் கியது.

தமிழக காவல்துறையின் இந்த செயலுக்கு தமுமுக தலைவர் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது..

“தீவிரவாதிகளைப் பிடிப்பதற்காக காவல் துறையினருக்கு அளிக்கப்படும் பயிற்சி செயல்பாட்டில் தீவிரவாதிகளை இஸ்லாமிய அடையாளங்களுடன் காட்டி தி.மு.க. அரசின் காவல்துறைக் கொச்சைப்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லில், தீவிரவாதிகளை வேட்டை யாடுவதாக போலீசார் நடத்திய பயிற்சி செயல்பாட்டில் போலி தீவிரவாதி களைத் காவல்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்த செய்தி பத்திரிகைகளில் படத்துடன் வெளிவந் துள்ளது.

போலியாகப் போலீசார் உருவாக்கிய தீவிரவாதி களுக்கு இஸ்லாத்தில் வலியுறுத்தப் பட்ட நபிவழியான தாடியை வேண்டுமென்றே ஒட்ட வைத்து இஸ்லாமிய அடையாளங்களுடன் அவர்களை சித்தரித்திருப்பது முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டும், பாசிச சக்திகளின் திட்டத்தை தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுக அரசு நிறைவேற்றுவதாகவே அமைகிறது.


சீக்கியர்களுக்கு டர்பனும், பிராமணர் களுக்குப் பூணூலும், கிறிஸ்தவர்களுக்கு சிலுவையும், பெரியார் இயக்கத்தினருக்குக் கருஞ்சட்டையும் அடையாளங்களாக இருப்பது போல முஸ்லிம் ஆண்களுக்குத் தாடி ஒரு மார்க்க அடையாளமாகும். அதை கொச்சைப்படுத்தும் வகையில் தீவிரவாதிகள் எல்லோரும் தாடிகளோடு இருப்பது போல, ஓட்டுத்தாடியை வைக்கச் செய்து பத்திரிகை களில் பிரசுரிப்பது முஸ்லிம்களின் உணர் வுகளைப் புண்படுத்தும் செயலாகும்.

உண்மைக் குற்றவாளிகளை மத அடையாளங்களோடும், மதத்தோடும் சம்பந் தப் படுத்துவதே சமூக நல்லிணக்கத்தற்கு ஊறு விளைவிக்கும் செயலாகும். போலித் தீவிரவாதிகளுக்கு, இஸ்லாம் மார்க்க அடையாளங்களை காட்டுவது தமிழகத்தில் நிலவிவரும் சமூக நல்லிணக்கத்தைக் கெடுக் கும் செயல் என்பதில் அய்யமில்லை. காவல்துறையைத் தன் கையில் வைத்துள்ள முதல்வர் கலைஞருக்கு சமூக நல்லிணக்க நாயகன் விருதை முஸ்லிம் லீக் கட்சி தான் நடத்தும் மாநாட்டில் கொடுப்ப தாக அறிவித்துள்ளது. முஸ்லிம்களைத் தீவரவாதிகளாகக் காட்டுவது தான் சமூக நல்லிணக்கத்தை வளர்க்கும் செயலா?

தமிழக அரசின் காவல்துறை முஸ்லிம் களைத் தீவிரவாதிகளாகக் காட்டியுள் ளதற்கு தமுமுக வன்மையான கண்டனத் தைத் தெரிவிக்கிறது. உடனடியாக தமிழக அரசு முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்பதுடன் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோருகின்றது.”மேற்கண்டவாறு தனது அறிக்கையில் தமுமுக தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Monday, December 13, 2010

முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் கொச்சைபடுத்தும் தி.மு.க. அரசு – தமுமுக கடும் கண்டனம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் கண்டன அறிக்கை:

தீவிரவாதிகளைப் பிடிப்பதற்காக காவல்துறையினருக்கு அளிக்கப்படும் பயிற்சி செயல்பாட்டில் தீவிரவாதிகளை இஸ்லாமிய அடையாளங்களுடன் காட்டி தி.மு.க. அரசின் காவல்துறைக் கொச்சைப்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லில், தீவிரவாதிகளை வேட்டையாடுவதாக நேற்று (09.12.10) போலீசார் நடத்திய பயிற்சி செயல்பாட்டில் போலி தீவிரவாதிகளைத் காவல்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்த செய்தி பத்திரிகைகளில் படத்துடன் வெளிவந்துள்ளது.


போலியாகப் போலீசார் உருவாக்கிய தீவிரவாதிகளுக்கு இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்ட நபிவழியான தாடியை வேண்டுமென்றே ஒட்ட வைத்து இஸ்லாமிய அடையாளங்களுடன் அவர்களை சித்திரித்திருப்பது முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டும், பாசிச சக்திகளின் திட்டத்தை தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுக அரசு நிறைவேற்றுவதாகவே அமைகிறது.


சீக்கியர்களுக்கு டர்பனும், பிராமணர்களுக்குப் பூணூலும், கிறிஸ்தவர்களுக்கு சிலுவையும், பெரியார் இயக்கத்தினருக்குக் கருஞ்சட்டையும் அடையாளங்களாக இருப்பதுபோல முஸ்லிம் ஆண்களுக்குத் தாடி ஒரு மார்க்க அடையாளமாகும். அதை கொச்சைப்படுத்தும் வகையில் தீவிரவாதிகள் எல்லோரும் தாடிகளோடு இருப்பது போல, ஓட்டுத்தாடியை வைக்க செய்து பத்திரிகைகளில் பிரசுரிப்பது முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் செயலாகும்.


உண்மைக் குற்றவாளிகளை மத அடையாளங்களோடும், மதத்தோடும் சம்பந்தப்படுத்துவதே சமூக நல்லிணக்கத்தற்கு ஊறு விளைவிக்கும் செயலாகும். போலித் தீவிரவாதிகளுக்கு, இஸ்லாம் மார்க்க அடையாளங்களை காட்டுவது தமிழகத்தில் நிலவிவரும் சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கும் செயல் என்பதில் அய்யமில்லை. காவல்துறையைத் தன் கையில் வைத்துள்ள முதல்வர் கலைஞருக்கு சமூக நல்லிணக்க நாயகன் விருதை முஸ்லிம் லீக் கட்சி தான் நடத்தும் மாநாட்டில் கொடுப்பதாக அறிவித்துள்ளது. முஸ்லிம்களைத் தீவரவாதிகளாகக் காட்டுவது தான் சமூக நல்லிணக்கத்தை வளர்க்கும் செயலா?


தமிழக அரசின் காவல்துறை முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டியுள்ளதற்கு தமுமுக வன்மையானக் கண்டனத்தைத் தெரிவிக்கிறது. உடனடியாக தமிழக அரசு முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்பதுடன் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோருகின்றது.

Tuesday, December 7, 2010

கீழக்கரை தமுமுக சார்பாக பெரியபட்டணம் தமுமுக க்கு பிரிகேர் பாக்ஸ் வழங்கப்பட்டன

5/12/2010 அன்று கீழக்கரை தமுமுக சார்பாக பெரியபட்டணம் தமுமுக க்கு பிரிகேர் பாக்ஸ் வழங்கப்பட்டன. இன் நிகழ்ச்சிக்கு தமுமுகவின் மாநிலச் செயலாளர் கோவை செய்யது தலைமை வகித்தனர், த.மு.மு.க., மாவட்ட தலைவர் சலிமுல்லாகான் மற்றும் கீழக்கரை நகர் தமுமுக நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

பரமக்குடி, டிச. 6: த.மு.மு.க., ம.ம.க தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்

பரமக்குடி, டிச. 6: பரமக்குடி ஐந்துமுனை சந்திப்பில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி சார்பில், பாபர் மசூதி இடிப்பைக் கண்டித்து தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட தலைவர் மு.சம்சுதீன் தலைமை வகித்தார். மனித நேய மக்கள் கட்சி நகர் செயலாளர் அப்துல்லா சேட், எஸ்.தாஜ் மஹம்மது, ஏ.சகுபர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். த.மு.மு.க மாவட்ட செயலாளர் சகுபர் சாதிக் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தை அப்துல் ஹக்கீம் தொடக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து டி.ஐ.பி. மாநில செயலாளர் பூ.சந்திரபோஸ், மராக்சிய கம்யூனிஸ்ட் கட்சி ராஜ்குமார், காசிநாததுரை, த.மு.மு.க மாநில பேச்சாளர் வாணி சித்திக் ஆகியோர் பேசினர்.
பாபர் மசூதி வழக்கில் லிபரான் கமிஷன் சுட்டிக்காட்டிய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இந்த வழக்கு நடைபெறும் ராய் பரேலி நீதிமன்ற விசாரணைகளை விரைவுபடுத்தக்கோரியும், பாபர் மசூதி நிலம் தொடர்பான தீர்ப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் விரைந்து தீர்ப்பு வழங்கக் கோரியும், பரமக்குடி நகர் மத்தியில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா மற்றும் உழவர் சந்தைப் பகுதியில் கொட்டப்படும் நகராட்சி கழிவுகளை அகற்றக் கோரியும், மழையால் சேதமடைந்த அனைத்து சாலைகளையும் உடனடியாக செப்பனிடக் கோரியும், நகர் பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றி சுகாதார சீர்கேட்டை தவிர்க்கக் கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட துணைத் தலைவர் அப்பாஸ், துணைச் செயலாளர் இலியாஸ், மாவட்ட ம.ம.க. செயலாளர் ஜபருல்லா, மருத்துவ அணி செயலர் எஸ்.சேக் அப்துல்லா உள்பட நகர் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். நகர் தலைவர் அகமது கபீர் நன்றி கூறினார்.

ராமநாதபுரம் த.மு.மு.க. தொடர் முழக்கப் போராட்டம்

ராமநாதபுரம், டிச. 6: பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமநாதபுரத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திங்கள்கிழமை 3 மணி நேர தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன் நடைபெற்ற போராட்டத்திற்கு, தமுமுகவின் மாவட்ட தலைவர் எஸ்.சலிமுல்லா கான் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சாதிக் பாட்சா, மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் அன்வர் அலி, மாவட்டப் பொருளாளர் சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமுமுகவின் மாநிலச் செயலாளர் கோவை செய்யது, போராட்டத்திற்கான காரணங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.
தொடர் முழக்கப் போராட்டத்தில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் இரா.ஞானவாசகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் முருகபூபதி, மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் பாலகிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர் அஜ்மல் கான், துணைச் செயலாளர் பீர் முகம்மது ஆகியோர் உள்பட அமைப்பின் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளை கைது செய்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக ராய் பரேலி நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கை விரைந்து முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும், அலாகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பின் மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் விரைவாக விசாரித்து நியாயமான தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
ஏற்பாடுகளை தமுமுக மாவட்ட செய்தி தொடர்பாளர் பாபு மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Thursday, December 2, 2010

பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 ஆம் தேதி பாளையங்கோட்டையில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி, நவ. 29: பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 ஆம் தேதி பாளையங்கோட்டையில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்த, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் முடிவு செய்துள்ளது. பாளையங்கோட்டையில் தமுமுக செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஏ. மைதீன் பாரூக் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் கே.எஸ். காசீம் பிர்தவ்ஸி, மனித நேய மக்கள் கட்சி மாவட்டச் செயலர் கே.எஸ். ரசூல் மைதீன், பொருளர் ஏ.ஆர். சர்தார் அலிகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: அரசு போக்குவரத்துக் கழகத்தில் தொழில்நுட்பப் பணியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிகளுக்கு, பெண் மருத்துவர்களே ஸ்கேன் எடுக்க வேண்டும். திருநெல்வேலி மாநகராட்சியில் நிலவிவரும் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் தேவையான மின் விளக்கு, சாலை வசதி, கணினி முன்பதிவு ஆகிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் உள்ள சிறுவர் பூங்காவை சீரமைக்க வேண்டும். மழையினால் சேதமடைந்த சாலைகளை உடனே செப்பனிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாவட்ட துணைத் தலைவர் காஜா அலாவுதீன், துணைச் செயலர்கள் செய்யது, முஜிப், மைதீன், மருத்துவ சேவை அணி செயலர் சேக் மைதீன், தொண்டரணி அப்பாஸ், இளைஞரணிச் செயலர் ஜமால், மனிதநேய வணிகர் சங்கச் செயலர் லியாவுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நன்றி : தினமணி

இந்தவாரம் ஷார்ஜா தமுமுக மர்க்கஸீல்