Thursday, April 25, 2013

தமிழகமெங்கும் பாஸ்போர்ட் விசாரணைக்கு 'பெண்கள் காவல் நிலையம் செல்லத் தேவை இல்லை' - ஜவாஹிருல்லாஹ் M.L.A கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் உத்தரவு !

கீழக்கரை நகர், முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியாக இருப்பதால், பெண்கள் வெளி இடங்களுக்கு செல்வது மிகக் குறைவானதே. ஆனால் பாஸ்போர்ட் எடுப்பதற்காக விண்ணப்பிக்கும், அனைத்து இஸ்லாமிய பெண்களும், குழந்தைகளும், விசாரணை என்கிற பெயரில் காவல் நிலையம் சென்று கையெழுத்திட வேண்டிய சூழல் இருந்து வந்தது. இதனால் அவர்கள் பெரும் அவதிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி வந்தனர். இந்த காவல் துறையினரின் நடை முறையை மாற்றி அமைக்க, யாராவது குரல் கொடுக்க மாட்டார்களா ? என்ற ஆதங்கம்... கீழக்கரை மக்களிடையே வெகு காலமாக இருந்து வந்தது. 

இந் நிலையில் தமிழ்நாடு சட்ட பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் காவல் துறை மற்றும் தீயணைப்பு துறை மானியக் கோரிக்கையின் கூட்டம் நேற்று (23.04.2013) நடை பெற்றது. அந்த நிகழ்வில்  பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்தி, மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவரும், இராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினருமான பேராசிரியர். எம். எச் ஜவாஹிருல்லா அவர்கள் பேசினார்.


 பேராசிரியர் அவர்களின் உரையும் மாண்புமிகு முதலமைச்சரின் பதிலும்

காவல் துறையில் முஸ்லீம்களை கூடுதலாக சேர்ப்பது சம்பந்தமாக :

பேராசிரியர் அவர்கள் : சிறுபான்மையின மக்கள் மீது மிகுந்த அக்கறை உள்ள  இந்த அரசாங்கத்திடம்  மிக முக்கியமான கோரிக்கையை நான் வைக்க விரும்புகிறேன். தமிழகத்தில் 2001 ல் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் படி முஸ்லிம்களுடைய மக்கள் தொகை 5.6 சதவிகிதம் என்று சொல்லப்படுகிறது ஆனால் தமிழக காவல் துறையில் முஸ்லிம்கள் 1 சதவிததிற்கும் குறைவாகத் தான் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதை சரிக் கட்டுவதற்கு முஸ்லிம்களுடைய பங்களிப்பு காவல் துறையில் அதிகப்படுத்துவதற்கு இந்த அரசு சிறப்பான முறையிலே நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

காவல் துறையினரால் பதியப்பட்ட சிறு வழக்குகளில் சிக்கி இருக்கும் முஸ்லீம் மக்கள், பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது ஏற்படும் இடையூறுகளை களைவது சம்பந்தமாக :

பேராசிரியர் அவர்கள் : தமிழகத்திலே, முஸ்லிம் இளைஞர்கள் கடவுச் சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது அதற்கான விசாரணைகளை காவல் துறையினுடைய சிறப்புப் பிரிவு மேற்கொள்கின்றது. அதிலே பல இடங்களிலே, பல்வேறு வகையான இடையூறுகள் ஏற்படுகின்றது. உதாரணமாக, சொல்ல வேண்டுமென்றால் 107 சி.ஆர்.பி.சி. போன்ற வழக்குகள், அது குற்ற வழக்கே இல்லை ஆனால் காவல் ஆய்வாளர் ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக செய்யக் கூடிய நடவடிக்கையாகும். 

அப்படி 107 சி.ஆர்.பி.சி. இருந்தாலும் கூட அந்த பாஸ்போர்ட் விசாரணை நீடிக்கப்பட்டு பாஸ்போர்ட் கிடைக்காத ஒரு சூழல் ஏற்பட்டிருக்கின்றது. அதை போல் ஒரு குற்றம் செய்தததாக கருதப்பட்டு, கைது செய்யப்பட்டு, வழக்கு நடைபெற்று,விடுதலையானப் பிறகும் கூட அப்படிப்பட்டவர்கள் பாஸ்பார்ட்க்கு விண்ணப்பம் செய்யும் போது கூட,அவர்களுக்கு அந்த விசாரணையிலே தடைகள் ஏற்பட்டு இருக்கக்கூடிய சூழலைப் பார்கின்றோம்.
காவல் நிலையத்திற்கு பாஸ்போர்ட் விசாரணைக்காக பெண்களை அழைப்பது சமபந்தமாக :

இந்தப் பாஸ்பார்ட் விசாரணைக்காக சிறப்பு பிரிவு காவல் துறையினர் சம்பந்தப்பட்ட வீடுகளுக்குச் சென்று விசாரணைகளை மேற் கொள்ள வேண்டும். ஆனால், சில மாவட்டங்களிலே, இராமநாதபுரம் மாவட்டம் உட்பட, பெண்கள் உள்பட எல்லோரையும் காவல் நிலையங்களுக்கு வரவழைத்து விசாரணை செய்யக்கூடிய ஒரு நிலை இருக்கின்றது. இதையும் சீர்படுத்துவதற்கு இந்த அரசு முன் வர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

(மாண்புமிகு முதல்வர் அவர்கள் தனது பதிலுரையில் இதற்கு பின் வருமாறு பதிலளித்தார்கள்.)

மாண்புமிகு முதல்வர் : மாண்பு மிகு பேரவைத் தலைவர் அவர்களே,முனைவர் ஜவாஹிருல்லா பேசுகின்ற போது பாஸ்போர்ட் விசாரணைக்கு பெண்கள் கூட காவல் நிலையத்திற்கு வர வழைக்கப்படுகின்றனர் என்று கூறினார்.  சி.ஆர்.பி.சி. சட்டத்தின் படி பெண்கள், குழந்தைகளை சாட்சியாக விசாரணை செய்யக் கூடாது.காவல் நிலையத்திற்கு அழைக்கக் கூடாது. அவர்களை அவர்களது இருப்பிடத்திற்குச் சென்று தான் விசாரிக்க வேண்டும். எனவே பாஸ்போர்ட் விசாரணைக்கு அவர்களை அழைக்கத் தேவையில்லை அவ்வாறு நடை பெற்றிருந்தால் அது விசாரிக்கப்பட்டு, இது போன்று இனிமேல் நிகழாமல் பார்த்துக் கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் அவர்கள் பதிலளித்தார்.

Wednesday, April 24, 2013

தமுமுக வின்முக்கிய அறிவிப்பு


பொய் வழக்கில் தமிழக முஸ்லிம்களை கைது செய்ததைக் கண்டித்தும், ஊடகங்களின் முஸ்லிம் விரோத போக்கைக் கண்டித்தும் மாவட்டந்தோறும் ஆர்ப்பாட்டம் அல்லது கண்டன சுவரொட்டிகள் ஒட்டவும் தலைமையகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது

Monday, April 15, 2013

கீழ‌க்க‌ரையில் நாளை(செவ்வாய்,16 ஏப்2013) மின் த‌டை!

கீழக்கரை பகுதியில் உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கீழக்கரை,ஏர்வாடி,முகம்மது சதக் கல்லூரி பகுதி,காஞ்சிரங்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நாளை (செவ்வாய்,16 ஏப் 2013) காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் இருக்காது என்று உதவி செயற் பொறியாளர் க‌ங்காத‌ர‌ன் தெரிவித்துள்ளார்

news by:kilakaraitimes.blogspot.com

Sunday, April 14, 2013

ஜூன் 6ல் கோட்டையை நோக்கி முஸ்லிம்களின் கோரிக்கைப் பேரணி

ஜூன் 6ல் கோட்டையை நோக்கி முஸ்லிம்களின் கோரிக்கைப் பேரணி 

தமுமுக அறிவிப்பு

ஜூன் 6ல் கோட்டையை நோக்கி முஸ்லிம்களின் கோரிக்கைப் பேரணி
தமுமுக அறிவிப்பு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்களின் தலைமையில் 11.04.2013 அன்று நடைபெற்றது. அதில்,

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு தற்போது அமலில் உள்ள 3.5 சதவீத இடஒதுக்கீட்டை அதிகரித்து தரக் கோரியும்,

10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக சிறைகளில் வாடும் முஸ்லிம்கள் உட்பட அனைத்து ஆயுள் சிறைவாசிகளுக்கும் பொது மன்னிப்பு அளித்து விடுவிக்கக் கோரியும்,திருமணப் பதிவுச் சட்டத்தில் திருத்தங்கள் கோரியும்,

பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஒன்றுதிரண்டு எதிர்வரும் ஜூன் 6 (சனிக்கிழமை) அன்று தலைநகர் சென்னையில் கோட்டையை நோக்கி கோரிக்கைப் பேரணி நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

அன்புடன்
(ப. அப்துல் சமது)
பொதுச் செயலாளர்

Friday, April 12, 2013

முஸ்லிம் மாணவிகளுக்கு சென்னையில் மாணவியர் விடுதிகள் அமைக்க வேண்டும்


08.04.2013 அன்று தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடரில் பேரா எம் எச் ஜவாஹிருல்லா அவர்களில் கேள்வியும் அமைச்சரின் பதிலும்
முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: சென்னையில் சிறுபான்மையினர் நலத்துறை கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகள் அமைக்க அரசு முன்வருமா?
மாண்புமிகு முஹம்மத் ஜான்(பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்): மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு முதலமைச்சர் முதல்வராக ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரு சில மாதங்களிலேயே சிறுபான்மையின சமுதாயத்திற்கு 8 விடுதிகளை அளித்தார்கள், அதில் ஒரு விடுதியை சென்னை இராயப்பேட்டையில் கல்லூரி மாணவியர்கள் 100 பேர் தங்கிப் படிக்கும் வகையில் துவங்குவதற்காக ஆணையிட்டுள்ளார்கள், இந்த ஆண்டு முதல் இந்த விடுதி செயல்படத் தொடங்கும், தற்போது சென்னையில் சிறுபான்மையின கல்லூரி மாணவியர் விடுதிகள் தொடங்குவது குறித்து கருத்துரு எதுவும் தற்சமயம் அரசின் பரிசீலனையில் இல்லை, இருப்பினும் சென்னையில் உள்ள 8 பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியில் அவர்கள் தங்கி கல்விப் பயில சிறுபான்மையின மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.
முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் உயர்கல்வி படிப்பதற்காக சிறுபான்மையின முஸ்லிம் மாணவிகளுக்கு மத்தியிலே அதிக ஆர்வம் ஏற்பட்டு, அவர்கள் சென்னையில் உள்ள கல்லூரிகளிலே சேரும் பொழுது அவர்கள் தங்கும் வசதிக்காக மிகப்பெரிய சிரமங்களை எதிர்நோக்க வேண்டிய ஒரு சூழ்நிலை இருந்ததன் விளைவாகத்தான் இந்தக் கேள்வியை நான் எழுப்பினேன்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் சென்னையில், இராயப்பேட்டையில் 100 சிறுபான்மையின மாணவிகள் தங்கி படிப்பதற்காக, சிறுபான்மையின கல்லூரி மாணவியர் விடுதி அமைத்துத்தரப்படுமென்று அறிவித்தமைக்காக மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதேபோன்று, சிறுபான்மையின முஸ்லிம் மாணவர்களும் சென்னையிலுள்ள கல்லூரிகளில் சேர்ந்துப் படிக்கக்கூடியவர்கள் சிரமப்படுகிறார்கள் எனவே சென்னையில் சிறுபான்மை கல்லூரி மாணவர்களுக்கும் ஒரு விடுதி அமைக்க மாண்புமிகு அமைச்சர் அவர்கள் உடனடியாக முன்வருவாரா என்று தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.
மாண்புமிகு முஹம்மத் ஜான்(பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்): மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சிறுபான்மையின மாணவ, மாணவியர்களின் சிரமத்தை போக்கும் வகையில் முதலில் இன்றைக்கு சென்னையிலேயே மாணவிகளுக்காக ஒரு சிறுபான்மையின நல விடுதியை அமைத்துக் கொடுத்துள்ளார்கள். மாணவர்களைப் பொறுத்தவரையில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பகுதிகளில் இருக்கின்ற கல்லூரிகளில், விடுதிகளில் சேர்ந்து படிப்பதற்கு வாய்ப்பிருக்கின்றது, ஆனால் மாணவிகளுக்கு மாத்திரம் அதுபோன்று சரியாக வாய்ப்பு இல்லை, ஆகவே முதலில் அவர்களுக்காக மாண்புமிகு முதல்வர் அவர்கள் இந்த விடுதியை அமைத்துக் கொடுத்துள்ளார்கள். மேலும் சென்னையில் உள்ள 8 பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் இன்னும் அவர்கள் சேருகின்ற அளவிற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. அவ்வாறு இல்லையென்றால் மாண்புமிகு முதல்வர் அவர்களுடைய கவனத்திற்கு இதனை எடுத்துச் சென்று அது பரிசீலிக்கப்படும் என்பதைத் தங்கள் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன்