Monday, July 19, 2010

சட்டசபை தேர்தலில் போட்டியிட கூட்டணி த.மு.மு.க., மாநில தலைவர் உறுதி

விழுப்புரம் : "மனித நேய மக்கள் கட்சி, வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட கூட்டணி விரைவில் அறிவிக்கப்படும்' என, த.மு.மு.க., மாநில தலைவர் ஜவாஹிருல்லா கூறினார். இது குறித்து த.மு.மு.க., மாநில தலைவரும், மனித நேய மக்கள் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளருமான ஜவாஹிருல்லா நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் 69 சதவீதம் இடஒதுக்கீடு குறித்து சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், இது இன்னும் ஓராண்டு நீடிக்குமென கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தபட்ட பழங்குடி இன மக்கள் 80 சதவீதம் உள்ளனர். இதற்கான தகுந்த புள்ளி விவரங்களை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். இட ஒதுக்கீட்டு உச்ச வரம்பை அதிகரிக்க, சிறை செல்லவும் தயாராக உள்ளதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
உச்சவரம்பை அதிகரிக்க அரசு சார்பில் அனைத்து அரசியல் கட்சிகள், சமூகநல அமைப்புகளின் கூட்டத்தை கூட்ட வேண்டும். 50 சதவீத இட ஒதுக்கீடு என்பது சமூகநீதிக்கு எதிரானது. இது மாநில அரசின் உரிமையில் தலையிடுவதாக உள்ளது. சிறுபான்மையின மக்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு போதாது. கூடுதலாக தர வேண்டும். அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு தர வேண்டும். மனித நேய மக்கள் கட்சி, வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடும். அதற்கான கூட்டணியும் விரைவில் அறிவிக்கப்படும்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன், விழுப்புரம் மாவட்டம் சித்தணியில் நடந்த ரயில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகள் கண்டு பிடிக்காமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. போலீசார் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இவ்வாறு த.மு.மு.க., மாநில தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.
தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் குணங்குடி அனீபா, மாவட்ட தலைவர் அப்துல் காதர் உடனிருந்தனர்.
நன்றி: தினமலர்

No comments :