Friday, July 23, 2010

ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்குத் தடுப்பூசி

ராமநாதபுரம், ஜூலை 22: ராமநாதபுரம் சுகாதாரத் துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு மூளைக் காய்ச்சல் தடுப்பூசி வியாழக்கிழமை போடப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திலிருந்து ஏராளமானோர் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர். இந்த ஆண்டு தமிழகத்திலிருந்து 3,000 பேர் செல்ல மத்திய அரசு அனுமதியளித்திருக்கிறது. ஆனால், 12,000 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்திருந்தனர்.
இதில் குலுக்கல் முறையில் 3,000 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பயணிகளுக்கு சுகாதாரத் துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் மூளைக் காய்ச்சல் தடுப்பூசி போட வியாழக்கிழமை வருமாறு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. சென்னையில் உள்ள தமிழ்நாடு ஹஜ் கமிட்டி அலுவலகம் 146 பேருக்கு கடிதம் அனுப்பயதில், வியாழக்கிழமை 76 பேர் ராமநாதபுரத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். ராமநாதபுரம் சுகாதாரத் துறை துணை இயக்குநர் உமாமகேசுவரி தலைமையில் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் அனைவருக்கும் மருத்துவர் குழுவினர் தடுப்பூசி போட்டனர்.
சௌதி நாட்டு அரசு உத்தரவுப்படி, அந் நாட்டுக்கு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்பவர்கள் அனைவருக்கும் போலியோ தடுப்பு சொட்டு மருந்தும், மூளைக் காய்ச்சல் தடுப்பூசியும் போட்டு அதற்கான அடையாள அட்டை இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறியதைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் தடுப்பூசியும் போலியோ சொட்டு மருந்தும் போட்டுக் கொண்டனர். இதில் விடுபட்டவர்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தி அதில் தடுப்பூசி போடப்படும் எனவும் தமிழ்நாடு ஹஜ் கமிட்டிக் குழு ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

thanks by dinamani.com

No comments :