Friday, March 26, 2010

சச்சார் குழு அறிக்கையை அமுல்படுத்த நடடிவக்கை எடுத்து வருகிறோம் அமைச்சர் சல்மான குர்ஷீத் தமுமுக தலைவரிடம் விளக்கம்




மத்திய சிறுபான்மை விவகாரத் துறை அமைச்சர் திரு. சல்மான் குர்ஷித் நேற்று புதுடெல்லியில நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் பங்குக் கொண்டார். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த சிறுபான்மை சமூகத்தின் முக்கிய பிரமுகர்களுடன் இந்நிகழ்ச்சியின் போது அமைச்சர் சல்மான் குர்ஷீத் கலந்துரையாடினார். சிறுபான்மை நலனுக்காக தனது அமைச்சகம் செய்து வரும் பணிகளை அமைச்சர் விவரித்தார்.

இந்த கலந்துரையாடலில் பங்குக் கொண்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் பின் வரும் கோரிக்கைகளை முன்வைத்தார்:

மத்திய அரசு நீதிபதி ரங்கநாதன் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளை அப்படியே செயல்படுத்த வேண்டும்.

வகுப்பு கலவர தடுப்பு மசோதா 2009ஐ அவசரப்பட்டு மத்திய அரசு சட்டமாக்கக் கூடாது. இந்த மசோதா வகுப்பு கலவரங்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய நீதியை பெற்று தரும் வகையில் அமையவில்லை. காவல்துறைக்கும் மாநில அரசுக்கும் மிதமிஞ்சிய அதிகாரம் அளிக்கும் வகையில் இந்த சட்டம் அமைந்துள்ளது. எனவே இந்த மசோதாவை சட்டம் ஆக்குவதற்கு முன்பு மத்திய அரசு மனிதஉரிமை அமைப்புகள், சிறுபான்மை அமைப்புகளுடன் கலந்தாலோசனை செய்து உரிய திருத்தங்களை கொண்டு வரவேண்டும்.

தமிழகத்தில் கொண்டுவரப்பட உள்ள சமசீர் கல்வி திட்டத்தினால் சிறுபான்மையினரின் மொழிகளான உருது, அரபி, மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்றவை புறக்கணிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உருது வழி பள்ளிக்கூடங்களில் காலியாகும் உருது ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கும் தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வில்லை. இந்த அவல நிலையை நீக்க சிறுபான்மை விவகார அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2011ல் நடைபெறும் மக்கட் தொகை கணக்கெடுப்பின் போது அனைத்து பிற்படுத்த வகுப்பினரின் சமூக நிலை குறித்தும் புள்ளி விவரம் திரட்டப்பட்டு இதன் அடிப்படையில் அரசின் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட ஆவணச் செய்யப்பட வேண்டும்.

இடஒதுக்கீட்டின் உச்ச பட்ச அளவு 50 சதவிகிதம் என்று உச்சநீதிமன்றம் நிர்ணயித்துள்ள வரம்பை நீக்குவதற்கும் மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கேற்ப இடஒதுக்கீடு அளவை நிர்ணயித்துக் கொள்ளவும் சிறுபான்மை அமைச்சகம் முன்முயற்சி எடுக்க வேண்டும்.

சிறுபான்மையினருக்கான பிரதமரின் 15 அம்ச திட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதை உரிய முறையில் மாநில அரசுகள் கண்காணிப்பதில்லை. எனவே இந்த திட்டம் உரிய முறையில் செயல்படுத்தப்படுகின்றதா என்பதை கண்காணிக்க தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்திற்கு இருப்பது போல் கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

வட்டியில்லா நிதி நிறுவனங்கள் செயல்படுவதற்கு இருக்கும் தடைகளை நீக்க சிறுபான்மை அமைச்சகம் ஆவணச் செய்ய வேண்டும்.


சிறுபான்மை மாணவர்களுக்கும் அமைச்சகம் தரும் 3 வகையான கல்வி உதவிகளுக்கான விண்ணப்ப படிவங்கள் மிக சிக்கலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனை எளிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமுமுக தலைவரின் கருத்துகளை உன்னிப்பாக கேட்ட அமைச்சர் சல்மான குர்ஷீத் பின் வரும் விளக்கங்களை அளித்தார்:

சச்சார் குழு அறிக்கையை முழுமையாக ஆய்வு செய்து அதன் பரிந்துரைகளை அமுல்படுத்த நடடிவக்கை எடுத்து வருகிறோம்.

மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளை நாங்கள் இன்னும் ஆய்வுச் செய்யவில்லை. ஆந்திரா முஸ்லிம் இடஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்காக காத்து இருக்கிறோம். வகுப்பு கலவர தடுப்பு மசோதா 2009ஐ நிறைவேற்றுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து விட்டது. இருப்பினும் இது குறித்து மத்திய உள்துறை அமைச்சருடனும் சட்ட அமைச்சருடனும் பேசுகிறேன். தமிழகத்தில் உருது உள்ளிட்ட சிறுபான்மை மொழிகள் நிலை குறித்து தமிழக அரசுடன் பேசுகின்றோம். பிரதமரின் 15 அம்ச திட்டத்தை கண்காணிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவை அமைக்குமாறு ஏற்கெனவே மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

சிறுபான்மைனயினர் கல்வி உதவி படிவங்களை எளிமைப்படுத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கியுள்ளோம்''என்றார்.

No comments :