Thursday, March 25, 2010

துயரத்தை போக்கிய சந்திப்பு குணங்குடி ஹனீபா கடிதம்


6-12-1997 அன்று நடைபெற்ற மூன்று இரயில் குண்டுவெடிப்புகள் எனது தூண்டுதலில் நடைபெற்றதாக தமிழக சி.பி.சி.ஜ.டி சிறப்பு புலனாய்வு குழு என்மீது வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணையை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரணை செய்த பூந்தமல்லி சிறப்பு அமர்வு நீதிமன்றம் 13 வருடங்களுக்கு பிறகு நிறைவு செய்துள்ளது. இறைவன் நாடினால் மிக விரைவில் மார்ச் 31 அன்று வழக்கின் தீர்ப்பு வரும். தற்போது பல்வேறு பிரச்சினைகளால் எனது உடல்நிலை பாதிக்கப்பட்டு ஊன்றுகோல் துணையுடன் சிறை வாழ்க்கை வாழ்ந்து வருகின்றேன்.
இந்த நிலையில் தமுமுக தலைமை சார்பில் பாசமுள்ள தலைவர் பேராசிரியர் எம்.ஹச்.ஜவாஹிருல்லாஹ், பொது செயலாளர் சகோதரர் எஸ். ஹைதர் அலி, துணை பொதுச்செயலாளர் இமாம் ஜே.எஸ். ரிஃபாய், ம.ம.க பொருளாளர் சகோதரர் ஹாரூன் ரசீது, மாவட்ட துணை செயலாளர் புழல் ஷேக் முஹமது ஆகியோர் 17-3-2010 அன்று சிறையில் என்னை சந்தித்து நலம் விசாரித்து தலைவர் பேராசிரியர் எம்.ஹச்.ஜவாஹிருல்லாஹ் கண்ணீருடன், தன் கரங்களால் ஆப்பிள், ஆரஞ்சு வாழை கனிகளை என்னிடம் வழங்கினார்கள்.

இந்த உணர்வுபூர்வமான சந்திப்பு எனக்கு மிகவும் ஆறுதல் அளித்ததோடு 13 வருடங்களாக நான் சிறையில் உள்ள வேதனை எனக்கு நீங்கியது. அதற்காக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைமைக்கும், இது நாள்வரை சிறையில் என்னை சந்தித்து நலம் விசாரித்த மற்றும் எனது விடுதலைக்காக தொடர்ந்து ஜனநாயக முறையில் உணர்வுகளை வெளிப்படுத்திய தமிழகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் இயக்கங்களுக்கும், இஸ்லாமிய பத்திரிக்கைகளுக்கும், நான் மிகவும் நேசிக்கின்ற மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிவாசல் இமாம்களுக்கும், பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கும் ஜமாஅத்தார்களுக்கும் வளைகுடா நாடுகளில் உள்ள சமுதாய பட்டாளிகளுக்கும், உங்களுக்கும் எனக்கும் உறவை ஏற்படுத்திய எல்லாம் வல்ல இறைவனுக்கும் என் சார்பாகவும், என குடும்பத்தினர் சார்பாகவும் தொடர்ந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
குணங்குடி ஆர்.எம்.ஹனீபா.
source by:www.tmmk.in

No comments :