Thursday, June 3, 2010

கீழக்கரையில் போக்குவரத்துக்குஇடையூறாக மணல் குவியல்

ராமநாதபுரம்,ஜூன் 2: ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் உள்ள சாலைகளில் வீடு கட்டுபவர்கள் மணலை கொட்டி வைத்திருப்பதால் அவை போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது.
கீழக்கரையில் பல்வேறு இடங்களில் வீடு கட்டுபவர்கள் தெருக்களில் படிகளை அமைத்து ஆக்கிரமித்துள்ளனர்.
இந்த நிலையில் பல தெருக்களில் புதிதாக வீடு கட்டுபவர்கள் இரவு நேரங்களில் சாலைகளை ஆக்கிரமிக்கும் வகையில் மணல்,ஜல்லி கற்கள் போன்றவற்றை கொட்டி வைத்து விடுவது மேலும் போக்குவரதுக்கு இடையூறாக இருந்து வருகிறது.
சாலைகளில் கொட்டிய பிறகு அதனை அகற்றுவதற்கு வேலையாள்கள் கிடைக்காமல் போவதாலும் தொடர்ந்து இரண்டு அல்லது 3 நாள்கள் கிடப்பதால் சாலைகளில் வாகனங்களில் செல்பவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
தார்ச்சாலையாக இருக்கும் சாலைகள் பலவும் மணல் சாலைகளாக மாறி வருகிறது. முக்கியமாக கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் மணல் குவியல்கள் அதிகமாக கிடக்கின்றன. நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன் பிரதான சாலைகளில் உள்ள மணல்,ஜல்லி போன்றவற்றையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் வகையில் கொட்டப்படும் லாரிகள்,டிராக்டர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
கீழக்கரையில் வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள ஜூம்மா பள்ளிவாசல் அருகில் நடுத்தெருவுக்கு செல்லும் பிரதான சாலையில் கோழிக்கழிவுகள் மற்றும் குப்பைகளும் அதிகமாக கொட்டப்படுகின்றது.
இறைச்சிக் கடைகளை நடத்துபவர்கள் அதன் கழிவுகளை பெரும்பாலும் கடற்கரைக்கு அருகில் உள்ள இடத்திலேயே கொட்டுவது வழக்கமாக இருந்தது.
கடற்கரை மாசுபடுகிறது என பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து கோழிக்கழிவுகள் கொட்டுவது நிறுத்தப்பட்டு வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள பிரதான சாலையில் தற்பொழுது கொட்டப்பட்டு வருகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் கடுமையான துர்நாற்றமும் வீசுகிறது. நகராட்சி நிர்வாகம் இதற்கும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூகஆர்வலர்கள் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

news by; dinamani

No comments :