Tuesday, June 1, 2010

பாலஸ்தீனத்தில் மனிதாபிமான உதவிகளை செய்வதற்காக கப்பல்களில் வந்த வெளிநாட்டுக் குழுவினர் மீது இஸ்ரேல் கடற்படை தாக்குதல்

பாலஸ்தீனத்தில் மனிதாபிமான உதவிகளை செய்வதற்காக கப்பல்களில் வந்த வெளிநாட்டுக் குழுவினர் மீது இஸ்ரேல் கடற்படை திங்கள்கிழமை தாக்குதல் நடத்தியது. இதில் 15 பேர் பலியாகினர். 60 பேர் காயமடைந்தனர்.
இஸ்ரேல் கடற்படை கமாண்டோ வீரர்களின் இந்த நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா முனைப்பகுதியில் மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த நோபல் பரிசு வென்ற மைரீட் கோரிகன் மேகுர் உள்பட 700 பேர் 6 கப்பல்களில் வந்து கொண்டிருந்தனர்.
இவர்கள் பாலஸ்தீனத்துக்கு வருவதை இஸ்ரேல் கடற்படை கமாண்டோக்கள் நடுக்கடலில் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆனால் மனிதாபிமான உதவிக் குழுவினர் தொடர்ந்து பாலஸ்தீனத்துக்கு வர முயற்சித்துள்ளனர். இதனால் கோபமடைந்த இஸ்ரேல் கடற்படை கமாண்டோக்கள் மனிதாபிமான உதவிக் குழுவினர் மீது துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் 15 பேர் துடிதுடித்து இறந்தனர். 60-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் துருக்கியைச் சேர்ந்தவர்கள் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதும் மனிதாபிமானக் குழுவினர் கதறியுள்ளனர். எனினும் இதை கடற்படையினர் கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டு 6 கப்பல்களையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் என்று அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன

No comments :