Wednesday, September 2, 2009

திருவாரூர் மாவட்ட தமுமுக தொண்டரணிச் செயலாளர் படுகொலை


படுகொலை செய்யப்பட்ட நூர் முகம்மது

சத்தியத்தை எடுத்துரைத்து அதை நிலைநாட்ட பாடுபட்ட தமுமுகவின் திருவாரூர் மாவட்டத் தொண்டரணிச் செயலாளர் நூர்முஹம்மது (வயது 32). சமுதாயத் துரோகி ஒருவனால் 29.8.2009 அன்று கூத்தாநல்லூரில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருவாரூர் மாவட்டத்தைப் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. நோன்பு துறந்து, தொழுகை முடித்து களைப்புடன் வெளிவந்த நூர் முஹம்மதுவை வன்னெஞ்சம் கொண்ட அனஸ் மைதீன் (42) என்ற அயோக்கியன் அன்வரியா பள்ளிவாசலுக்கு அருகிலேயே வழிமறித்துக் கத்தியால் குத்திக் கொலை செய்திருக்கிறான்.

இவன் கொரடாச்சேரியை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஒரு ரவுடிக் கும்பலுக்கு கூத்தாநல்லூரில் ஏஜென்டாக இருப்பவன் என்றும், கூத்தா நல்லூரில் முஸ்லிம் சமுதாயத்தைக் காட்டிக் கொடுப்பது, இன்னும் சொல்லக் கூசும் இழிசெயல் களை இவன் செய்து வந்துள்ளான் என்றும் சொல்லப்படுகிறது.

இவனை நூர்முஹம்மது தட்டிக் கேட்டுள்ளார். அனஸ் மைதீனின் அருவறுக்கத் தக்க இழிசெயல்களை அன்வரியா பள்ளிவாசல் நிர்வாகத்தில் நூர்முஹம்மது ஆதாரங்களுடன் அம்பலப்படுத்திய தால், 29.8.09 அன்று மதியம் பள்ளிவாசல் நிர்வாகம், இந்தப் பாதகனை நிர்வாகக் குழுவில் இருந்து நீக்கியுள்ளது.

இதனால் வெறி தலைக்கேறிய குடிகாரன் அனஸ் மைதீன், புனிதமிகு ரமலான் மாதம் என்றும் பாராமல், பள்ளிவாசலில் நோன்பு துறந்து, தொழுது முடித்து, களைப்போடு வெளியே வந்த சமுதாயத் தொண்டர் நூர்முஹம்மதுவை கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாகக் கத்தியால் குத்தி சரித்திருக்கிறான்.

நூர்முஹம்மது ஷஹீதான பின்னணி

பழம்பெரும் ஊரான கூத்தாநல்லூருக்குப் பல பெருமைகள் உண்டு. அதே நேரம் மார்க்கத்தை விட ஊர்ப் பெருமையும், குலப் பெருமையும்தான் பெரியது எனக் கருதுகிற, பண்ணை ஆதிக்கக் குணம் கொண்ட சிலரும் அந்த ஊரில் உண்டு. ஆதிக்க சக்தி கொண்ட இந்த பணக் காரர்கள் நூறாண்டு களுக்கும் மேலாக கூத்தாநல்லூரில் வசித்து வரும் பெரும் பான்மையான முஸ்­ம் குடும்பங்களை கூத்தாநல்லூர் வாசிகளாக அங்கீகரிக் காமல், வெளியூரி­ருந்து பிழைக்க வந்தவர்கள் என முத்திரைக் குத்தி, பள்ளிவாசல்களின் நிர்வாகப் பொறுப் பிற்கு வரவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது.

(சமநிலை சமுதாயம் காணப் பாடு படுவதாகக் கூறி சென்னையில் பத்திரிகை நடத்தும் பெரியவர்கள் கூட இந்த அராஜகத்தை ஆசீர்வதித்து ஆதரிப்பவர்கள் என்பது வேதனை.)

பள்ளிவாசல்களுக்குத் தேர்தல் நடத்தினால், பாதிக்கப்பட்டவர்கள் சட்ட ரீதியாகத் தங்கள் உரிமைகளை நிலை நாட்டி விடுவார்கள் என்பதால், அங்கு தேர்தல்களையே நடத்தாமல் இழுத்தடித்து வந்தனர்.


சக முஸ்­ம்களுக்கு சில ஆதிக்க வாதிகள் இழைக்கின்ற கொடுமையை சகிக்காத சகோ. நூர்முஹம்மது, தனக் கிருக்கும் உரிமை, அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகப் பாடு பட்டார். வக்ப் வாரியத்தில் தொடர்ச்சியாக முறையிட்டுத் தேர்தல்களை நடத்த வைத்தார். இதனால் ஆதிக்க சக்திகள் சில நூர்முஹம்மது மீது ஆத்திரத்தில் இருந்தன.

எடுபிடித் துறையின் கெடுதல்கள்

உறவினர்களுக்கு ஆறுதல் கூறும் தமுமுக தலைவர்

பள்ளிவாசல் நிர்வாகத்தில் கூத்தா நல்லூரில் குடியேறி பல ஆண்டுகளாக வாழ்ந்து வருபவர்களுக்கும் இடம் கொடுக்க வேண்டும் என்ற கருத்தில் இருந்த உள்ளூர் நல்லோர்களில் சிலரைத் தேர்த­ல் போட்டியிடாமல் தடுக்க, ஆதிக்கவாதிகள் சதி செய்தனர். உள்ளூர் காவல்துறைக் கருப்பாடுகளைப் பணத் தால் குளிப்பாட்டி, தங்களின் எடுபிடி களாக்கிக் கொண்டனர் இந்த எதேச்சதி காரர்கள். நல்லுள்ளம் படைத்த உள்ளூர் நபர்கள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, உள்ளூர் காவல்துறை (குறிப்பாக அன்றைய ஆய்வாளர் அண்ணாதுரை), தேர்தலைக் கவிழ்த்தது. விசுவாசமான காவல்துறை வாலாட்டி ஜீவன்களின் உதவியோடு, விஷக் கருத்து கொண்ட அனஸ் மைதீன் வெற்றி பெற்றான்.


குடி, கும்மாளம், விபச்சாரம் எனக் கெட்டவைகளில் எந்த ஒன்றையும் விட்டு வைக்காத அனஸ் மைதீன், விபச்சாரம் செய்து பிடிபட்டபோது, பலரும் கெஞ்சியதால் தமுமுகவினர் விட்டுள்ளனர். மறுநாள் காவல்துறையில் தமுமுகவினர் மீது பொய்ப் புகார் கொடுத்துள்ளான் இந்தப் பொல்லாதவன்.

இவனது கெட்ட நடத்தைகளை சகோ. நூர்முஹம்மது, அன்வரியா பள்ளிவாசல் நிர்வாகத்தில் ஆதாரங்களுடன் அம்பலப் படுத்தியதால், செயலாளர் பொறுப்பி­ ருந்து 29.8.09 அன்று மதியம் விலக்கப் பட்டுள்ளான். அதேநாளில், இஃப் தாருக்குப் பிறகு, பள்ளிவாச­­ருந்து நிராயுதபாணியாய் வெளிவந்த சகோ. நூர்முஹம்மதுவைக் கொடூரமாகக் குத்தி படுகொலை செய்துள்ளான்.


கூத்தாநல்லூர் காவல்துறையின் கொடியச் செயல்கள்


மக்களைப் பாதுகாத்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய காவல்துறை கூத்தா நல்லூரில் சில பணக்காரர்களின் எடுபிடித் துறையாகவே கடந்த பல மாதங்களாக இருந்து வருகிறது. ஜெஹபர் அ­ உள்ளிட்ட துடிப்புமிகு தொண்டர்கள் மீது பொய் வழக்கு போட்டு தங்கள் எஜமானர்களைத் திருப்திபடுத்துவது உள்ளூர் காவல்துறையின் வாடிக்கை.

பின்வரும் கொடியவர்களால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என சகோ. நூர்முஹம்மது முதல்நாளே காவல் நிலையத்தில் புகார் கொடுத்து ரசீது பெற்றுள்ளார்.


தன்னைக் கொலை செய்ய முயற்சிப்பவர்கள் என நூர்முஹம்மதுவால் குறிப்பிடப்பட்டவர்கள்


அனஸ் மைதீன் (22வது வார்டு திமுக பிரதிநிதி)
முருகேசன் (22வது வார்டு திமுக செயலாளர்)
மஜீத் (8வது வார்டு திமுக செயலாளர்)
வேலு (மைய ஒருங்கிணைப்பாளர்)

இவர்கள் மீது உள்ளூர் காவல்துறை ஆரம்பத்தி­ருந்தே நடவடிக்கை எடுக்க வில்லை.

அனஸ் மைதீன் பெரிய பட்டாக் கத்தி களுடன் வந்துள்ளார். அவரது மோட் டார் சைக்கிளை சோதனையிடுங்கள் என்று காவல் நிலையத்தில் வைத்து சகோ. நூர்முஹம்மது கூறியபோது, அங்கிருந்த ஏட்டு, தற்காப்புக்காக ஆயுதம் வைத்திருப்பார், உன் வேலை யைப் பார் என்று உபதேசித்துள்ளார். உள்ளூர் காவல்துறை யின் ஒத்துழைப்பும், ஆதிக்க சக்திகளின் பின்னணியும், ஒரு கயவ னால், ஒரு சமுதாயத் தொண்டர் கொல்லப் படுவதற்கு காரணமாகி யுள்ளன என்றால் மிகையில்லை.

நூர்முஹம்மது போன்ற போராளிகள் தான் தமிழக முஸ்லிம் களின் உரிமைக் குரலாய் செயல்படுகிறார்கள். இவர்களை வெட்டிச் சாய்ப்ப தால் நீதியை புதைத்துவிட முடியாது.

நூர்முஹம்மது போன்றவர்கள் பல நூறு பேரை கூத்தாநல்லூரில் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். சத்தியத்திற்காகவும், பொதுமக்களின் குமுறல்களுக்காகவும் அவர்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.


சமுதாய நன்மைக்காகப் போராடி உயிர் துறந்திருக்கும் நூர்முஹம்மதுவுக் காக இறைவனிடம் பிரார்த்திப்போம்!

கூத்தாநல்லூரில் சகோ. நூர்முஹம்மது படுகொலை செய்யப்பட்ட செய்தியை ம.ம.க. மாவட்டச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான், தமுமுக திருவாரூர் மாவட்ட பொறுப்பாளரான மாநிலச் செயலாளர் ஹாஜாகனியிடம் தெரிவிக்க, ம.ம.க. துணைப் பொதுச் செயலாளர் அன்சாரி மற்றும் தலைவருடன் ஆலோசனை செயயப்பட்டு, உடனடியாக அன்சாரி மற்றும் ஹாஜாகனி கூத்தாநல்லூர் புறப்பட்டனர். ஜனாஸாவில் தலைவர் கலந்து கொள்வதாக முடிவெடுக்கப்பட் டது. அன்று இரவே தகவலறிந்து மாநிலம் முழுவதுமுள்ள தமுமுகவினர் கொந் தளிக்க, வெளிநாடு வாழ் சகோதரர்களும் தொடர்ந்து தொடர்பு கொண்டனர்.


தமுமுக, ம.ம.க. திருவாரூர் மாவட்ட நிர்வாகிகளான முஜிபுர் ரஹ்மான் நாச்சிக்குளம் தாஜூதீன், குத்புதீன், அலீம், சாகுல் ஹமீது உள்ளிட்டோர் சம்பவத் தன்று இரவே கூத்தாநல்லூரில் முகாமிட்ட னர். திருவாரூர், நாகை வடக்கு, நாகை தெற்கு, தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, காரைக்கால், புதுக்கோட்டை, ராமநாதபுரம் என பல்வேறு பகுதிகளி­ருந்தும், தமுமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் கூத்தாநல்லூரில் முகாமிட்டனர்.

கூத்தாநல்லூருக்கு விரைந்து வந்த ம.ம.க. துணை பொதுச் செயலாளர் அன்சாரி, தமுமுக மாநிலச் செயலாளர்கள் பேரா. ஹாஜாகனி, கோவை சாதிக், மாணவரணி பொருளாளர் மாயவரம் அமீன், ஷாஜஹான் ஆகியோர் கொந் தளிப்போடு குழுமியிருந்த தொண்டர் களை அமைதிப்படுத்தினர்.


பின்னர் மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்கள், மாநில நிர்வாகிகளை சந்தித்து, எடுக்கப்பட்ட நடவடிக் கைகளைக் கூறினர்.


கொலையாளியைப் பிடித்து விட்தாகக் காவல் அதிகாரிகள் கூறிய பின் மாவட்டத் தலைவர் தாஜுதீன் மற்றும் நகரத் தலைவர் நைனார் உள்ளிட் டோர் சென்று குற்றவாளி காவல் நிலையத்தில் அடைபட்டிருப்பதை நேரில் பார்த்து உறுதி செய்தனர்.


மீதி குற்றவாளிகளை இரவுக்குள் பிடித்து விடுவதாக துணை கண்காணிப்பாளர்கள் துரைராஜ் மற்றும் ராமன் உறுதியளித்தனர்.

பின்னர் மாவட்டக் காவதுறை கண்காணிப்பாளர் பிரவீண்குமார் அபினபு விடம் தமுமுக மாநில நிர்வாகிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். குற்றவாளியைக் கண்டிப்பாக கைது செய்வோம், எந்த அழுத்தத்திற்கும் பணியாமல் குற்றவாளிக்கு தண்டனைப் பெற்றுத் தருவோம் என கண்காணிப்பாளர் உறுதியளித்தார்.

முத்துப்பேட்டை விநாயகர் சிலை ஊர்வலப் பிரச்சினையில் காவல்துறை நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என நிர்வாகிகள் வ­யுறுத்தினர். காவல்துறை உயரதிகாரிகளிடம் உரிய உறுதிமொழிகளைப் பெற்ற பிறகு, மாநிலத் தலைவருக்கு விவரம் தெரிவிக்கப்பட்டது. பின்னர் போலீசாரின் வேண்டுகோளை ஏற்று பிரேத பரிசோதனைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

சகோ. நூர்முஹம்மதுவின் உடலை மன்னார்குடி அரசு மருத்துவமனையிலிருந்து பெற்று வருவதற்காக மாநிலச் செயலாளர் பேரா. ஹாஜாகனி, கோவை சாதிக், மாணவரணி பொருளாளர் மாயவரம் அமீன், அச்சிறுப்பாக்கம் ஷாஜஹான் ஆகியோர் சென்றனர்.

லெட்சுமாங்குடி பாலத்திலிருந்து ஆம்புலன்ஸில் உடல், பேரணியாக வீடுவரை சுமார் 3 கி.மீ. தூரம் எடுத்துச் செல்லப்பட்டது.

அந்தப் பேரணியில் பல்லாயிரக்கணக் கானோர் திரண்டு வந்து பங்கேற்றனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், நோன்பு நோற்றவர்களாக மக்கள் நடந்து வந்ததில் கூத்தாநல்லூரே குலுங்கியது.

ஜனாஸாவைப் பார்வையிட தமுமுக தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வருவதை முன்னிட்டு பெருமளவில் போலீஸ் குவிக்கப்பட்டது. ஜனாஸாவைப் பார்வையிட்ட பேராசியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், குடும்பத்தினருக்கும் கழகத் தொண்டர்களுக்கும் ஆறுதல் கூறினார். மாநிலச் செயலாளர் கடலூர் எஸ்.எம்.ஜின்னா மற்றும் கடலூர் மாவட்ட நிர்வாகிகளும் ஜனாஸாவைப் பார்வையிட வந்தனர்.

குவைத்திலிருந்து நூர்முஹம்மதுவின் தந்தையார் வருவதை முன்னிட்டு, நல்லடக்கம் இரவு 8 மணிக்கு என முடிவு செய்யப்பட்டது.

இஃப்தார் நேரத்தின் போது கூத்தா நல்லூர் பள்ளிவாசல்கள் நிரம்பி வழிந்தன. நகரமெங்கும் பல்வேறு பகுதியைச் சேர்ந்த தமுமுக தொண்டர்கள் திரண்டிருந்தனர்.


தமுமுக சார்பில் கூத்தாநல்லூரில் எழுச்சிமிகு நிகழ்ச்சியை நடத்த ஆசைப் பட்டார் சகோ. நூர்முஹம்மது, கூத்தா நல்லூர் குலுங்குமளவுக்கு. அவர் ஆசைப் பட்ட படி தொண்டர்கள் வந்து குவிந்த போது, சகோ. நூர்முஹம்மது உயிருடன் இல்லை என்பது நெஞ்சை நெகிழ வைத்தது.

7.45 மணியளவில் பல்லாயிரம் பேர் கண்கலங்க, சகோ. நூர்முஹம்மதுவின் உடல் கூத்தாநல்லூர் பெரிய பள்ளிவாசலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, தொழுகை நடத்தப் பட்டு, முஃமின்களின் பூங்காவில் அடக்கம் செய்யப்பட்டது.

நல்லடக்கத்திற்குப் பிறகு நடந்த இரங்கல் கூட்டத்தில் ஆயிரக்கணக் கானோர் பங்கேற்றனர். தாஜுதீன் தலைமையேற்க, தமிமுல் அன்சாரி, பேரா. ஹாஜாகனி உணர்ச்சிகரமாக இரங்கலுரை ஆற்றினர்.


சகோ. நூர்முஹம்மதை அடக்கம் செய்ததோடு, உள்ளூர்வாசி வெளியூர்வாசி போன்ற மார்க்க விரோத பேதங்களை குழிதோண்டி புதையுங்கள் என்று உருக் கமான வேண்டுகோள் விடுத்தனர். ஊர் இளைஞர்கள் பேரெழுச்சியுடன் இதை வரவேற்றனர். இன்ஷாஅல்லாஹ் எதிர் காலம் ஒளிபெற, நூர்முஹம்மதுவின் தியாகம் வழிகோலட்டுமாக.

வேடிக்கைப் பார்த்த வேதனை
பள்ளிவாச­ல் இருந்த சிலர் கொஞ்சம் கூட மனிதாபிமானமில்லாமல் நூர்முஹம்மதுவைப் பார்த்து, நீங்க வெளியே போயிருங்க என்று கூறி தாங்கள் தப்பித்தால் போதும் என்ற போக்கில் செயல்பட்டுள்ளனர்.
இது குடிபோதையில் இருந்த அனஸுக்கு வசதியாகப் போய்விட்டது. வெளியே வந்த நூர்முஹம்மதுவை கண் இமைக்கும் நேரத்தில் அனஸ் கத்தியால் சரமாரியாக குத்த, நிலைகுலைந்து கீழே விழுந்திருக்கிறார் நூர்முஹம்மது.
அப்பகுதி பெண்கள் அலறி பக்கத்தில் பள்ளிவாச­ல் நின்றவர்களை அழைக்க, அந்த ஆண்கள் சிறிதும் இரக்கமின்றி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
அவர்கள் தடுத்திருந்தால் நூர்முஹம்மதுவை நூ­ழையில் காப்பாற்றி இருந்திருக்கலாம். அப்படிச் செய்யவில்லை. ரத்த வெள்ளத்தில் துடித்த அந்தப் போராளி மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிர் துறந்தார். தீமைக்கு எதிராகப் போராடியதால், நூர்முஹம்மது ஷஹீதாக்கப்பட்டார்.

படுகொலை செய்யப்பட்ட நூர்முஹம்மது முகவரி

எஸ்.எச். அப்துல் சலாம் (தந்தை),
33, அன்வரியா தெரு,
கூத்தாநல்லூர் 614 107.

No comments :