Tuesday, September 1, 2009

த.மு.மு.க. நிர்வாகி குத்திக் கொலை




த.மு.மு.க. நிர்வாகி குத்திக் கொலை:
கூத்தாநல்லூரில் கடைகள் அடைப்பு, போலீஸ் குவிப்பு, தி.மு.க. பிரமுகர் சரண் அடைந்தார்



கூத்தாநல்லூர், ஆக.31-

கூத்தாநல்லூரில் த.மு.மு.க. நிர்வாகியை கத்தியால் குத்தி கொலை செய்த தி.மு.க. பிரமுகர் போலீசில் சரண் அடைந்தார். இதனால் கடைகள் அடைக்கப்பட்டதால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

த.மு.மு.க. நிர்வாகி கொலை

கூத்தாநல்லூர் அன்வாரியா தெருவைச் சேர்ந்தவர் நூர்முகம்மது (வயது 32). தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக மாவட்ட தொண்டரணிச் செயலாளர். அதே தெருவைச் சேர்ந்தவர் அனஸ்மைதீன் (வயது 32). தி.மு.க. 22-வது வார்டு பிரதிநிதி. இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மாலை கூத்தாநல்லூர் அன்வாரியாதெரு பள்ளிவாசல் அருகே இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் அனஸ்மைதீன், நூர்முகமதுவை ஓடஓட விரட்டி கத்தியால் குத்தியதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த நூர்முகம்மது மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நூர்முகம்மது பரிதாபமாக இறந்தார்.

தி.மு.க. பிரமுகர் சரண்

இந்த சம்பவம் குறித்து கூத்தாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்.நடராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இதற்கிடையே அனஸ்மைதீன் நேற்று காலை கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே த.மு.மு.க. நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நேற்று கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் கூத்தாநல்லூரே வெறிச்சோடி காணப்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில், கூத்தாநல்லூர் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் ஆயுதம் தாங்கிய போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். முக்கிய இடங்களில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

கொலை செய்யப்பட்ட நூர்முகம்மதுவின் உடல் மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநிலத்தலைவர் ஜெகபருல்லா, மாநிலச்செயலாளர் காஜாகனி, கோவை சாதிக், மாநில துணைச்செயலாளர் கடலூர் ஜின்னா, மாநில பொதுச் செயலாளர் தமீம்அன்சாரி உள்பட ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

No comments :