Saturday, August 29, 2009

கீழக்கரை பழைய குத்பா மசூதியில் 380 ஆண்டுகளுக்கு பின் ஜும்மா தொழுகை

கீழக்கரை பழைய குத்பா மசூதியில் 380 ஆண்டுகளுக்கு பின் ஜும்மா தொழுகை

ராமநாதபுரம், ஆக. 28: கீழக்கரையின் தொடக்க கால தாய் மசூதியான பழைய குத்பா மசூதியில் 380 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் உள்ள பழைய குத்பா மசூதி சுமார் 1000 வருடங்களுக்கு முன்பு இஸ்லாமியர்களால் நிறுவப்பட்டது. பின்னர் மக்கள்தொகை அதிகமான காரணத்தால் இடவசதி பற்றாக்குறை ஏற்பட்டது.

380 ஆண்டுகளுக்கு முன்னர் அந்தக் காலத்தில் வாழ்ந்து வந்த வள்ளல் சீதக்காதி மரைக்காயர் கீழக்கரை நடுத் தெருவில் பெரிய ஜும்மா பள்ளியை நிறுவி, அதில் இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்றுகூடி வெள்ளிக்கிழமை தோறும் குத்பா தொழுகை நடத்தி வந்தனர்.

இதனால் வெள்ளிக்கிழமை தோறும் பழைய குத்பா மசூதியில் நடந்துவந்த ஜும்மா தொழுகை நடைபெறாமல் இருந்தது.

தற்போது கீழக்கரையில் மேலத்தெரு புதுப்பள்ளி மசூதி, தெற்குத் தெரு மசூதி, கிழக்குத் தெரு அப்பா பள்ளி மசூதி, நடுத்தெரு பெரிய ஜும்மா மசூதி மற்றும் பழைய குத்பா மசூதி உள்பட 5 மசூதிகளில் குத்பா தொழுகை நடந்து வருகிறது.

மக்கள்தொகை அதிகமானதன் காரணமாக பழைய குத்பா மசூதியில் 380 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை நடந்தது குறிப்பிடத் தக்கது.

No comments :