Sunday, February 23, 2014

உ.பி.யின் அதிகாரமிக்க அமைச்சர் ஆஜம் கானுடன் தமுமுக குழு சந்திப்பு


 உ.பி. மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரும் சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளருமான திரு. ஆஜம் கான பல்கலைகழகத்தில் எங்களை வரவேற்றக் காட்சி

உ.பி.யின் அதிகாரமிக்க அமைச்சர் ஆஜம் கானுடன் தமுமுக குழு சந்திப்பு
உத்தரபிரதேச மாநில அரசியல் அரங்கில் தனக்கென தனியான இடத்தைப் பெற்றிருப்பவர் ராம்பூர் தொகுதியிலிருந்து 8 முறை உ.பி. சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முஹம்மது ஆஜம் கான்.உ.பி. அமைச்சரவையில் நான்காவது முறையாக காபினெட் அமைச்சராக இருந்து வருபவர். அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தில் பயிலும் போது பல்கலைகழக மாணவர் சங்கத்தின் செயலாளராக இருந்தவர் இன்றைய உ.பி. ஆட்சியில் அதிகாரமிக்கவராக விளங்குபவர். இவரைப் பற்றி பல பார்வைகள் இருந்தாலும் முசாப்பர்நகர் கலவரம் தொடர்பாக கள ஆய்வு செய்த நமது குழு இவரைச் சந்தித்தப் போது பெரும் பிரமையை ஏற்படுத்தினார்.
கலவரக் களத்தில் நாம் பார்த்ததை தெரிவிப்பதற்காகவும் அம்மக்களின் சார்பாக கோரிக்கை வைப்பதற்காகவும் இன்று ராம்பூரில் (தலைநகர் லக்னோவிலிருந்து சுமார் 325 கிமீ தொலைவில் உள்ளது) அவரைச் சந்தித்தோம். அவர் உருவாக்கி வரும் மவ்லானா முஹம்மது அலி ஜவ்ஹர் பல்கலைகழகத்தின் வளாகத்தின் வாயிலில் எங்களை வரவேற்று அழைத்துச் சென்றார். இவரது தனி மருத்துவராக இருக்கும் வாணியம்பாடி ஹக்கீம் அக்பர் கவ்ஸர் அவர்கள் முன்கூட்டியே நமது பணிகளைப் பற்றி விரிவாக எடுத்துரைத்திருந்தார்.
எங்களை பிரமிக்க வைத்தது கல்வியில் மிகவும் பின்தங்கியிருக்கும் உ.பி. முஸ்லிம்கள் அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்திற்கு பிறகு உருப்படியாக எந்தவொரு கல்வி நிறுவனத்தையும் உருவாக்கவில்லை. இந்த நிலையில் 250 ஏக்கர் நிலத்தில் ஆஜம் கான் இந்த பல்கலைகழகத்தை உருவாக்கியிருக்கிறார். கலை அறிவியல் பொறியியல் துணை மருத்துவப் படிப்புகள் சட்டம் கல்வி என்று சகல துறையிலும் இங்கு வகுப்புகள் உள்ளன. அடுத்த ஆண்டு மருத்துவம், வேளான்மை மற்றும் ஊடகவியல் படிப்புகளும் தொடங்கப்பட உள்ளன.
கோசி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த பல்கலைகழக வளாகத்தின் நடு நாயகமாக மஸ்ஜித் உமர் என்ற பெயரில் பிரமாண்டமான பள்ளிவாசல் கட்டப்பட்டு வருவதையும் எங்களுக்கு சுற்றி காண்பித்தார். ஒரே நேரத்தில் 7500 பேர் தொழுகை நடத்தும் வகையில் இந்த பிரமாண்டமான பள்ளிவாசல் கட்டப்பட்டு வருகின்றது. இதே போல் நவீன முறையில் உள்விளையாட்டு அரங்கமும் கட்டப்பட்டு வருகின்றது.
எங்களை தனது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு பல்கலைகழக வளாகத்தின் ஒவ்வொரு பகுதியையும் சுற்றிக் காண்பித்தார். இப்பல்கலைகழகத்தில் முஸ்லிம் மாணவர்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு உண்டு என்று தெரிவித்தார். நான் தமிழக மாணவர்களுக்கு இங்கு இடம் உண்டா என்று கேட்டப்போது தாரளமாக அவர்களை வரவேற்கிறேன் என்றார்.
ராம்பூரில் மக்களிடையே நாம் பேசும் போது அவரது செல்வாக்கு தெளிவாக புரிந்தது. மிக குறைந்த கட்டணத்தில் 24 மணிநேரமும் மின்சாரம், இலவச குடிநீர் வீடுகளுக்கு என்று பல சேவைகளை செய்து வருகிறார். ஊடகங்கள் பல நேரங்களில் அவரது பேச்சுகளை திரித்து வெளியிட்டு விடுகின்றன. இப்பல்கலைக்கழகம் நன்கொடைகள் மூலமாக கட்டப்பட்டு வருகின்றது என்று நம்மிடம் தெரிவித்த அவர் இதில் 80 விழுக்காடு முஸ்லிமல்லாத அன்பர்கள் அளித்தது என்று குறிப்பிட்டார். இங்கு உள்ள ஏனைய தனியார் உயர் கல்வி நிறுவனங்களை விட மிக குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகின்றது என்று இவ்வூரில் பணியாற்றும் செய்தியாளர் ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.
நான் பல்வேறு பல்கலைகழக வளாகங்களை உலகில் பல நாடுகளில் பார்த்துள்ளேன். இதுவரை என்னை கவர்ந்தது மலேசியாவில் உள்ள சர்வதேச இஸ்லாமியப் பல்கலைகழகத்தின் வளாகம். அதற்கு அடுத்த நிலையில் உள்ளது ராம்பூர் மவ்லானா முஹம்மது அலி ஜவ்ஹர் பல்கலைகழகம்.
உ.பி.யை ஆட்சி செய்யும் சமாஜ்வாதி கட்சியின் அமைச்சரவையில் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருக்கும் ஆஜம் கானிடம் நாம் முஸாப்பர்நகர் கலவரம் தொடர்பாக நமது கள ஆய்வில் பார்த்தவற்றை விவரித்ததுடன் எழுத்துபூர்வமாக நாங்கள் அளித்த கோரிக்கையை வரிவிடாமல் படித்து விளக்கங்களை அளித்தார். முதலமைச்சரின் கவனத்திற்கு அதனை எடுத்துச் சொல்வதாக கூறினார். உ.பி.யில் வாழும் முஸ்லிம்களுக்கு அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தனி இடஒதுக்கீடு உங்கள் காலத்தில் அளிக்கப்படாவிட்டால் வேறு எப்போதும் கொடுக்கப்பட மாட்டாது என்று நாம் தெரிவித்தப் போது ஆந்திராவில் அளிக்கப்பட்டு நீதிமன்றம் தடைச் செய்ததை அவர் குறிப்பிட்டார். நாம் கேரளாவில் கர்நாடகத்தில் தமிழகத்தில் சட்டச்சிக்கல் இல்லாமல் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு இருப்பதை எடுத்துச் சொல்லி அது தொடர்பான ஆணைகளை தருகிறோம் என்று சொன்ன போது அவற்றை தருமாறும் அவற்றை ஆய்வுச் செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.
விடுதலைப் போராட்டத்தில் காந்தியடிகளுக்கே ஊக்க சக்தியாக இருந்த மவ்லானா முஹம்மது அலி ஜவ்ஹர் பிறந்தது இதே ராம்பூரில் தான். அதே ஊரில் அரசியல் ரீதியாக மட்டுமில்லாமல் ஒரு கல்வி புரட்சியை ஆஜம் கான் செய்து வருகிறார் என்று சொன்னால் மிகை ஆகாது.
ராம்பூர் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளில் சுமார் 60 விழுக்காடு முஸ்லிம் வாக்களார்கள் உள்ளனர்
ஆஜம் கான் ஒரு சராசரி அரசியல்வாதியல்ல. அவர் ஒரு தொலை நோக்கு சிந்தனையுடன் செயல்படும் ஒரு உண்மையான கல்வி தந்தை என்பதையும் இந்த சந்திப்பில் உணர்ந்துக் கொண்டோம்.
(குறிப்பு தமுமுக ஆய்வு குழுவில் இடம் பெற்ற சகோதர்ர் ஹைதர் அலியும் நானும் தலைநகர் லக்னோவில் அரசு ரீதியான நடவடிக்கைகளுக்காக வந்து விட்டோம். பொருளாளர் ஒ.யூ. ரஹ்மதுல்லாவும் மவ்லவி சம்சுதீன் நாசர் உமரியும் தொடர்ந்து கள அய்வுகளை முசாப்பர்நகர் பகுதியில் செய்து வருகின்றார்கள்


இப்படிக்கு 
மூத்த தலைவர்கள் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ, 

No comments :