Thursday, January 23, 2014

அப்சல் குருவை கள்ளத்தனமாக தூக்கிலிட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்

மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை வீரப்பன் கூட்டாளிகள் எனக் குற்றம் சாட்டப்பட்ட பிலவேந்திரன், சைமன், ஞானப்பிரகாசம், மீசை மாதையன் உள்பட 15 நபர்களுக்கு வழங்கப்பட்ட மரணத் தண்டனையை ரத்து செய்து நேற்று (ஜனவரி 21) உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நீதியரசர் சதாசிவம், நீதியரசர்கள் ரஞ்சன் கோகோய், சிவ் கீர்த்திசிங் ஆகிய மூவர் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கதாக அமைந்துள்ளது. மரணத் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுவை பரிசீலிக்க குடியரசுத் தலைவர் அல்லது மாநில ஆளுநர் காலதாமதம் செய்தால் மரணத் தண்டனை ரத்துச் செய்யப்பட வேண்டும் என்பது மட்டுமின்றி மனநோயாளியாக இருப்பவர்களுக்கும் தனிமை சிறையில் அடைக்கப்பட்டவர் களுக்கும் மரணத் தண்டனை அளிக்கப்படக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளாதால் உச்சநீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கதாகவும் பாராட்டிற்குரியதாகவும் அமைந்துள்ளது. கடந்த ஏப்ரல் 2013ல் நீதியரசர்கள் சிங்கிவி மற்றும் முக்கோபாத்யாயா ஆகியோர் அடங்கிய அமர்வு, தேவேந்தர் சிங் புல்லார் வழக்கில் கருணை மனுவை பரிசீலிப்பதற்கு தாமதம் ஏற்பட்டது என்பதினால் அவர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டயை ரத்து செய்ய முடியாது என்றும் இதே போல் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட மரண தண்டனைக் கைதிகளின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பிறகு அவர்களின் மேல்முறையீடு மனுவைப் பரிசீலிக்க இயலாது என்றும் தீர்ப்பளித்தார்கள். இந்த தீர்ப்பை நிராகரிக்கும் வகையில் தான் நேற்றைய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது. அப்ஸல் குரு விவகாரத்தில் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்காமல் கள்ளத்தனமாக அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதை மறைமுகமாகச் சாடும் வகையில் தலைமை நீதியரசர் சதாசிவம் அளித்த தீர்ப்பு அமைந்துள்ளது. மரணத் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு 14 நாட்களுக்கு முன்பு கைதியின் குடும்பத்தினருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களை சந்திக்கவும் தான் விரும்பும் உணவை சாப்பிடுவதற்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ள கைதிக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு இந்த தீர்ப்பின் அடிப்படையில் அப்ஸல் குருவின் குடும்பத்தினரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவசர கதியில் அப்சல் குரு தூக்கிலிடப்படுவதற்கு காரணமாக இருந்த உள்துறை அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்படுவதுடன் சட்டவிரோதமாக அப்சல் குருவிற்கு மரண தண்டனையை நிறைவேற்றிய அமைச்சர் உட்பட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோருகிறோம். பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகிய மூன்று தமிழர்கள் மரண தண்டனை அளிக்கப்பட்டு அவர்கள் கருணை மனு 11 ஆண்டுகள் கழித்து நிராகரிக்கப்பட்டது. தற்போது உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள நேர்மையான தீர்ப்பின் அடிப்படையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையும் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

 ஒப்பம் (எம்.எச்.ஜவாஹிருல்லா)

No comments :