Tuesday, January 4, 2011

கோட்டக்குப்பத்தில் நல்லகுடிநீருக்காக ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம் கோட்டக் குப்பத்தில் 30 ஆயிரம் மக்கள் வாழும் பகுதியாக உள்ளது. ஆனால், இங்கு குடிநீர் மிகவும் மாசடைந்து, உப்பு நீராகவும், பாக்டீரியா கிருமிகள் நிறைந்ததாகவும் உள்ளது. இந்த குடிநீர் குடித்தால் வாந்தி, பேதி, காய்ச்சல் போன்ற கடுமையான நோய்கள் ஏற்படும் ஆபத்து உள்ளதாக புதுவை பொதுப்பணித்துறையின் தண்ணீர் ஆய்வு சோதனைக் கூடத்தின் மூலம் குடிநீரை ஆய்வு செய்ததில் தெரியவந்துள்ளது.
பேரூராட்சியால் வழங்கப்படும் குடிநீர் மேல்நிலை தொட்டிக்கு எந்தவித பாதுகாப்பும் பராமரிப்பும் இல்லாத அவலநிலை உள்ளது. பூந்தோட்டமாய் இருக்க வேண்டிய குடிநீர் தொட்டி சாக்கடையாகவும், குப்பை மேடுகளாவும் மது குடிப்போரின் குளியல் தொட்டியாகவும் உள்ளது.

கோட்டக்குப்பத்தில் இயங்கிவரும் தண்ணீர் கம்பெனிகளால் மக்களின் உயிராதாரமாக கருதப்படும் நிலத்தடி நீர் நாளுக்கு நாள் உறிஞ்சப்படுவதால் கடல் நீர் கலந்து உப்பு நீராக மாறிவருகிறது.

எனவே, கோட்டக்குப்பம் பேரூராட்சியை கண்டித்தும், இங்கு இயங்கிவரும் தண்ணீர் கம்பெனிகளின் உரிமத்தை ரத்து செய்யக் கோரியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் மற்றும் மனிதநேய கட்சி சார்பில் கண்டன 29.12.2010 ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமுமுக&வின் கோட்டக்குப்பம் நகர தலைவர் ஜெ.சம்சுதீன் தலைமையேற்க, மாநில மாணவரணி செயலாளர் எம்.ஜெய்னுல் ஆபுதீன் கண்டன உரை ஆற்றினார். மேலும், மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள், கோட்டக்குப்பம் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

No comments :