Tuesday, December 7, 2010

ராமநாதபுரம் த.மு.மு.க. தொடர் முழக்கப் போராட்டம்

ராமநாதபுரம், டிச. 6: பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமநாதபுரத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திங்கள்கிழமை 3 மணி நேர தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன் நடைபெற்ற போராட்டத்திற்கு, தமுமுகவின் மாவட்ட தலைவர் எஸ்.சலிமுல்லா கான் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சாதிக் பாட்சா, மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் அன்வர் அலி, மாவட்டப் பொருளாளர் சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமுமுகவின் மாநிலச் செயலாளர் கோவை செய்யது, போராட்டத்திற்கான காரணங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.
தொடர் முழக்கப் போராட்டத்தில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் இரா.ஞானவாசகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் முருகபூபதி, மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் பாலகிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர் அஜ்மல் கான், துணைச் செயலாளர் பீர் முகம்மது ஆகியோர் உள்பட அமைப்பின் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளை கைது செய்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக ராய் பரேலி நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கை விரைந்து முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும், அலாகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பின் மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் விரைவாக விசாரித்து நியாயமான தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
ஏற்பாடுகளை தமுமுக மாவட்ட செய்தி தொடர்பாளர் பாபு மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

No comments :