Tuesday, December 7, 2010

பரமக்குடி, டிச. 6: த.மு.மு.க., ம.ம.க தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்

பரமக்குடி, டிச. 6: பரமக்குடி ஐந்துமுனை சந்திப்பில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி சார்பில், பாபர் மசூதி இடிப்பைக் கண்டித்து தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட தலைவர் மு.சம்சுதீன் தலைமை வகித்தார். மனித நேய மக்கள் கட்சி நகர் செயலாளர் அப்துல்லா சேட், எஸ்.தாஜ் மஹம்மது, ஏ.சகுபர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். த.மு.மு.க மாவட்ட செயலாளர் சகுபர் சாதிக் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தை அப்துல் ஹக்கீம் தொடக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து டி.ஐ.பி. மாநில செயலாளர் பூ.சந்திரபோஸ், மராக்சிய கம்யூனிஸ்ட் கட்சி ராஜ்குமார், காசிநாததுரை, த.மு.மு.க மாநில பேச்சாளர் வாணி சித்திக் ஆகியோர் பேசினர்.
பாபர் மசூதி வழக்கில் லிபரான் கமிஷன் சுட்டிக்காட்டிய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இந்த வழக்கு நடைபெறும் ராய் பரேலி நீதிமன்ற விசாரணைகளை விரைவுபடுத்தக்கோரியும், பாபர் மசூதி நிலம் தொடர்பான தீர்ப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் விரைந்து தீர்ப்பு வழங்கக் கோரியும், பரமக்குடி நகர் மத்தியில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா மற்றும் உழவர் சந்தைப் பகுதியில் கொட்டப்படும் நகராட்சி கழிவுகளை அகற்றக் கோரியும், மழையால் சேதமடைந்த அனைத்து சாலைகளையும் உடனடியாக செப்பனிடக் கோரியும், நகர் பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றி சுகாதார சீர்கேட்டை தவிர்க்கக் கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட துணைத் தலைவர் அப்பாஸ், துணைச் செயலாளர் இலியாஸ், மாவட்ட ம.ம.க. செயலாளர் ஜபருல்லா, மருத்துவ அணி செயலர் எஸ்.சேக் அப்துல்லா உள்பட நகர் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். நகர் தலைவர் அகமது கபீர் நன்றி கூறினார்.

No comments :