Thursday, December 2, 2010

பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 ஆம் தேதி பாளையங்கோட்டையில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி, நவ. 29: பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 ஆம் தேதி பாளையங்கோட்டையில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்த, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் முடிவு செய்துள்ளது. பாளையங்கோட்டையில் தமுமுக செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஏ. மைதீன் பாரூக் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் கே.எஸ். காசீம் பிர்தவ்ஸி, மனித நேய மக்கள் கட்சி மாவட்டச் செயலர் கே.எஸ். ரசூல் மைதீன், பொருளர் ஏ.ஆர். சர்தார் அலிகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: அரசு போக்குவரத்துக் கழகத்தில் தொழில்நுட்பப் பணியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிகளுக்கு, பெண் மருத்துவர்களே ஸ்கேன் எடுக்க வேண்டும். திருநெல்வேலி மாநகராட்சியில் நிலவிவரும் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் தேவையான மின் விளக்கு, சாலை வசதி, கணினி முன்பதிவு ஆகிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் உள்ள சிறுவர் பூங்காவை சீரமைக்க வேண்டும். மழையினால் சேதமடைந்த சாலைகளை உடனே செப்பனிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாவட்ட துணைத் தலைவர் காஜா அலாவுதீன், துணைச் செயலர்கள் செய்யது, முஜிப், மைதீன், மருத்துவ சேவை அணி செயலர் சேக் மைதீன், தொண்டரணி அப்பாஸ், இளைஞரணிச் செயலர் ஜமால், மனிதநேய வணிகர் சங்கச் செயலர் லியாவுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நன்றி : தினமணி

No comments :