Thursday, January 14, 2010

முஸ்லிம்கள் ஏன் பொங்கலைக் கொண்டாடுவதில்லை?

பொங்கல் விழா தமிழர் திருநாள் தானே. முஸ்லிம்கள் ஏன் அதை விமரிசையாகக் கொண்டாடுவதில்லை? பலர் இப்படி கேட்பதுண்டு. நமது கொள்கைக் கோட்பாடுகளை நன்கறிந்த ஒரு முஸ்லிமல்லாத கல்வியாளர் நம்மிடம் இவ்வாறு கேட்டார்.
திட்டங்களை அள்ளித் தெளித்து பணங்களை குவித்தது இந்த நிறுவனம்.
பொங்கல் திருநாளின் கோட்பாடுகள் என்ன என்று வினவினோம்.
* அறுவடையாகி வீடு வரும் புது நெல்லில் பொங்கல் செய்து, சுற்றங்கள், நட்புகளுக்கு விருந்தளித்து மகிழ்தல்,
* விவசாயத்திற்கு உதவிகரமான சூரியனுக்கும், மாடுகளுக்கும் நன்றி தெரிவித்தல்,
* உறவுகள் வளரும் வகையில் வீர விளையாட்டுகள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி சமூக ஒருங்கிணைப்பை உண்டாக்குதல்,
* இவையெல்லாம் பொங்கல் விழாவின் பின்னணிகள் என்றார்.
அப்படிப் பார்த்தால், முஸ்லிம்கள் ஆண்டு முழுவதும் பொங்கல் கொண்டாடி வருகிறோம் என்றோம். அறுவடை நெல் வந்தாலும் வராவிட்டாலும், அண்டை வீட்டாருடன் உணவைப் பகிர்ந்து கொள்வது நபிகள் நாயகம் வலியுறுத்தியுள்ள வழிமுறை.
ஆட்டின் குளம்பைக் கொண்டு குழம்பு வைத்தாலும் சற்று (தண்ணீரை சேர்த்து) அதிகமாக வையுங்கள். அண்டை வீட்டாருடன் பகிர்ந்து கொள் வதற்காக என்று நபிகள் நாயகம் தம் மனைவி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறியுள்ள செய்தி வரலாற்றில் பதிவாகி யுள்ளது.
சென்னை போன்ற மாநகரங்கள் விவசாயத்திற்குச் சம்பந்தமில்லாத வாழ்க்கை முறைக்கு வழுக்கி விழுந்து விட்டன. கடையில் அரிசி வாங்கி இங்கும் பொங்கல் கொண்டாடப் படுகிறது. ஆனால் இங்குதான், அடுத்த வீட்டில் யார் வசிக்கிறார் என்று அறியாத கூட்டம் வாழ்ந்து வருகிறது.
அடுத்த கிரகங்கள் எல்லாம் அண்டை வீடுகளாகிவிட்ட இந்த அறிவியல் யுகத்தில் அண்டை வீடுகள் நமக்கு வேற்று கிரகங்கள் போல் விலகி விட்டன. இது மிக அவலமான சமூக விபத்து.
“அடுத்த வீட்டார் பசித்திருக்க, தான் மட்டும் வயிறாற உண்பவர் உண்மை யான முஸ்லிம் இல்லை'' என்றார்கள் நபிகள் நாயகம். “அண்டை வீட்டார் யார்? என்று கேட்டதற்கு “உங்கள் வீட்டின் இரு மருங்கிலும் உள்ள 40 வீடுகளைச் சேர்ந்தோர் உங்களுக்கு அண்டை வீட்டார்தான்'' என்று நாயகம் விளக்கமளித்தார்கள்.
உணவையும், நல்லுணர்வையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது இஸ்லாமிய கோட்பாடு. அது எல்லா நாளும் தொடர வேண்டும். ஒருநாள் கொண்டாட்டத்தோடு முடிந்து விடாது.
சூரியனுக்கு நன்றியா?
சூரிய ஒளிதான் விவசாயத்திற்கு உதவுகிறது. மாடுகள் உழவுக்குப் பயன் பட்டன. ஆகவே அவற்றிற்கு நன்றி தெரிவிப்பது பொங்கலின் ஓர் அம்சம். நன்றி சொல்வது ஒரு மேன்மை மிகுந்த பண்பு. பழந் தமிழினம் மேன்மையான குணங்கள் நிரம்பிய இனம். ஆயினும் நாம் நன்றி சொல்வதை சூரியனோ, மாடுகளோ விளங்கிக் கொள்வதில்லை.
மாறாக, சூரியனையும், மாடுகளையும் படைத்த உன்னத இறைவனிடம் நாம் உண்ணும் ஒவ்வொரு பருக்கை உணவுக்கும் நன்றி சொல்லக் கடமை பட்டவர்கள் என்று உணர வேண்டும்.
மாடுகளைப் பூட்டி உழவு செய்த காலம் போய் இப்போது ட்ராக்டர் போன்ற கருவிகள் வந்துவிட்டன. மாட்டுக்கு நமது நன்றி புரியும் என்று மாட்டுப் பொங்கல் கொண்டாடினால், இப்போது ட்ராக்டருக்கு கொண்டாட வேண்டும்.
ஆண்டில் ஒருமுறை அறுவடை செய்தபோது தைப் பொங்கல். பலமுறை அறுவடை செய்யும் காலம் இப்போது வேளாண் புரட்சியால் விளைந்திருக்கிறது.
பொங்கலை ஒரு திருநாளாகக் கொண்டாடும் தமிழர்கள், அதன் விழுமி யங்களுக்குத்தான் விழா கொண்டாட வேண்டும்.
நபிகள் நாயகம் இஸ்லாமியப் பெரு நாளில் வீர விளையாட்டுக்களை நடத்தி யுள்ளார்கள். அவை வீரத்திற்கும், சமுதாய ஒற்றுமைக்கும் முக்கியத்துவம் தருவ தாகத்தான் இருக்க வேண்டும். பிற உயிர்களை வதைத்து, இன்பம் காண் பதாக இருக்கக் கூடாது.
பொங்கல் என்பது மதப் பண்டிகை அல்ல, அது ஒரு விழா தான். ஆயினும் முஸ்லிம்கள் அதை விமரிசையாகக் கொண்டாடவில்லை என்ற கூற்றுக்கு சூரிய வழிபாடு போன்ற ஆரியக் கருத் துக்கள் பொங்கலில் ஊடுருவியது ஒரு காரணம்.
பொங்கலை முஸ்லிம்கள் கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்திய நண்பர் இந்துத்துவ வெறியாளர் இல்லை. மதங்களைக் கடந்து மனிதர்கள் ஒன்று பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் உள்ளவர்.
முஸ்லிம்கள் எப்போதும் ஒற்றுமைக்கு உடன்பாடுடையவர்கள். பண்டைய வரலாற்றின் பக்கங்களே இன்றைய மக்களுக்கு இதை எடுத்துரைக்கும்.
-ஹாஜாகனி

No comments :