Saturday, April 11, 2009

லோக்சபா தேர்தலில் சமூக கூட்டணி : மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு

லோக்சபா தேர்தலில் சமூக கூட்டணி : மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு

சென்னை : ''மனித நேய மக்கள் கட்சி சமூக கூட்டணியை ஏற்படுத்தியிருக்கிறது. நாங்கள் சொல்லும் வேட்பாளர்களுக்கு 40 தொகுதிகளிலும் ஓட்டு போடுங்கள்,'' என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக பொதுச்செயலர் ஹைதர் அலி பேசினார். மனித நேய மக்கள் கட்சி பொதுக்கூட்டம் தாம்பரத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில், மனிதநேய மக்கள் கட்சி காஞ்சிபுரம் மாவட்ட செயலர் யாக்கூப் தலைமை தாங்கினார்.


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக பொதுச்செயலர் ஹைதர் அலி பேசியதாவது: முஸ்லிம் மக்களுக்கு பிரதிநிதித்துவம் பெற மனித நேய மக்கள் கட்சி உதயமாகியுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தி.மு.க.,விடம் நமது சமுதாயத்தை அடகு வைத்திருந்தது. இந்த லோக்சபா தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதியை தி.மு.க., ஒதுக்கியது. அக்கட்சியின் பொதுக்குழுவில் வேலூர் தொகுதி நமக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றும், அதற்கு நான் தான் வேட்பாளர் என்றும், ஏணி சின்னத்தில் போட்டியிடுகிறோம் என்றும் காதர்மொய்தீன் கூறியிருந்தார். அவர் சார்ந்த கட்சியில் அவரால் கூட சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. தற்போது வேலூர் தொகுதியின் வேட்பாளரும், தொகுதியின் சின்னமும் மாற்றப்பட்டுவிட்டது. எனது சமுதாயத்தின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக நான் வகித்து வந்த வக்பு வாரிய தலைவர் பதவியை துறந்துவிட்டு வந்திருக்கிறேன். ஒரு 'சீட்' வாங்கி லோக்சபாவை பார்க்க நாங்கள் விரும்பவில்லை.

மனிதநேய மக்கள் கட்சி ஒரு சமூக கூட்டணியை ஏற்படுத்தியிருக்கிறது. தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த புதிய தமிழகம், நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த சமத்துவ மக்கள் கட்சி ஆகியவை நம்முடன் கூட்டணி வைத்து போட்டியிட உள்ளன. கிடைத்த வாய்ப்பை ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட அனைத்து சமுதாய மக்களுக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வரும் லோக்சபா தேர்தலில் தமிழகம், புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் நாங்கள் யாருக்கு ஓட்டு போட சொல்கிறோமே, அவர்களுக்கு ஓட்டுப் போடுங்கள். நம்மை இழந்தவர்களுக்கு நாம் நல்ல பாடம் கற்றுத்தர வேண்டும். இவ்வாறு ஹைதர் அலி பேசினார். தலைமை கழக பேச்சாளர் கோவை சையது உள்ளிட்ட பலர் பேசினர்.

No comments :