Sunday, April 12, 2009

மனித நேய மக்கள் கட்சி 20 தொகுதிகளில் போட்டி

சென்னை: தமிழகத்தில் 20 தொகுதிகளில் போட்டியிடுவோம் என்று மனித நேய மக்கள் கட்சி அறிவித்துள்ளது. மேலும் சரத்குமார் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதாகவும், அவர்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதில் நாங்கள் இருக்க மாட்டோம் என்றும் அறிவித்துள்ளது.

முதலில் திமுக கூட்டணியில் இடம் பெற முயன்று 4 சீட் கேட்டது. ஒரே ஒரு இடம் தான் தர முடியும் என திமுக கூறிவிட்டது. இதையடுத்து அதிமுக கூட்டணியில் இணையப் போவதாகக் கூறப்பட்டது. ஆனால், அதிமுக வேட்பாளர் பட்டியலும் மதிமுகவுடனான தொகுதிப் பங்கீடும் வெளியானபோது அதில் இந்தக் கட்சிக்கு இடம் ஏதும் தரப்படவில்லை,

இந் நிலையில் மனித நேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளருமான ஹைதர் அலி நிருபர்களிடம் பேசுகையில்,

மனித நேய மக்கள் கட்சி மத்திய சென்னை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, தஞ்சாவூர் உள்பட 20 தொகுதிகளில் போட்டியிடும். வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை ஆகியவை 13ம் தேதி வெளியிடப்படும்.

நாங்கள் சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம், இதயத்துல்லா தலைமையிலான இந்திய தேசிய லீக் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளோம். ஆனால் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் கட்சியுடன் நிச்சயமாக இருக்க மாட்டோம். (சரத்குமார்-பாஜக கூட்டணி ஏற்பட்டால் இந்தக் கட்சி சரத்துடனான கூட்டணியிலிருந்து வெளியேறும்)

முதலில் நாங்கள் திமுக கூட்டணியில்தான் இருந்தோம். ஆனால், அவர்கள் எங்களுக்கு ஒரு தொகுதிதான் தருவதாகக் கூறினார்கள். எனவே நாங்கள் வெளியேறிவிட்டோம்.
இதன் பின்பு அதிமுகவினர்தான் எங்களுடன் கூட்டணி குறித்து பேசினார்கள். எங்களுக்கு 2 தொகுதிகள் ஒதுக்குவதாகவும், ஆனால் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடவேண்டும் என்றும் கூறினார்கள். இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லாததால் கூட்டணி வைத்துக் கொள்ளவில்லை.

காங்கிரஸ் மேலிட பார்வையாளர் குலாம்நபி ஆசாத்தும் எங்களுடன் கூட்டணி குறித்துப் பேசினார்.

திமுக கூட்டணியில் இருந்தபோது எனக்கு வக் போர்டு வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டது. இப்போது அந்தப் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். எங்களுக்கு கொள்கை லட்சியம்தான் முக்கியம். பதவி ஒரு உபகரணம்தானே தவிர, பதவியே எங்கள் நோக்கம் அல்ல.

மத்திய சென்னையில் நான் போட்டியிடவேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகிறார்கள். இதுபற்றி எங்கள் கட்சியின் மத்திய கமிட்டி முறையாக அறிவிக்கும். மத்திய சென்னையில் 3 லட்சத்திற்கு மேற்பட்ட முஸ்லீம் ஓட்டுகள் உள்ளன. இந்த வாக்குகள்தான் வெற்றியை நிர்ணயம் செய்யும். இந்த தொகுதியில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு மிக நன்றாகவே உள்ளது.

வேலூரில் திமுக வேட்பாளர்தான் நிறுத்தப்பட்டுள்ளார் (உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லீ்ம் வேட்பாளர்). அந்த தொகுதியில் எங்கள் கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்துவதா, வேண்டாமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.

news by oneindia.in

No comments :