Sunday, September 14, 2014

தத்தளிக்கும் காஷ்மீர்: ஒரு முக்கிய வேண்டுகோள்

தத்தளிக்கும் காஷ்மீர்:
ஒரு முக்கிய வேண்டுகோள்
உலகில் உன்னதமான சுற்றுலாத்தலமான, இயற்கை எழில் நிறைந்த காஷ்மீர், சமீபத்தில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளப் பெருக்கினால் அழிவின் அடையாளமாக காட்சியளிக்கிறது.
மழை நின்று ஒருவாரம் ஆகியும் வெள்ளத்தின் காரணமாக ஸ்ரீநகரின் வீதிகள் அனைத்துமே மூழ்கியுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டாலும், லட்சக்கணக்கான மக்கள் அதிலே மாட்டிக்கொண்டு இன்னமும் பரிதவித்து வருகின்றனர்.
வீடுகளை, உடைமைகளை இழந்தவர்களாக, உடுப்பதற்கும், உண்ணுவதற்கும் இல்லாதவர்களாக காஷ்மீர் மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். அடுத்த வேளை உணவிற்கு ஏங்கி நிற்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இப்போதும் பல கிராமங்கள் மூழ்கிக் கிடக்கின்றன. வெள்ளம் வடிந்து இயல்பான நிலைக்கு அவர்கள் திரும்பவே நீண்ட காலம் ஆகலாம்.
கடந்த 100 ஆண்டுகளில் ஏற்படாத ஒரு மோசமான வெள்ளப் பேரழிவு இது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மத்திய, மாநில அரசுகளும், இந்திய ராணுவமும் மீட்புப் பணியில் ஈடுபட்டும், உதவியும் செய்து வருகின்றன. எனினும் அங்கிருந்து வரக்கூடிய செய்திகளும், அங்குள்ளவர்களுடன் நாம் தொடர்பு கொண்டபோது கிடைத்த செய்திகளும் நம்மை மிகுந்த வேதனைக்குள்ளாக்குகின்றன. அதிர்ச்சியடைய செய்கின்றன.
இந்தியாவின் எந்தப் பகுதியில் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், அந்த துயரத்தில் பங்குபெற்று உதவிகளை செய்துவரக்கூடிய தமுமுக, ஏற்கனவே குஜராத் நிலநடுக்கத்தின் போதும், ஒரிஸ்ஸா வெள்ள பாதிப்பின்போதும் கோடிக்கணக்கில் நிதியுதவியும், பொருளுதவியும் செய்திருக்கிறது.
அதேபோல் காஷ்மீர் துயரத்திலும் தன்னை இணைத்துக் கொள்கிறது. தன்னுடைய லட்சக்கணக்கான தொண்டர்களையும் அந்த துயரத்தில் பங்கெடுக்கச் செய்யும் விதமாக அம்மாநில மக்களுக்காக தாராள பொருளாதாரத்தைத் திரட்டி, அனுப்புவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே உ.பி. மாநிலம் முசப்பர் நகர் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பொருளுதவிகளை கொண்டு சேர்க்க எடுக்கப்பட்ட முயற்சியின் இறுதிக்கட்டமாக வரும் 19.09.2014 அன்று நமது கழகத்தின் மூத்த தலைவர் எஸ். ஹைதர் அலி அவர்களும், பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் அவர்களும் முசப்பர் நகர் செல்ல இருக்கிறார்கள்; இன்ஷாஅல்லாஹ்.
அதேபோன்று காஷ்மீர் மக்களுக்காகவும் நம்மால் இயன்ற அளவிற்கு குறைந்தது 2 கோடி ரூபாயாவது திரட்ட முடிவு செய்துள்ளோம். மாநில துணைத் தலைவர் குணங்குடி ஆர்.எம்.அனிபா அவர்களின் தலைமையில் மாநிலச் செயலாளர்கள் கோவை செய்யது, பி.எஸ்.ஹமீது ஆகிய மூவர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஆகவே துண்டுப்பிரசுரங்கள், பிற தகவல் தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் காஷ்மீர் துயரத்தை எடுத்துச்சொல்லி நிதி திரட்ட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். அதேபோல் அடுத்தடுத்து வரக்கூடிய ஒவ்வொரு ஜும்ஆவிலும், எதிர்வரும் ஹஜ் பெருநாள் தினத்தன்றும் அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் ஈத்காக்களிலும் நிதி திரட்டி காலதாமதமின்றி வரும் 10.10.2014க்குள் தலைமையிடம் ஒப்படைக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
நீங்கள் செய்யும் தாராள பொருளுதவி பாதிக்கப்பட்ட காஷ்மீர மக்களின் கண்ணீரைத் துடைப்பதுடன், இறைவனின் அருளையும் பெற்றுத்தரும் என்பதையும் மறவாதீர்.
- தமுமுக தலைமையகம்

No comments :