Thursday, March 28, 2013

கல்பாக்கத்தில் ஜனநாயக வழியில் போராடிய தமுமுக, மதிமுக தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் : எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ

மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அவர்கள் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

* கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம், மெய்யூர் பகுதிக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்.

* கல்பாக்கத்தைச் சுற்றியுள்ள மக்களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

* ஏற்கனவே இங்கு இயங்கும் அணுஉலைகள் தவிர புதிய அணுஉலைகள் அமைக்கக் கூடாது, கதிர்வீச்சு தன்மையை அறியவும், கதிர்வீச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கவும் அனைத்து வசதிகளும் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை ஒன்றை கல்பாக்கம் அருகில் அமைக்க வேண்டும்.

* நாட்டில் இயங்கும் எந்த அணுஉலைகளின் கழிவுகளையும் கடல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொட்டக்கூடாது.

* அணுசக்தி துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் சுற்றுப்புற கிராம மக்களின் குழந்தைகளுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் இடம் ஒதுக்க வேண்டும்


- ஆகிய ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கல்பாக்கத்தில் அறவழியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இன்று இதே கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த போராட்டக் குழுவினர் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் அனுமதி தரப்படவில்லை. இருப்பினும் போராட்டக் குழுவினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முற்பட்டுள்ளனர்.

இந்நிலையில் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட 500 பேரை காவல்துறையினர் கைது செய்து, 15 நாள் சிறைக் காவலில் அடைத்துள்ளனர். அறவழியில் போராட்டம் நடத்தியவர்களைக் காவல்துறை கைது செய்ததை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

சமீபத்தில் சட்டப்பேரவையில், கெயில் நிறுவனம் விவசாய நிலங்களில் குழாய் பதிப்பது தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்துப் பேசிய தமிழக முதல்வர் அவர்கள், மக்களுக்காகவே திட்டம், திட்டத்திற்காக மக்கள் அல்ல என்று மிகத்தெளிவாகக் குறிப்பிட்டார். இதே அடிப்படையில் தான் கல்பாக்கம் பகுதி மக்கள் தங்கள் வாழ்வுரிமைக்காகப் போராடி வருகிறார்கள். அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தமிழக முதலமைச்சர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்பாக்கம் போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனே விடுதலை செய்ய உத்தரவிட வேண்டுமென தமிழக முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்

No comments :