Monday, March 25, 2013

இராமேஸ்வரம் மக்கள் அமைதி காக்க ம.ம.க எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா வேண்டுகோள்


இராமேஸ்வரத்தில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கிடையே நடைபெற்ற வாக்குவாதம் கலவரமாக மாறியதற்கு ம.ம.க இராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
இராமேஸ்வரம் நகரத்தில் 22.03.2013 அன்று நடந்த விரும்பத்தகாத சம்பவங்கள் அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.. ஆட்டோ ஒட்டுனர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட சிறு வாக்குவாதம் பெரிய சேதங்களை ஏற்படுத்தி இருப்பது கவலை அளிப்பதாகவுள்ளது. ஏற்கனவே இலங்கை கடற்படை செய்யும் அட்டூழியம் காரணமாக இராமேஸ்வரம் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாக ஆக்கப்பட்டுள்ள சூழலில் சுற்றுலா மற்றும் கோவிலை சார்ந்த தொழிலும் பாதிக்கப் பட்டுவிடக்கூடாது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
1980 களில் நிகழ்ந்த ஒரு சில விரும்ப தகாத சம்பவத்தை தவிர்த்து பொதுவாக இராமேஸ்வரம் என்பது சமாதான பூமியாகவே காலங் காலமாக திகழ்ந்து வருகிறது. எனவே அமைதியை காக்க அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும். எந்த பிரச்சினையாக இருந்தாலும் பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண வழி இருக்கிறது. வன்முறை அனைவருக்கும் பாதிப்புகளையே ஏற்படுத்தும். எனவே இராமேஸ்வரத்தில் அனைத்து தரப்பினரும் அமைதி காத்து சுமூக சூழல் ஏற்பட ஒத்துழைக்க வேண்டும் என்று மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

No comments :