Saturday, March 16, 2013

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்: இலங்கை மீது ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் : மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.வலியுறுத்தல்


மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை

இராமேஸ்வரம் மீனவர்கள் உட்பட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். சமீப காலத்தில் இத்தகைய தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது .குறிப்பாக எனது இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இராமேஸ்வரம் தீவு பகுதி மீனவர்கள் 53 பேரை இலங்கை கடற்படை வம்புக்காக கைது செய்துள்ளது.தொடர்ந்து நடைபெற்று வரும் இலங்கை கடற்படையின் அராஜகப் போக்கினால் இராமேஸ்வரம்மீனவர்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டிய மத்திய அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல் இலங்கை நட்பு நாடு என்று வர்ணித்து வருகிறது . இந்திய கடற்படையும், கடலோர பாதுகாப்பு படையும் தமிழக மீனவர்களை பாதுகாக்க தவறி விட்டன. தமிழக மீனவர்களை கொன்று,காயப்படுத்திய இலங்கை கடற்படை மீது சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் இந்தியா வழக்கு தொடுக்க வேண்டும்.இலங்கை கடற்படையால் கடந்த 25 ஆண்டுகளாக தாக்குதலுக்கு உள்ளாகி பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு இலங்கை அரசிடமிருந்து இழப்பீட்டு தொகையை மத்திய அரசு பெற்று தர வேண்டும்.
தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இலங்கை மீது ராணுவ நடவடிக்கை எடுக்கவும்,கச்சதீவை மீட்கவும் மத்திய அரசு முன்வர வேண்டும்.இதுவே இப்பிரச்சினைக்கு தீர்வாக அமையும்.மத்திய அரசு தனது கடமையை உணர்ந்து செயல்பட்டு தமிழக மீனவர்கள் மீண்டும் தாக்கப்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை போர்கால அடிப்படையில் எடுக்க வேண்டும்.

No comments :