Friday, April 12, 2013

முஸ்லிம் மாணவிகளுக்கு சென்னையில் மாணவியர் விடுதிகள் அமைக்க வேண்டும்


08.04.2013 அன்று தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடரில் பேரா எம் எச் ஜவாஹிருல்லா அவர்களில் கேள்வியும் அமைச்சரின் பதிலும்
முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: சென்னையில் சிறுபான்மையினர் நலத்துறை கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகள் அமைக்க அரசு முன்வருமா?
மாண்புமிகு முஹம்மத் ஜான்(பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்): மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு முதலமைச்சர் முதல்வராக ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரு சில மாதங்களிலேயே சிறுபான்மையின சமுதாயத்திற்கு 8 விடுதிகளை அளித்தார்கள், அதில் ஒரு விடுதியை சென்னை இராயப்பேட்டையில் கல்லூரி மாணவியர்கள் 100 பேர் தங்கிப் படிக்கும் வகையில் துவங்குவதற்காக ஆணையிட்டுள்ளார்கள், இந்த ஆண்டு முதல் இந்த விடுதி செயல்படத் தொடங்கும், தற்போது சென்னையில் சிறுபான்மையின கல்லூரி மாணவியர் விடுதிகள் தொடங்குவது குறித்து கருத்துரு எதுவும் தற்சமயம் அரசின் பரிசீலனையில் இல்லை, இருப்பினும் சென்னையில் உள்ள 8 பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியில் அவர்கள் தங்கி கல்விப் பயில சிறுபான்மையின மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.
முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் உயர்கல்வி படிப்பதற்காக சிறுபான்மையின முஸ்லிம் மாணவிகளுக்கு மத்தியிலே அதிக ஆர்வம் ஏற்பட்டு, அவர்கள் சென்னையில் உள்ள கல்லூரிகளிலே சேரும் பொழுது அவர்கள் தங்கும் வசதிக்காக மிகப்பெரிய சிரமங்களை எதிர்நோக்க வேண்டிய ஒரு சூழ்நிலை இருந்ததன் விளைவாகத்தான் இந்தக் கேள்வியை நான் எழுப்பினேன்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் சென்னையில், இராயப்பேட்டையில் 100 சிறுபான்மையின மாணவிகள் தங்கி படிப்பதற்காக, சிறுபான்மையின கல்லூரி மாணவியர் விடுதி அமைத்துத்தரப்படுமென்று அறிவித்தமைக்காக மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதேபோன்று, சிறுபான்மையின முஸ்லிம் மாணவர்களும் சென்னையிலுள்ள கல்லூரிகளில் சேர்ந்துப் படிக்கக்கூடியவர்கள் சிரமப்படுகிறார்கள் எனவே சென்னையில் சிறுபான்மை கல்லூரி மாணவர்களுக்கும் ஒரு விடுதி அமைக்க மாண்புமிகு அமைச்சர் அவர்கள் உடனடியாக முன்வருவாரா என்று தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.
மாண்புமிகு முஹம்மத் ஜான்(பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்): மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சிறுபான்மையின மாணவ, மாணவியர்களின் சிரமத்தை போக்கும் வகையில் முதலில் இன்றைக்கு சென்னையிலேயே மாணவிகளுக்காக ஒரு சிறுபான்மையின நல விடுதியை அமைத்துக் கொடுத்துள்ளார்கள். மாணவர்களைப் பொறுத்தவரையில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பகுதிகளில் இருக்கின்ற கல்லூரிகளில், விடுதிகளில் சேர்ந்து படிப்பதற்கு வாய்ப்பிருக்கின்றது, ஆனால் மாணவிகளுக்கு மாத்திரம் அதுபோன்று சரியாக வாய்ப்பு இல்லை, ஆகவே முதலில் அவர்களுக்காக மாண்புமிகு முதல்வர் அவர்கள் இந்த விடுதியை அமைத்துக் கொடுத்துள்ளார்கள். மேலும் சென்னையில் உள்ள 8 பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் இன்னும் அவர்கள் சேருகின்ற அளவிற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. அவ்வாறு இல்லையென்றால் மாண்புமிகு முதல்வர் அவர்களுடைய கவனத்திற்கு இதனை எடுத்துச் சென்று அது பரிசீலிக்கப்படும் என்பதைத் தங்கள் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன்

No comments :