Friday, March 2, 2012

இந்தியாவில் காவல் துறை மத சார்பாக உள்ளது : பிரஷாத் பூஷன்

இந்தியாவில் காவல் துறை மத சார்பாக உள்ளது : பிரஷாத் பூஷன்.
புது தில்லி : அன்னா ஹசாரே குழுவின் முக்கிய உறுப்பினரும் உச்சநீதி மன்ற வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷன் நாடெங்கும் உள்ள காவல்துறை வகுப்பு வாத மயமாகி உள்ளது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
“நாடு முழுவதும் காவல்துறை வகுப்பு வாத மயமாகி வருகிறது.தன் நச்சு கருத்துக்களால் ஒட்டு மொத்த குஜராத் காவல்துறையும் வகுப்புவாத மயமாகி உள்ளது “ என்று குஜராத் வகுப்பு கலவரங்களின் 10 ஆம் ஆண்டு நிறைவையொட்டி வெளியிடப்பட்ட ஆவணப்பட விழாவில் பிரசாந்த பூஷண் கூறினார்.
”நாடெங்கும் தீவிரவாத வழக்குகளில் காவல்துறையினரால் உண்மை குற்றவாளிகளை கண்டு பிடிக்க முடியா சூழலில் முஸ்லீம்களை அதில் சிக்க வைப்பதில் காவல்துறை தெளிவான திட்டமிடலுடன் செயல்படுகிறது. அப்படி சிக்க வைக்கப்படும் அப்பாவிகளுடன் எதிர்த்து போராடும் திறமற்றவராக இருந்தால் அவரின் வாழ்நாள் சிறையிலேயே கழிந்து விடுகிறது” என்றும் கூறினார்.
ஒரு வேளை அந்த நபர் வழக்காடி வெளியில் வந்தாலும் குறைந்தது 5 வருடங்களாவது சிறையில் கழிக்க நேரிடுவதோடு சமூகத்தில் தீவிரவாத முத்திரையோடு காலம் தள்ள வேண்டியுள்ளது என்ற பூஷண் சில சமயங்களில் ஊடகங்களும் இதில் முக்கிய பங்காற்றுகின்றன என்றும் கூறினார்.
இப்படி கைது செய்யப்படும் அப்பாவிகளுள் 2 % அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகளால் உண்மையிலேயே தீவிரவாதிகளாகும் வாய்ப்புண்டு என்றும் பிரசாந்த் பூஷன் கூறினார்.
சுப்ரதீப் சக்ரவர்த்தியால் எடுக்கப்பட்ட ஆவணப்படம் தவறாக கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டாலும் தன் வாழ்வில் இன்னல்களை சந்திக்கும் 7 முஸ்லீம் இளைஞர்களை பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments :