Friday, March 30, 2012

திருப்புல்லாணி ஒன்றியம் கிராமங்களுக்கு குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டப்பேரவையில் இராமநாதபுரம் MLA ஜவாஹிருல்லாஹ் கோரிக்கை

இராமநாதபுரம் தொகுதி MLA, ஜவாஹிருல்லாஹ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே இராமநாதபுரம் தொகுதியில் திருப்புல்லாணி ஒன்றியம் சேதுகரை ஊராட்சிக்குப்பட்ட மேல புதுக்குடி கீழ புதுக்குடி கிராமங்களுக்கு 10 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வரக்கூடிய சூழல் இருக்கின்றது. அதன் காரணமாக அந்தக் குடிநீரை சேமித்து வைக்கக்கூடிய ஒரு நிலையும் இதன் விளைவாக சில மாதங்களுக்கு முன் அங்கு டெங்கு காய்ச்சல் போன்ற காய்ச்சல்கள் பரவக்கூடிய ஒரு நிலையும் ஏற்பட்டது. இதையெல்லாம் தவிர்ப்பதற்காக தினசரி மேல புதுக்குடி கீழ புதுக்குடி உள்ளிட்ட இந்தக் கிராமங்களுக்கு குடிநீர் வழங்க அரசு ஆவன செய்யுமா என்பதை தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு நகராட்சி நிருவாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே உறுப்பினர் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் வாயிலாக அந்தப் பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்கின்ற பட்சத்தில் நிச்சயமாக விரைவாக உறுப்பினர் அவர்களின் வேண்டுதலை ஏற்று தண்ணீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் தெரிவித்துக் கொள்வதோடு அந்தக் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் வாயிலாக கிடைக்கவில்லை என்றால் எந்தெந்தப் பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும் என்பதை ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன்.

No comments :