Monday, June 20, 2011

த.மு.மு.க. சார்பில் மருத்துவமனை திறப்பு


கீழ்க்கரை, ஜூன். 19: கீழக்கரை அருகே காஞ்சிரங்குடியில் த.மு.மு.க. சார்பில் மருத்துவமனை திறப்பு விழா (படம்) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு த.மு.மு.க. மாவட்டத் தலைவர் சலிமுல்லாகான் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் இபுராகீம் வரவேற்றார். காஞ்சிரங்குடி ஜமாத் தலைவர் சாகுல் ஹமீது, த.மு.மு.க. நகர் தலைவர் ஜியாவுல் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம் மருத்துவமனையை ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ. ஜவாகிருல்லா திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் த.மு.மு.க. சார்பில் 96 ஆம்புலன்ஸ்கள் இயங்குகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 12 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. புதியதாக மேலும் 3 ஆம்புலன்ஸ்கள் சேர்க்கப்படவுள்ளன. 2008-ம் ஆண்டு கோவை குனியமுத்தூரில் ஒரு சிறிய மருத்துவமனை தொடங்கப்பட்டது. அங்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை அளிக்கப்படுகிறது. அதேபோல, குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை அளிக்க, ராமநாதபுரம் மாவட்டப் பொருளாளராகப் பணியாற்றி இறந்துபோன சல்மானின் நினைவாக காஞ்சிரங்குடியில் அவருடைய பெயரில் மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. புதியதாகப் பொறுப்பேற்ற அ.தி.மு.க. அரசு மக்கள் நலப் பணிகளை விரைவாகச் செயல்படுத்தி வருகிறது என்றார்

No comments :