Friday, April 1, 2011

கடல் அட்டை பிடிக்க அனுமதி : ம.ம.க.,வேட்பாளர் உறுதி





கடல் அட்டை பிடிப்பதற்கு மீனவர்களுக்கு உரிய அனுமதி பெற்று தர போராடுவேன்,'' என ராமநாதபுரம் தொகுதி ம.ம.க., வேட்பாளர் ஜவாஹிருல்லா பிரசாரத்தில் பேசினார். ராமநாதபுரம் தொகுதியில் சாத்தான்குளம், பெருங்குளம், உச்சிப்புளி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்து அவர் பேசியதாவது: மீனவர்கள் பிரச்னை தீர்க்ககூடியதாக இருந்தாலும், இதுவரை சரியாக யாரும் அணுகாததால் மீனவர்களின் பிரச்னை கிடப்பில் உள்ளது. மீனவர்கள் நலன் காப்பதில் தி.மு.க., அரசு தவறிவிட்டது. மத்தியில் ஆளும் காங்., அரசும் மீனவர் நலன் காக்காததால் ஏராளமான மீனவர்கள் தொழிலுக்கு சென்றபோது பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து கடல் அட்டை பிடித்து செல்கின்றனர் .ஆனால் இங்குள்ள மீனவர்கள் கடல் அட்டை பிடிப்பதற்கு தடைவிதித்துள்ளனர். இது எந்த வகையில் நியாயம். கடல் அட்டை பிடித்ததாக அப்பாவி மீனவர்களை கைது செய்து கொடுமை படுத்துகின்றனர். அ.தி.மு.க., பொது செயலாளர் ஜெயலலிதா கண்டிப்பாக முதல்வராவார். அவர் முதல்வரானவுடன் மீனவர்களின் நலன் காக்கும் திட்டங்கள் வகுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடலோர பகுதிகளில் கடல்சார்ந்த தொழிற்சாலைகள் உருவாக்கப்படும், கடல் அட்டை பிடிப்பதற்கான உரிய அனுமதி பெற்றுதர போராடுவோம், மீனவர்கள் மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்படும். கருணாநிதி ஆட்சியில்தான் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது. ஆனாலும் கச்சத்தீவில் மீனவர்கள் வலைகளை காயப்போடுவதற்கும், தங்குவதற்கும் உரிமை உண்டு. இந்த உரிமைகூட தற்போது தட்டிபறிக்கப்பட்டுள்ளது. ஜெ., முதல்வரானவுடன் கச்சத்தீவு மீட்பதற்கும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் .அதற்கு ம.ம.க., முழு முயற்சி எடுக்கும் என்பதை உறுதியாக கூறுகிறேன். தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர் .அதன்படி சரியான தீர்வை தரஉள்ளனர். ராமேஸ்வரம் பகுதியில் அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளதால் சுற்றுலா பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதற்கு தகுந்த தீர்வு எடுக்கப்படும்.மக்கள் சேவை செய்வதில் ம.ம.க., தீவிரமாக உள்ளது, என்றார். அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் ஆனிமுத்து, முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் முனியசாமி, முருகேசன் உட்பட பலர் உடன் சென்றனர்.

No comments :