Friday, September 24, 2010

பாபரி மஸ்ஜித் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

வரலாற்று சிறப்புமிகு பாபரி பள்ளிவாசல் வழக்கில் நாளை அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவு தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தலைநகர் டெல்லியில் வரும் 3ம் தேதி முதல் காமன்வெல்த் போட்டிகள் தொடங்கவிருக்கின்றன. இந்த சூழலில் பாபரி பள்ளிவாசல் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டால் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விடும். இதனால் காமன்வெல்த் போட்டிகள் பாதிக்கப்படும் என சொல்லி ரமேஷ் சந்த் திரிபாதி என்ற ஒய்வுப் பெற்ற அரசு அதிகாரி இந்த வழக்கை தொடுத்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது நீதிபதி அல்தமாஸ் கபீர் தலைமையிலான உச்சநீதிமன்ற பிரிவு இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று மனுதாரர் வேறு பிரிவுக்கு இந்த வழக்கை மாற்ற உச்சநீதிமன்ற பதிவாளரை அணுகலாம் என்று தீர்ப்பு கூறினர்.
இதனை தொடர்ந்து இன்று மனுதாரரின் வழக்கு நீதிபதி ரவீந்தரன் தலைமையிலான உச்சநீதிமன்றப் பிரிவின் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இந்த வழக்கு விசாரணை வரும் 28ம் தேதி நடைபெறும் என்றும் உத்தரவிட்டனர். 28ம் தேதி விசாரணைக்கு பிறகே பாபரி பள்ளிவாசல் வழக்கின் தீர்ப்பு காமன்வெல்த் விளையாட்டுகள் தொடங்குவதற்கு முன்பு வழங்கப்படுமா அல்லது அது முடிவடைந்த பிறகு (அக்டோபர் 14) வழங்குப்படுமா என்பது தெரியும்.
இந்த வழக்கை விசாரிக்கும் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவின் மூன்று நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி சர்மா செப்டம்பர் 30ம் தேதி ஒய்வு பெறுகிறார். எனவே தீர்ப்பு செப்டம்பர் 30க்கு முன்பு வழங்கலாம் என்று 28ம் தேதி விசாரணையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் தான் உடனடி தீர்ப்பு கிடைக்கும். இல்லையெனில் லக்னோ பிரிவிற்கு மற்றொரு நீதிபதி நியமிக்கப்பட்டு மறு விசாரணை நடைபெற்று அதற்கு பிறகு தீர்ப்பு எப்போது கிடைக்கும் என்பது இறைவனுக்கே வெளிச்சம்.

No comments :