Sunday, July 19, 2009

புதுவை மாநிலத்தில் கியாஸ் சிலிண்டருக்கான மானியம் தொடர்ந்து வழங்க வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்

மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர் லியாகத் அலி, முதல்-அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக விளங்கி வரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு உயர்த்தியதை தொடர்ந்து த.மு.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் புதுவை அரசுக்கு கோரிக்கை வைத்ததையடுத்து, புதுவை அரசும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று மட்டும் வைத்திருப்பவர்களுக்கு ரூ.30 மானியம் வழங்கப்படும் என்று அறிவித்தது.

இதனால் மகிழ்ச்சி அடைந்த புதுவை மாநில மக்கள், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட நாராயணசாமிக்கு வாக்குகள் அளித்து வெற்றி பெற செய்தார்கள்.

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.30 மானியத்தை புதுவை அரசு தற்போது திடீரென்று நிறுத்தியுள்ளது.

அரசின் இந்த செயலானது, மக்களை ஏமாற்றும் செயலாகவும், கண்டனத்திற்குரிய செயலாகவும் அமைந்துள்ளது. எனவே, இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்து, நிறுத்தப்பட்டுள்ள மானியத் தொகையை தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும், நிறுத்தப்பட்ட இடைக்காலத்தில் மானியம் இல்லாமல் சிலிண்டர் பெற்றவர்களுக்கு மானியத் தொகையை வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் லியாகத் அலி கூறியுள்ளார்.

No comments :