Friday, July 18, 2014

சிறுபான்மையினரின் தாய் மொழிப் பாட மதிப்பெண்ணையும் கணக்கில் கொள்ள வேண்டும்: ஜவாஹிருல்லா


(18 Jul) சிறுபான்மையின மக்களின் தாய்மொழிப் பாட மதிப்பெண்களையும் தேர்ச்சிக்குக் கணக்கில் கொள்ள வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா கூறினார்.சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா பேசியது:எனக்கு முன்னதாக பேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் கோபிநாத்தும், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் ராமச்சந்திரனும் தமிழகத்தில் சிறுபான்மையினர் மொழி எந்த நிலையில் உள்ளது என்பதை எடுத்துக் கூறினர்.அரசியலமைப்புச் சட்டம் 19 (ஏ), பிரிவு 29, பிரிவு 30-களின்படி, சிறுபான்மையின மக்களுக்கு அவர்களுடைய மொழியைப் பாதுகாப்பதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது.ஆனால், இப்போது இந்த மக்கள் தமிழைக் கட்டாயப் பாடமாக கற்கவேண்டும் என்பதோடு, அவர்களின் தாய்மொழியையும் கற்கலாம் என்ற சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தாய்மொழி மதிப்பெண், தேர்ச்சிக்கு கணக்கில் கொள்ளப்படுவதில்லை. இந்த நிலையை மாற்றி, அரசியலமைப்புச் சட்ட உரிமையின்படி அவர்களின் தாய்மொழி மதிப்பெண்ணையும் தேர்ச்சிக்கான கணக்கில் 
எடுத்துக்கொள்ள வேண்டும்.அதற்கு தமிழ்ப் பாடத்தின் முதல் பகுதியை இரண்டாகப் பிரித்து, முதல் பிரிவில் செயல்பாட்டுத் தமிழையும், இரண்டாம் பிரிவில் சிறுபான்மையினரின் தாய் மொழியையும் சேர்க்க வேண்டும் என்றார்.இதற்கு பதிலளித்து பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசியது:சிறுபான்மையின மக்களுக்கு தமிழகத்தில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு இருக்கும்போது, தமிழை கட்டாயப் பாடமாக படிப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது? தமிழைப் படித்தால்தான் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு பெறும் வாய்ப்பு கிடைக்கும். எனவே, தமிழை கட்டாயமாகப் படித்தே ஆகவேண்டும்.சிறுபான்மையினரில் ஒருசிலர் மட்டும்தான் தமிழைப் படிக்காமல் இருக்கின்றனர். இது சட்டத்தை அவர்கள் மதிக்கவில்லை என்பதற்கு அடையாளம் என்றார்.
ஜவாஹிருல்லா: தமிழகத்தில் புதிய குடியிருப்புப் பகுதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்தப் பகுதிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப ஒரு பள்ளி, நூலகம் உருவாக்கப்பட வேண்டும்.அமைச்சர் கே.சி.வீரமணி: கடந்த மூன்று ஆண்டுகளாக புவியியல் அடிப்படையில் 300 மக்கள்தொகை கொண்ட பகுதியில் புதிய தொடக்கப் பள்ளிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மேலும், தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் உயர்த்தப்பட்டுள்ளன.இதுபோல் தேவைக்கேற்ப கடந்த 3 ஆண்டுகளில் 342 புதிய பகுதி நேர நூலகங்களையும் தமிழக அரசு தொடங்கியுள்ளது.
ஜவாஹிருல்லா: பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை. இதற்காக அமைக்கப்படும் தேர்வுக் குழுவில் யார் இடம்பெற்றுள்ளனர், இந்தக் குழுவிடம் எத்தனை பேர் விண்ணப்பிக்கின்றனர், விண்ணப்பித்தவர்களின் முழு விவரங்கள் ஆகியவை வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிடப்படவேண்டும்.அமைச்சர் பி. பழனியப்பன்: துணைவேந்தர் நியமனம் என்பது பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நடமுறைப்படி மேற்கொள்ளப்படுகிறது. தமிழக அரசுக்கு இதில் எந்தவித சம்பந்தமும் இல்லை.அதோடு, தேடுதல் குழுவில் இடம்பெறும் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் மாறுபடும். இந்தத் தேர்வு என்பது யுஜிசி விதிமுறைப்படியே நடத்தப்படுகிறது. இதில் எந்த ஒளிவுமறைவும் கிடையாது.

No comments :