Thursday, January 8, 2015

பி.எஸ். அப்துல் ரஹ்மான் - ஒரு பன்முக வள்ளல் - ஜவாஹிருல்லாஹ் MLA!


பி.எஸ். அப்துல் ரஹ்மான் - ஒரு பன்முக வள்ளல் - 

ஜவாஹிருல்லாஹ் MLA!

__________________________________________________________

எம் நேசத்திற்குரிய பி.எஸ். அப்துல் ரஹ்மான் அவர்கள் மரணமடைந்துவிட்டார்கள். அவர்களை எனது மாணவப் பருவத்திலிருந்தே அறிந்து வந்துள்ளேன். சென்னை வண்டலூரில் அவர்கள் கிரஸண்ட் தங்குமிடப் பள்ளியை தொடங்கிய செய்தியை அறிந்த போது அந்த பள்ளியில் சேர்ந்து படிக்க வேண்டுமென்ற ஆவல் எனக்கு இருந்தது. ஆனால் எனது தந்தையின் அனுமதி கிடைக்காததினால் அந்த ஆசை நிறைவேறவில்லை. இருப்பினும் எங்கள் மாணவர் இஸ்லாமிய இயக்கத்தின் சார்பில் அந்த பள்ளிக்கூட வளாகத்தில் கோடை விடுமுறைக் காலத்தில் மாணவர்களுக்கான ஆளுமை வளர்ப்பு முகாம்களை அங்கு பல முறை நடத்தியுள்ளோம்.

தமிழகத்தில் எத்தனையோ கொடை வள்ளல்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் நமது சமகாலத்தில் முஸ்லிம் சமுதாயம் கல்வியில் முன்னேற வேண்டும் என்பதே தலையாய நோக்கமாக இருக்க வேண்டும் என்பதை உளமாற உணர்ந்து அந்த வழியில் செயல்பட்டவர் பி.எஸ்.ஏ. அவர்கள். அவர்களுடன் நெருங்கி நேரடியாக பழகும் வாய்ப்பு எனக்கு டிசம்பர் 1997ல் ஏற்பட்டது. 1997 நவம்பர் இறுதி வாரம் கோவையில் காவலர் செல்வராஜ் படுகொலைச் செய்யப்பட்ட பிறகு அங்கு முஸ்லிம்களுக்கு எதிராக வரலாறு காணாத கலவரம் நடைபெற்றது. 19 முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். பல நூறு கோடி ரூபாய் சொத்துகளை முஸ்லிம் சமுதாயம் இழந்தது. கோவை பற்றி எரிந்துக் கொண்டிருந்த நிலையில் அங்கு நிலவிய பதட்டச் சூழலை தணிப்பதற்காக எனது தலைமையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் குழு ஒன்று கோவை சென்றது. கலவரம் தலைவிரித்தாதிக்கொண்டிருந்த நிலையில் அங்கு பல நாட்கள் முகாமிட்டு கலவரம் ஏற்பட்ட சூழல், பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்கள் என அனைத்தையும் வீடியோவில் பதிவுச் செய்து பிறகு அதனை ஒரு ஆவணப்படமாக தமிழிலும் ஆங்கிலத்திலும் தயாரித்தோம். இந்த ஆவணப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப பட்டது.

இந்த படம் ஒளிபரப்பான ஒரு சில நிமிடம் கழித்து எனக்கு ஒரு தொலைபேசி வந்தது. மறுமுனையில் பேசியவர் நான் அப்துல் ரஹ்மான பேசுகிறேன் என்றார். ஆமாம் பி.எஸ்.ஏ. அவர்கள் தான் பேசினார்கள். கோவை கலவரம் தொடர்பான படத்தைத் தான் பார்த்ததாகவும் உடனடியாக என்னை பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்தார். மறுநாள் பி.எஸ்.ஏ. அவர்களை சென்னையில் சுப்பா ராவ் நிழல் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தேன். சந்திப்பு பல மணி நேரம் நீடித்தது. அங்குள்ள சூழல்கள் அனைத்தையும் கவலையுடன் கேட்டறிந்தார்கள்.

பள்ளிக்கூட மாணவ மாணவிகளும் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து மிகவும் வருந்தினார்கள். தனது பங்கிற்கு நான் பரிந்துரைச் செய்யும் பள்ளிக்கூடத்திற்கு வகுப்பறைகள் கட்டித் தருவதாக உறுதி அளித்தார்கள். வாக்குறுதி அளித்தப்படி கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள மன்பஉல் உலூம் உயர்நிலைப் பள்ளிக்கூடத்திற்கு ஒரு தளம் முழுவதையும் கட்டிக் கொடுத்தார்கள்.

இதன் பிறகும் எங்கள் தொடர்புகள் நீடித்தன. பல முறை நேரிலும் தொலைபேசியிலும் பேசியுள்ளோம். எனது பரிந்துரையில் அடிப்படையில் சென்னை புவிருந்தவல்லியில் உள்ள அஹ்லே ஹதீஸ் பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள பள்ளிக்கூடத்திற்கும் வகுப்பறைகளை கட்டிக் கொடுத்தார்கள். இதே போல் அவர்கள் தமிழகம் முழுவதும் கல்விக்காக செய்த தர்மம் கணக்கில் அடங்காது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மீது பி.எஸ்.ஏ. அவர்கள் கொண்டிருந்த பற்றின் காரணமாக தி ஹிந்து நாளிதழின் நிர்வாகிகளை அவர்கள் அழைத்து தமுமுகவின் செயற்பாடுகளை பாராட்டி பேசியுள்ளார். அவர்கள் இவ்வாறு பேசியது எனக்கு தெரியாது. ஆனால் தி ஹிந்து நாளிதழின் முதன்மை செய்தியாளர் சுரேஷ் நம்பத் என்னை அழைத்து பி.எஸ்.ஏ. அவர்கள் தங்கள் நிர்வாகத்திடம் தமுமுகவைப் பற்றி சிறப்பித்து பேசியதைப் பற்றி தெரிவித்தார். இதன் பிறகு தி ஹிந்து நாளிதழில் தமுமுகவைப் பற்றி செய்திகள் நல்ல முறையில் பிரசுமாகின.

சென்னை அண்ணா சாலையில் சீதக்காதி அறக்கட்டளை கட்டடத்தில் ஒரு தலைசிறந்த இஸ்லாமிய நூலகத்தை அவர்கள் தொடங்கியதும் மிகவும் பயனுள்ள அறப்பணியாகும். அந்த நூலகத்தினால் நான் பயனடைந்துள்ளேன். என்னைப் போல் பல ஆய்வாளர்களும் பயனடைந்துள்ளார்கள்.
இன்று பல்கலைகழகமாக உயர்ந்துள்ள கிரஸண்ட் பொறியியல் கல்லூரி முஸ்லிம்களும் தலைசிறந்த கல்வி நிறுவனங்களை நடத்த இயலும் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது. இது பி.எஸ்.ஏ. அவர்களின் வாழ்வியல் சாதனைகளில் ஒன்று என்றுச் சொன்னால் மிகையாகாது.

இதே போல் கீழக்கரையில் இயங்கி வரும் தாசிம் பீவி பெண்கள் கல்லூரி இன்று தேசிய அளவில் தலைசிறந்த கல்லூரிகளில் ஒன்றாக இயங்கி வருவதும் பி.எஸ்.ஏ. அவர்களின் சீரிய சிந்தனைகளின் பிரதிபலிப்பாக உள்ளது.

இன்று தமிழகத்தில் அரபி மத்ரஸாக்களில் சேர்வதற்கு மாணவர்கள் கிடைப்பதில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களை தங்கள் மத்ரஸாக்களில் கொண்டு வந்து சேர்ப்பதற்காக ஆசிரியர்களும், நிர்வாகிகளும் தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் சல்லடைப் போட்டு தேடும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு நேர் மாறாக கிரஸண்ட் வளாகத்தில் இயங்கும் புஹாரியா அரபிக் கல்லூரியில் பார்க்க முடிகின்றது. இங்கு சேர வரும் அனைத்து மாணவர்களுக்கும் இடம் கிடைப்பது சிரமம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக பலரும் என் பரிந்துரையை நாடி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. தரமான மார்க்க கல்வியுடன், பட்டப்படிப்பும் ஒரு சேர படிக்கும் வாய்ப்பை மாணவர்களுக்கு அளித்த முதன்மையான அரபிக் கல்லூரியாக அது விளங்குகின்றது.

சீதக்காடி அறக்கட்டளை நடத்தும் நிறுவனங்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பல்வேறு சமுதாய கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியில் பி.எஸ்.ஏ. அவர்களின் பங்களிப்பு இருப்பதை யாரும் மறுக்க இயலாது.

கீழக்கரைக்காரர்கள் என்றால் ஒரு அடைமொழி தொழில் செய்பவர்கள் என்ற புரிதலை மாற்றி அமைத்தவர் பி.எஸ்.ஏ. அவர்கள். அவரது பெரும் முயற்சியில் ஒரு பன்னாட்டு நிறுவனமாக ETA எனும் எமிரேட்ஸ் டிரேடிங் ஏஜென்சி இயங்குகிறது. கட்டுமான நிறுவனம் தொடங்கி பல்வேறு பெரிய நிறுவனங்களை உருவாக்கி தமிழ் சமுதாயத்திற்கு தொழில் துறையில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியவர் பிஎஸ்ஏ. ஈடிஏவிற்கு வளைகுடாவில் இன்னொரு பெயரும் உண்டு. E - எல்லா T தமிழ் A ஆட்கள் நிறுவனம் என்றும் சொல்லும் அளவிற்கு பல்லாயிரம் தமிழக குடும்பங்கள் முன்னேறுவதற்கான வேலை வாய்ப்பு அளிக்க வழிவகுத்தார்கள். ஒரு முறை இந்த குழுமத்தின் நிறுவனமான எம்பிஎம் யின் ஒரு பிரிவு இழப்பில் இயங்கிய நிலையில் அதன் மேலாளர்கள் அப்பிரிவை மூடி விடலாம் என்று பிஎஸ்ஏ அவர்களிடம் பரிந்துரைத்தார்கள். பிஎஸ்ஏ அவர்கள் அந்நிறுவனத்தில்பணியாற்றுபவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் என்று கேட்டார். பெரும் எண்ணிக்கையில் உள்ளார்கள் என்றும் குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் அதிகம் என்று மேலாளர்கள் குறிப்பிட்டார்கள். உடனடியாக இத்தனை குடும்பங்களுக்கு வாழ்வளிக்கும் அந்த பிரிவு இழப்பில் இயங்கினாலும் பரவாயில்லை: அதனை மூட வேண்டாம் என்று உத்தரவிட்டார். அந்த அளவிற்கு ஏழை மக்கள் மீது கரிசனம் காட்டும் பண்புடைய வள்ளல் பிஎஸ்ஏ அவர்கள்.

தமிழகத்தில் நமது சமகாலத்தில் பல கொடை வள்ளல்கள் இருந்துள்ளார்கள். அவர்களில் பி.எஸ்.ஏ. தனி ரகம். காரணம் கல்வியில் பின்தங்கிய நிலையில் உள்ள முஸ்லிம் சமுதாயத்தைக் கரம் பிடித்து உயர்த்தி விட வேண்டும் என்பதே அவர்கள் சிந்தனையாக செயல்திட்டமாக இருந்தது. அவர்களது கல்வி பணி நிச்சயமாக மரணத்திற்கு பிறகும் பயன் தரும் சதக்கத்துல் ஜாரியாவாக -நிரந்தர நல்லறமாக அமைந்துள்ளது. அவர்கள் வழியில் அவர்கள் குடும்பத்தினர் தொடர்ந்து நற்பணிகளை தொடர இறைவனை பிராத்திக்கிறேன்.

Jawahiru

1 comment :

ANSARY THOZHARGAL said...

யார் பரிந்துரை கடிதம் கொடுத்தாலும் நன்கொடையாக குறைந்த பட்சம் இரண்டு லட்சம் பணம் கொடுத்தால் தான் கிரஸண்ட் கல்லூரியில் சேர முடியும்