Thursday, April 17, 2014

மல்லிப்பட்டினத்தில் மமக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி






கலவரம் நடைபெற்ற மல்லிப்பட்டினத்திற்கு மமக பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி இன்று (16.04.2014) காலை சென்றார். அவரை ஜமாத் நிர்வாகிகளும், மமகவினரும் வரவேற்று சங்க அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
நடைபெற்ற சம்பவங்கள் குறித்து பொதுச் செயலாளர் கேட்டறிந்தார். இரு கட்சிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதல், சமூக மோதலாக ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டதாகவும், தினத்தந்தி பத்திரிக்கை, அப்பட்டமாக பொய்யான செய்திகளை வெளியிட்டுள்ளதாகவும் ஜமாத்தினர் குறைகூறினர். தற்போது 22 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை ஜாமீனில் எடுப்பதற்கு மமக சட்ட உதவிகளை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
நேற்று நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில், மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த இந்துக்களும், முஸ்லிம்களும் ‘ஒற்றுமையாக இருப்போம்’ என வாக்குறுதிகளை பரிமாறிக் கொண்டதாகவும், சேதப்படுத்தப்பட்ட தர்ஹாவை இந்துக்கள் தங்கள் செலவில் சரிசெய்து தருவதாக கூறியுள்ளதாகவும் ஜமாத்தினர் கூறினர்.
மமக பொதுச் செயலாளரை சந்திக்க அவ்வூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் வருகை தந்தனர். அவர்களிடம், ‘அமைதியைப் பராமரிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென்றும், பல சமூக மக்களும் வாழும் ஜனநாயக நாட்டில் மிகுந்த பொறுப்போடு நாம் செயல்பட வேண்டும்’ என்று பொதுச் செயலாளர் கூறினார்.
இச்சந்திப்பின்போது ஜமாத் தலைவர் முகம்மது ரபீக், செயலாளர் எச். சேக் அப்துல்லா, தமிழ்நாடு விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் எச். அஹமது கபீர், செயலாளர் எச். ரஹ்மத்துல்லா, பொறுப்பாளர்கள் அப்துல் ஜப்பார், கே.எச்.எச். முகம்மது ஹனீபா, அப்துல் மஹ்ரூப், எம்.கே.எம். அபுதாஹிர் மற்றும் மமக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
இச்சந்திப்பு தங்களுக்கு ஆறுதலாகவும், மன நிம்மதியாகவும் இருப்பதாக ஜமாத் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

No comments :