Friday, August 30, 2013

த.மு.மு.க. தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு: திண்டுக்கல்லில் பரபரப்பு ! !



திண்டுக்கல் நகரில் த.மு.மு.க நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் பாரதி புரத்தை சேர்ந்தவர் சையது அபுதாகீர். இவர் த.மு.மு.க. 34-வது வார்டு கிளை தலைவராக இருந்து வருகிறார். இவர் சம்சா, வடை போன்றவற்றை விற்பனை செய்து வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல வியாபாரத்தை முடித்துவிட்டு நள்ளிரவு 11.30 மணியளவில் வீடு திரும்பினார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4பேர் கொண்ட கும்பல் அபுதாகீர் வீட்டின் மீது தீயை பற்றவைத்து பெட்ரோல் குண்டுகளை சரமாரியாக வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். வீட்டிற்கு வெளியே குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதால் அதிர்ச்சியடைந்த அபுதாகீர் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தார். அப்போது வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் அந்தசமயத்தில் 4 பேர் மோட்டார் சைக்கிளில் சென்றதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. த.மு.மு.க. நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை அறிந்த த.மு.மு.க.வினர் ஏராளமானோர் வந்து அவரது வீட்டின் முன்பு குவிந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த டி.எஸ்.பி. சுருளிராஜா, இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், புகழேந்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. முன்விரோதம் இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பாரதிபுரத்தை சேர்ந்த இந்து மக்கள் கட்சியை சேர்ந்த ஒரு நிர்வாகிக்கும், அபுதாகீருக்கும் முன்விரோதம் இருந்துவந்துள்ளது. இருவருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இந்து மக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகி அபுதாகீரை பழிவாங்குவதற்காக சமயம் காத்துக்கொண்டு இருந்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவில் திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெருவில் உள்ள பாரதிய ஜனதா கிளை தலைவர் பிரவீன்குமார் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த நேரத்தில் அபுதாகீரை பழிவாங்கினால் போலீசாரின் விசாரணை வேறுபக்கம் திரும்பிவிடும், நாமும் தப்பிவிடலாம் என்ற கோணத்தில் சம்பந்தப்பட்ட தனது ஆதரவாளர்களுடன் த.மு.மு.க. கிளை தலைவர் அபுதாகீர் வீட்டில் பெட்ரோல் குண்டுகளை வீசி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அடுத்தடுத்து பா.ஜனதா, த.மு.மு.க. பிரமுகர்கள் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் திண்டுக்கல்லில் பொதுமக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க போலீசார் இரவு பகலாக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments :