Sunday, June 7, 2009

ரங்கநாத் மிஸ்ரா ஆணைய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் - மமக

சென்னை, ஜுன்.7- முஸ்லிம் சமுதாயத்தின் வாழ்வுரிமையை காக்கும் வகையில் ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் வழங்கிய பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

ரங்கநாத் மிஸ்ரா ஆணையம்

சென்னையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி தலைமை செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரையில் வகுப்புக்கலவரங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவது என்ற அம்சத்தை வரவேற்கிறோம். அதேநேரம் முஸ்லிம் சமுதாயத்தின் வாழ்வுரிமையைக் காக்கும் வகையில் ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் வழங்கிய பரிந்துரைகளை நிறைவேற்றுவது பற்றிய அறிவிப்பு ஏதும் இல்லாதது வருத்தமளிக்கிறது. அந்த பரிந்துரைகளை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

இலங்கையில் தமிழ் பேசும் அனைத்து மதத்தினருக்கும் சம உரிமை கிடைக்க இந்திய அரசு முழுமையான முயற்சி எடுக்க வேண்டும்.

வாக்குசீட்டு முறை
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பகிரங்கமாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டும் தேர்தல் ஆணையத்தின் மவுனம் வேதனையை ஏற்படுத்துகிறது. மீறினால் தண்டனை இல்லை எனும் போது சட்டங்கள் அர்த்தமிழந்து போய்விடும். எனவே, தேர்தல் விதி மீறல்களுக்கு உரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். மின்னணு வாக்குப் பதிவு முறையை மாற்றி மீண்டும் வாக்குசீட்டு முறையை கொண்டுவர வேண்டும்.

தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில் வாக்குசீட்டு முறையை கொண்டுவர அனைத்து கட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்த வேண்டும், கொண்டுவராவிட்டால் தேர்தல்களை புறக்கணிக்க வேண்டும் என அனைத்து கட்சிகளையும் கேட்டுக் கொள்கிறோம்.

முஸ்லிம் சிறுவியாபாரிகள்

மத்திய சென்னை தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி தொண்டர்கள் மீது நடந்த தாக்குதல்களை கண்டிப்பதுடன் இக்கலவரத்திற்கு காரணமாக இருந்த போலீஸ் அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை புதுப்பேட்டை, தாம்பரம், பூக்கடை, ஆவடி உள்ளிட்ட இடங்களில் முஸ்லிம் சிறுவியாபாரிகள் ஒடுக்கப்பட்டதையும் அவர்களின் சிறுகடைகள் சூறையாடப்பட்டதையும் கண்டிப்பதோடு, இத்தகைய நடவடிக்கைகளை அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments :