Wednesday, January 16, 2013

பாம்பன் கால்வாய் உடனடியாக தூர் வாரப்பட வேண்டும்

இராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ. பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
கடந்த ஞாயிறு (ஜனவரி 13) அன்று கடற்படையின் இழுவைக் கப்பல் எனது இராமநாதபுரம் தொகுதியில் உள்ள நூற்றாண்டு கண்ட பாரம்பரியமிக்க பாம்பன் ரயில் பாலத்தில் மோதி இதன் காரணமாக ரயில் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது 16 இரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன இதனால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.பாம்பன் கால்வாய் பன்னெடுங்காலமாக தூர் வாரப்படாதது தான் இந்த விபத்திற்கு காரணமாகும். இது குறித்து பின் வரும் கடிதத்தை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும் மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் துறைமுக நிர்வாக அமைச்சர் மாண்புமிகு திரு. ஜி.கே. வாசன் அவர்களுக்கும் கோரிக்கை கடிதத்தை இராமநாதபுரம் தொகுதி மக்கள் சார்பாக எழுதியுள்ளேன்.
எனது இராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட பாரம்பரியமிக்க பாம்பன் ரயில் பாலத்தில் இழுவை கப்பல் ஒன்று கடந்த ஞாயிறு (ஜனவரி 13) அன்று மோதி பாலத்தைச் சேதப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து ராமேஸ்வத்திற்கான ரயில் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.16 இரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன பாம்பன் கால்வாய் பகுதியில் சமீப காலமாக கப்பல்கள் தரைத் தட்டுவது வாடிக்கையாகி விட்டது. இது போன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுப்பதற்கான வழிமுறைகளை மத்திய மாநில அரசுகள் போர் கால அடிப்படையில் ஆய்வு செய்து வகுக்க வேண்டும் என்று தொகுதி மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். பாம்பன் வடக்கு மற்றும் தெற்கு கடலில் படகுகள் மற்றும் கப்பல்கள் கடக்கும் கால்வாய் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் அந்தக் கால்வாயில் மணல் அதிகளவு சேர்ந்து பாதை மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கப்பல்கள் தரைத் தட்டுவதற்கு இது முக்கிய காரணமாக உள்ளது. பாம்பன் கால்வாய் - பாம்பனுக்கு அருகில் குருசடை தீவு மற்றும் சிங்கள தீவு ஆகிய தீவுகளுக்கு இடையில் உள்ள நீர்ப்பரப்பிலிருந்து துவங்கி பாம்பன் ரயில் பாலத்தை கடந்து சுமார் முன்னூறு மீட்டர் வரை Pamban Channel எனப்படும் இந்த கால்வாயின் வழித்தடம் நீளுகின்றது. பல ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 9 மீட்டர் அளவு ஆளமாக இருந்த இந்த கால்வாய் வழித்தடம் தற்போது 2 மீட்டர் அளவிற்கு குறைந்துள்ளது. மேற்படி நீர்ப்பரப்பை சுமார் நான்கு மீட்டர் ஆழத்திற்கு தூர் வாரினால் போக்குவரத்திற்கு தேவையான பாதை சரி செய்யப்பட்டுவிடும். வாரத்திற்கு சுமார் மூன்று பெரிய கப்பல்கள் மற்றும் இழுவை கப்பல்களும் பெரிய ஆழ்கடல் மீன்பிடி படகுகளும் இந்த கால்வாயை பயன்படுத்துகின்றன. இந்த கால்வாய் மண் நிறைந்துள்ளதால் குறிப்பிட்ட நேரத்தில் கப்பல்கள் கால்வாயை கடப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. கடல் நீரேற்றம் - high tide நேரத்தில் மட்டும் கால்வாயை கடக்க துறைமுக துறை அனுமதிக்க வேண்டிய நிலையுள்ளது. மற்ற நேரத்தில் கப்பல் காத்திருக்க வேண்டியுள்ளது. இவ்வாறான சமயத்தில் கடல் காற்று திடீரென திசை மாறி வேகமும் அதிகரிக்கும் போது கடந்த காலங்களில் கப்பல்கள் தரை தட்டியுள்ளன. இது போன்ற ஒரு அசாதாராண நிலை தான் ஞாயிற்று கிழமை நள்ளிரவில் நிகழ்ந்தது. இனியும் இது போன்ற விபத்துகள் நடக்காமல் தடுக்க பாம்பன் கால்வாயை தூர்வரும் நடவடிக்கை உடனே எடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

எம்.எச்.ஜவாஹிருல்லா

No comments :