Thursday, December 1, 2016

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுக்குழு தீர்மானங்கள் முதல் பத்து

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுக்குழு தீர்மானங்கள் 1 to 10

#தீர்மானம்_1 "பாபரி மஸ்ஜித்"

உச்சநீதிமன்ற உத்தரவுகளை மீறி டிசம்பர் 6 1992ல் பாபர் மஸ்ஜித் பட்டப்பகலில் பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டது. இடிக்கப்பட்ட பள்ளிவாசல் ஓராண்டுக்குள் கட்டித்தரப்படும் என்று மத்திய அரசாங்கம் அளித்த வாக்குறுதி இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. லிபரான் ஆணையத்தால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பாபர் மஸ்ஜித் இடிப்பு குற்றவாளிகள் யாரும் தண்டிக்கப்படவில்லை. பாபரி மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும், மஸ்ஜித் இடிப்புக் குற்றவாளிகளைத் தண்டிக்கவேண்டும், பாபரி மஸ்ஜித் வழக்கில் உச்சநீதிமன்றம் விரைந்து தீர்ப்பளிக்க வேண்டும் என்ற அடிப்படை கோரிக்கையை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. இதை வலியுறுத்தி பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான டிசம்பர் 6 அன்று தமுமுக கருஞ்சட்டை அணிந்து நடத்தும் தர்ணா போராட்டத்தில் பெருந்திரளாக மக்கள் ளை பங்கேற்க வேண்டும் எனவும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.


#தீர்மானம்_2

"போபால் போலி என்கவுன்டர்"

போபால் மத்தியச் சிறையிலிருந்து எட்டு முஸ்லிம் இளைஞர்களை பச்சைப் படுகொலை செய்து விட்டு, மோதல் சாவு (என்கவுன்டர்) என்று நாடகமாடும் அயோக்கியத்தனத்தை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இப்படுகொலையில் ஈடுபட்டவர்கள் மீதும், இதைத் தூண்டிவிட்டவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு சட்டத்தின் மீதான நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.



#தீர்மானம்_3

"மரு. ஜாகிர் நாயக்"

உலகப்புகழ் பெற்ற இஸ்லாமிய அழைப்பாளரும், சவூதி, மலேசியா உள்ளிட்ட நாடுகளின் உயர் விருதுகளைப் பெற்றவரும், லட்சக்கணக்கான மக்களின் மனங்கவர்ந்தவருமாகிய மருத்துவர் ஜாகிர் நாயக் மீது மத்திய மாநில மதவெறி அரசுகள் மேற்கொண்டு வரும் பழிவாங்கும் போக்கையும், அவதூறுப் பரப்புகளையும் இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. அவரது நிறுவனத்தை 5 ஆண்டுகள் தடைசெய்துள்ள ஜனநாயகப் படுகொலையையும் இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிப்பதோடு, உடனடியாக மருத்துவர் ஜாகிர் நாயக் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை மத்திய, மராட்டிய மாநில பாஜக அரசுகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தடையையும் நீக்கவேண்டும் என்றும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் அச்சுறுத்தல் தொடர்ந்தால் மாபெரும் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க நேரும் என்றும் இப்பொதுக்குழு எச்சரிக்கிறது.
 தீர்மானங்கள்

#தீர்மானம்_4 ~பொதுசிவில் சட்டம்

இந்தியாவின் பன்மைத்துவத்தையும், சமூக அமைதியையும் சீர்குலைக்கும் வகையில் மத்திய அரசு பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்காக எடுக்கும் முன்முயற்சிகளை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. ஜனநாயகத்தைப் பெரும்பான்மைவாதத்தின் மூலம் வீழ்த்தும் வகையில் இந்திய சட்ட ஆணையத்தின் மூலம், பொது சிவில் சட்டம் குறித்து, பொதுமக்களிடம் கருத்தாய்வு நடத்துவதையும் இப்பொதுக்குழு கண்டிக்கிறது. அரசியல் சாசனத்தின் 25வது பிரிவு வழங்கியுள்ள சமயச் சுதந்திரத்திற்கு ஊறு விளைவிக்கும் மதவாத நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.


#தீர்மானம்_5 - "திப்புசுல்தான்"

இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் பங்களிப்பு செய்யாத, ஆங்கிலேயர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்களின் பாரம்பரியத்தில் வந்த மதவெறி சக்திகள், விடுதலைப் போரில் வீரமரணமடைந்த மாவீரன் திப்பு சுல்தான் மீது அவதூறு செய்து வருவதை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. நவம்பர் 10 2016 அன்று கர்நாடக அரசு நடத்தவிருந்த திப்புசுல்தான் விழாவும் மதவெறி சக்திகளால் தடுக்கப்பட்டுள்ளது. வரலாற்றைத் திரிக்கும் வன்னெஞ்சர்களின் வக்கிரத்திற்கெதிராக, அனைத்து மக்களும் ஓரணியில் திரள வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துவதோடு, தேசவிடுதலைக்காக தியாகங்கள் பலசெய்த திப்பு சுல்தான், பகதூர்ஷா உள்ளிட்ட மன்னர்களின் வரலாற்றையும், கண்ணியமிகு காயிதே மில்லத், மௌலானா அபுல்கலாம் ஆசாத் ஆகியோரின் வரலாற்றையும் பாடநூற்களில் இடம் பெறச் செய்ய வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

திண்டுக்கல்லில் அமைந்து வரும் ஹைதர் அலி - திப்பு சுல்தான் மணிமன்டபத்தின் பெயர் பலகையில் விடுதலைப் போராட்ட வீரர்கள் என்ற அடைமொழி அவசியம் இடம் பெற வேண்டுமென இப்பொதுக் குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

#தீர்மானம்_6 - "வெறுப்புப் பேச்சு"

சங்பரிவாரத்தின் வெறுப்புப் பேச்சுகளுக்கும், விபரீத நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசின் மௌனம் ஊக்கமளிப்பதாக உள்ளது. அண்மையில் சங்பரிவாரப் பிரிவுகளில் ஒன்றான தர்ம் ஜாக்ரன் மஞ்ச் தலைவர் ராஜேவர் சிங் “31.12.2021க்குள் இந்தியாவில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விடுவார்கள், இதுவே எங்கள் முக்கிய நோக்கம்” என்று பேசியுள்ளார். இவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சமூக அமைதியைக் குலைக்கும் வகையில் வெறுப்புப் பரப்புரைகள் செய்வோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

#தீர்மானம்_7 - "காஷ்மீர்"

காஷ்மீரின் அப்பாவிப் பொதுமக்கள் மீது நடத்தப்பட்டுவரும் ஈவிரக்கமற்ற வன்முறை வெறியாட்டத்தை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. காஷ்மீர், இந்தியாவின் பிரிக்கப்படாத பகுதியாகவும், அமைதிமிக்க பகுதியாகவும் இருக்கும் வகையில், அங்கு இணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும். அப்பாவிகளைக் கொன்று குவிக்க வழிவகுக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) மத்திய அரசு திரும்பப் பெறுவதோடு, மக்களுக்கு உரிய இழப்பீடுகளையும் வழங்க வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.


#தீர்மானம்_8 - "மதுரை முஸ்லிம் இளைஞர்கள் அலைக்கழிப்பு"

மதுரை மாநகரில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை காவல்துறை அடிக்கடி விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று அலைக்கழிப்பதை இப்பொதுக் குழு கண்டிக்கிறது. இத்தகைய அலைக்கழிப்புகள் தொடர்ந்தால் மாபெரும் மக்கள் போராட்டம் நடத்தப்படும் என்றும் இப்பொதுக்குழு எச்சரிக்கிறது.

#தீர்மானம்_9 - "சிறைவாசிகள் விடுதலை"

நீண்ட கால சிறைவாசிகளுக்கு மாநில அரசு தண்டனைக் குறைப்புச் செய்து கொள்ள உச்சநீதிமன்றம் அதிகாரம் அளித்துள்ளது. இதனடிப்படையிலும், மனிதாபிமான அடிப்படையிலும், தமிழகச் சிறைகளில் பத்தாண்டுகளுக்கு மேலாக வாடுகிற முஸ்லிம் சிறைவாசிகள் உட்பட அனைத்து வாழ்நாள் சிறைவாசிகளையும் மாநில அரசு விடுதலை செய்ய வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட நீண்ட கால சிறைவாசிகளையும், கோவை அபூதாஹிர் உள்ளிட்ட கடும் நோயாளிகளையும், 60 வயது கடந்தவர்களையும் தமிழக அரசு விடுதலை செய்ய ஆவன செய்ய வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளுக்கு பரோல் வழங்குவதில் மிகுந்த கடுமைகாட்டுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.


#தீர்மானம்_10 - "வக்ஃப் நிர்வாகம்"

தமிழக அரசு உடனடியாக வக்ஃப் வாரிய புதிய நிர்வாகத்தை அமைக்க வேண்டும் என்றும், ஆக்கிரமிப்பில் உள்ள ஏராளமான வக்ஃப் சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.




No comments :