Saturday, August 4, 2012

கீழக்கரையில் புதிய தாலுக்கா அலுவகம் திறக்க தலைமைச் செயலாளரிடம் எம்.எல்.ஏ வலியுறுத்தல்


கீழக்கரையில் புதிய தாலுக்கா அலுவலகம் திறக்கக் கோரி தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா மனு அளித்தார் அதில் குறிப்பிட்டுள்ளதாவது:
எனது தொகுதியான இராமநாதபுரத்திற்குட்பட்ட, கீழக்கரையை கடந்த 2010 ஆம் ஆண்டு தனித் தாலுகாவாக அமைக்க வருவாய்துறையின் மூலம் சட்டமன்றத்தில் அறிவிப்பு செய்யப்பட்டதின் அடிப்படையில் தாலுக்கா அலுவலகத்திற்காக கீழக்கரை சதக் டிரஸ்ட் இரண்டு ஏக்கர் நிலத்தை தானமாக வழங்க முடிவு செய்தனர் மேலும் கடந்த 21.05.2011ல் இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியரால் தற்காலிக அலுவலத்திற்கு இடம் தேர்வு செய்ய சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் புள்ளிவிவரப் பணி காரணமாக புதிய தாலுக்கா பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது அனைத்து பணிகளும் முடிந்தும் புதிய அலுவலகம் திறக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. நானும் இதுகுறித்து சட்டபேரவையில் கேள்வி எழுப்பினேன் அதற்கு மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் இவ்விசயம் குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார் என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.
எனவே நிலுவையில் உள்ள கீழக்கரை தனித் தாலுக்கா விரைவில் உதயமாக நடவடிக்கை எடுக்க ஆவன செய்யுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

No comments :