Thursday, January 12, 2012

“தானே” புயலை தேசிய பேரழிவாக அறிவிக்க வேண்டும்: பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்


"தானே' புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் முதுநகர், நெல்லிக்குப்பம், பரங்கிப்பேட்டை பகுதிகளை மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்.

பரங்கிப்பேட்டை மஹ்மூதியா ஷாதி மஹாலில் தமுமுக மாவட்ட தலைவர் மெஹ்ராஜ்தீன் தலைமையில் நடைபெற்ற நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லாஹ்,

கடலூர் மாவட்டத்தில் "தானே' புயல் கடும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது முந்திரி, பலா மரங்களை உருவாக்க 10 ஆண்டுகள் ஆகும். அதற்கு தகுந்தாற்போல் அரசு நிவாரணங்கள் வழங்க வேண்டும். முந்திரி, பலா பயிர்செய்யப்பட்ட விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட்டாக மாறாமல் இருக்க அரசு தடுக்க வேண்டும்.

தானே புயலினை மத்திய, மாநில அரசுகள் தேசிய பேரழிவாக அறிவிக்க வேண்டும். சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு கொடுத்தது போல் தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் நிவாரணங்கள் வழங்க வேண்டும்.

குடிசை வீடுகளுக்கு 2,500 நிவாரணம் போதுமானதாக இல்லை. அதனால் வீடு கட்டுவதற்குத் தேவையான உதவிகளை அரசு செய்துதர வேண்டும்.

இவ்வாறு பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., கூறினார். பேட்டியின் போது மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் அப்துஸ் ஸமது, மாநில துணைப்பொதுச்செயலாளர் ஜின்னா, பரங்கிப்பேட்டை நகர நிர்வாகிகள், ஜாக்கீர், பிலால், செய்யது, ஹஸன் அலி ஆகியோர் உடனிருந்தனர்.

No comments :