Tuesday, March 31, 2009

கூட்டணி பற்றி முடிவு : ம.ம.க இன்றும் பேச்சுவார்த்தை நடக்கிறது

சென்னை, மார்ச்.31- பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பதில் மனித நேய மக்கள் கட்சியில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது. இதனால் பல்வேறு கட்சிகளுடன் தொடர்ந்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை இன்றும் நடக்கிறது.

ஏற்க மறுப்பு

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் மனித நேய மக்கள் கட்சி பாராளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சிக்கு 6 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. ஆனால் அந்த கட்சிக்கு ஒரு இடம் மட்டுமே கொடுக்க தி.மு.க. தலைமை முடிவு செய்தது.

ஆனால் அந்த ஒரு தொகுதியை மனித நேய மக்கள் கட்சி ஏற்க மறுத்து விட்டது.

இதற்கிடையே தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் விவரங்களை முதல்-அமைச்சர் கருணாநிதி கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டார். இதில் மனித நேய மக்கள் கட்சி இடம் பெறவில்லை.

உயர்நிலைக் கூட்டம்

இந்த நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலை கூட்டம் சென்னையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று மாலை 5.30 மணிக்கு கட்சியின் கூட்டணி யாருடன் என்று அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் இரவு 7.30 வரை எந்த முடிவும் கூறப்படவில்லை.

பின்னர் இது குறித்து கட்சியின் மாநில துணை பொது செயலாளர் அன்சாரி கூறுகையில், காலையில் இருந்து எங்கள் கட்சியின் உயர்மட்ட குழுவினர் யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்திவருகின்றனர். தி.மு.க., அ.தி.மு.க.வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மேலும் தமிழகம் முழுவதும் இருக்கும் மாவட்ட தலைவர்களிடமும் கட்சியின் நிலை குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். இதன் மூலம் கட்சியின் செல்வாக்கையும், பலத்தையும் அறிந்து அதன்படி முடிவு எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி தி.மு.க.வுடன் தொடர்ந்து நீடிப்பதா அல்லது அ.தி.மு.க.வுடன் இணைவதா அல்லது சுயேச்சையாக போட்டியிடுவதா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். இந்த முடிவு அதிகாரபூர்வமாக நாளை அறிவிக்கப்படும் என்றார்.

குலாம் நபி ஆசாத்

இதற்கிடையில் தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளர் குலாம் நபி ஆசாத் மனிதநேய மக்கள் கட்சியை தொடர்பு கொண்டு சமரசம் பேசியதாகவும், தொடர்ந்து எங்கள் கூட்டணியில் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், தொடர்ந்து கூட்டணியில் இருப்பதற்கு தி.மு.க. சார்பில் 1 தொகுதியும், காங்கிரஸ் சார்பில் 1 தொகுதியும் மொத்தத்தில் 2 தொகுதிகள் தரப்படும் என்று பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறப்படுகிறது.

நன்றி : தினத்தந்தி

No comments :