மனிதநேய மக்கள் கட்சி ஒரு 'சீட்டை' ஏற்காது
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் (தமுமுக) அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சி (மமக) எதிர்வரும் மக்களவை தேர்தலில் ஒரு சீட்டுக்காக கூட்டணி என்ற கருத்தை நிராகரித்துள்ளது.
தமுமுக தலைவரும், மமகவின் ஒருங்கிணைப்பாளருமான எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ், முஸ்லிம் அரசியல் கட்சியின் மூத்த பங்காளிகள் கடைப்பிடித்து வந்த டோக்கன் ஸிஸ்டத்தை கடுமையாக எதிர்த்துள்ளார்.
'அதேபோல், முன் சென்ற காலங்களில், முஸ்லிம் அரசியல் கட்சிகள் பிறருடைய சின்னங்களில் போட்டியிட்டதைப் போல, போட்டியிடவும் நாங்கள் விரும்ப வில்லை. தமிழக அரசியலில் எங்களுக்கென தனி அடையாளம் இருக்கிறது' என்றும் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் 'த ஹிண்டு' பத்திரிக்கையாளரிடம் தெரிவித்தார்.
மமக கடந்த பிப் 7 அன்று தான் துவக்கப்பட்ட போதிலும், 13 வருட காலமாக சமூகப்பணி ஆற்றிவரும் தமுமுகவின் பின்புலம் அதற்கு உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
திமுக தலைமையுடன் நல்ல தொடர்பில் உள்ள அவர், அடுத்த வாரம் இடபங்கீடு விஷயமான பேச்சுவார்த்தை நடைபெறும் என நம்புவதாகவும் கூறினார்.
திமுக கூட்டணியில் ஒரே ஒரு சீட் தான் என நிர்பந்திக்கப்பட்டால், தனது கட்சி மாற்று முகாமை நாடவும் தயங்காது என்றும் சூசகமாக குறிப்பிட்டார்.
'அதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு செய்து கொள்ளவும் நாங்கள் தயங்க மாட்டோம். ஆனால், தேர்தலுக்குப் பின் எந்நிலையிலும் பாஜக அணிக்கு செல்ல மாட்டோம் என அதிமுக தலைமை எழுத்துப் பூர்வமாக உறுதி அளிக்க வேண்டும்' என்றும் அவர் தெரிவித்தார்.
தமுமுக பலமாக உள்ள வேலூர், ராமநாதபுரம், மயிலாடுதுறை, மத்திய சென்னை, திருச்சி மற்றும் தென்காசி ஆகிய ஆறு தொகுதிகளை குறி வைத்து தமது கட்சி களமிறங்க தயாராக உள்ளதாகவும், பகுஜன் ஸமாஜ் போன்ற கட்சிகளுடன் இணைந்து மாற்று அணி அமைப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
No comments :
Post a Comment