Monday, January 12, 2009

பொய் வழக்கு போட்ட எஸ்.பி.யை உடனே மாற்று ராமநாதபுரம் தமுமுக ஆர்பாட்டம்

பொய் வழக்கு போட்ட எஸ்.பி.யை உடனே மாற்று
ராமநாதபுரம் தமுமுக ஆர்பாட்டம்



ராமநாதபுரம் மாவட்டத்தில் மிகப்பெரிய சமூகமாக முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அரசு அதிகாரத்திலிருந்து அரசியல் அதிகாரம் வரை முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படும் சூழல்தான் இன்றுவரை நிலவி வருகிறது.


முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளால் மட்டுமே வெற்றி பெற்று பதவிக்கு வரும் அரசியல்வாதிகள் கூட தீட்டியவனையே கூர்பார்ப்பது போல் நமது சமுதாயத்தையே பல வகைகளில் பழிவாங்கி வருகிறார்கள்.


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் வருகைக்குப் பின்னர் முஸ்லிம்கள் அவமதிக்கப்படுவதும், அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவதும் குறைந்தது. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் த.மு.மு.க. அரசியல் கட்சிகளுக்கு இணையான உறுப்பினர் பலத்துடன் பலதரப்பட்ட மக்களின் ஆதரவோடு சிறப்பாக சமுதாயப் பணி ஆற்றி வருகிறது.


இந்நிலையில் பரமக்குடியில் ராஜா மஸ்தான் எனும் மாணவன் மர்மமான முறையில் இறந்துவிட, தற்கொலை என்று காவல்துறை மூடிமறைத்து விட்டது. இதனால் தமுமுக களத்தில் இறங்கியது. பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னால் ராஜா மஸ்தான் வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டது. இது மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்வேலனுக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது. உயர்மட்ட அதிகாரி ஒருவரின் உறவுக்காரர் என்று சொல்லப்படும் இவர் அதிரடி வேலைகள் செய்து ராமநாதபுரம் மாவட்டத்தில் புகழ் பெற்றவர். த.மு.மு.க.வின் போராட்டங்கள், சி.பி.சி.ஐ.டி.க்கு வழக்கு மாற்றப்பட்டது ஆகியவை எஸ்.பி.க்கு தமுமுகவின் மீது கோபத்தை ஏற்படுத்தி இருந்தன. குறிப்பாக போராட்டங்களுக்கு தலைமை ஏற்று நடத்திய ராமநாதபுரம் மத்திய மாவட்ட தமுமுகு தலைவர் சலிமுல்லாகான் மீது கடும் வெறுப்பில் இருந்த எஸ்.பி., சமயத்தை எதிர்பார்த்து காத்திருந்தார்.


இந்நிலையில் டிசம்பர் 6 அன்று பாபர் மஸ்ஜித் இடிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து த.மு.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன. ராமநாதபுரத்திலும் த.மு.மு.க.வினர் ஆயிரக்கணக்கில் திரண்டு டிசம்பர் 6 அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து வாகனங்களில் ஏற்றிச் சென்றனர் போலீசார். பிறகு அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் போலீஸ் வாகனங்களில் சீட்டுக்களை கிழித்ததாகவும், கண்ணாடிகளை உடைத்ததாகவும் ராமநாதபுரம் (மத்திய) மாவட்டத் தலைவர் சலிமுல்லாகான், (வடக்கு) மாவட்ட தலைவர் சாதிக் பாட்சா, தஸ்பீஹ், ஆஷிக் என 20க்கும் மேற்பட்டோர் மீது எஸ்.பி.யின் உத்தரவின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


எஸ்.பி.யின் பழிவாங்கும் போக்கு தொடர்வதைக் கண்ட த.மு.மு.க. மாவட்ட நிர்வாகிகள் மாநில நிர்வாகிகளுக்கு தகவல் அளித்தனர். தலைமை நிர்வாகிகள், காவல்துறையின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். உயர் அதிகாரிகளும் மாவட்ட கண்காணிப்பாளருக்கு எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் உயர் அதிகாரிகளின் உத்தரவுகளை தூக்கி எறிந்த எஸ்.பி., த.மு.மு.க. மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு மதுரையில் 3, 4 தேதிகளில் நடைபெற இருந்த நேரத்தில் அதில் கலந்து கொள்வதற்காகப் புறப்பட்ட மத்திய மாவட்டத் தலைவர் சலிமுல்லாகானை கைது செய்தனர்.


இதனால் ராமநாதபுரம் மாவட்டம் பரபரப்புக்குள்ளானது. கொதித்து எழுந்த தொண்டர்களையும், பொதுமக்களையும் த.மு.மு.க. நிர்வாகிகள் கட்டுப்படுத்தினர். அதே வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற நிர்வாகிகள் தங்களையும் கைது செய்ய வேண்டும் என காவல் நிலையத்திற்குச் சென்றபோது அவர்களைக் கைது செய்ய போலீசார் மறுத்து விட்டனர். சலிமுல்லாவைக் குறிவைத்து எஸ்.பி. செயல்படுவது அப்பட்டமாகத் தெரிந்ததால் பொதுமக்கள் கொதிப்படைந்தனர்.


இதனிடையே நெஞ்சு வலிக்காக மருத்துவமனையில் அட்மிட் ஆன சலிமுல்லாகான் அங்கிருந்தபடியே ஜாமீனில் வெளிவந்தார். த.மு.மு.க. மாவட்டத் தலைவர் மீதும், மற்றவர்கள் மீதும் பொய் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து முஸ்லிம் விரோதப் போக்கோடு செயல்பட்டு வரும் எஸ்.பி. செந்தில்வேலனை மக்கள் தொடர்பு இல்லாத துறைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை ராமநாதபுரத்தில் வலுத்து வருகிறது. எனவே இக்கோரிக்கையை வலியுறுத்தி தமுமுகவின் சார்பில் பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி இராமநாதபுரத்தில் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இராமநாதபுரம் வடக்கு, தெற்கு ,மத்திய ஆகிய மூன்று மாவட்ட நிர்வாகிளும் முன்னிலை வகித்தனர்.


தமிழக அரசு உடனடியாக எஸ்.பி.யை மக்கள் தொடர்பு இல்லாத துறைக்கு மாற்றுவது நல்லது. இல்லையெனில் அரசுக்கு எதிரான மனப்போக்கு ராமநாதபுரத்தில் பரவுவதைத் தவிர்க்க முடியாது. பாராளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் தமிழக அரசுக்கு இது நல்லதல்ல.

No comments :