Sunday, March 7, 2010
மதுக்கடை மறியல்
தமிழகம் மற்றும் புதுவை தழுவிய அளவில் நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் மதுக்கடை மறியல் போரில் பல்லாயிரக்கணக்காணோர் கைது.
05 – 03 – 2010 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது
Saturday, March 6, 2010
கட்டாய திருமணப் பதிவுச் சட்டம்: தமிழக முஸ்லிம் சமுதாய அமைப்புகளுடன் தமிழக சட்ட அமைச்சர் பேச்சு வார்த்தை

தமிழக அரசு கொண்டு வந்துள்ள தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம் 2009 என்ற கட்டாய திருமணப் பதிவுச் சட்டம் குறித்து இன்று தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் தமிழக சட்ட அமைச்சர் துரைமுருகன் அனைத்து முஸ்லிம் சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள கட்டாய திருமணப் பதிவுச் சட்டம் குறித்து பரவலாக தமிழகத்தில் முஸ்லிம் சமுகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. கடந்த பிப்ரவரி முதல் வாரம் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மவ்லவி ஏ.இ. அப்துல் ரஹ்மான் அவர்கள் தலைமையில் சென்னையில் 22 முஸ்லிம் அமைப்புகள் பங்குக் கொண்ட கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளைப் புரிந்து தமிழக அரசு முஸ்லிம்களின் நலனை பாதுகாக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அரசிடம் இக்கோரிக்கையை வலியுறுத்த வல்லுனர் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்த குழுவில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் முகைதீன், தேசீய லீக் தலைவர் பஷீர் அஹ்மது, ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக மவ்லவி முனைவர் அன்வர் பாதுஷா உலவி, மவ்லவி இல்யாஸ் ரியாஜி, ஜமாஅத்தே இஸ்லாமி சார்பில் எஸ். என். சிக்கந்தர், இந்தியன் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் முஹம்மது முனீர்;, மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் சார்பில் உமர் பாரூக் மற்றும் வழக்குறைஞர் ஜீவகிரிதரன் ஆகியோருடன் ஒருங்கிணைப்பாளர் அப்போலோ ஹனீபாவும் இடம் பெற்றனர். இந்த வல்லுனர் குழு ஐந்து முறை கூடி தமிழக அரசுக்கு சமுதாயத்தின் சார்பில் அளிக்கப்பட வேண்டிய கோரிக்கையை வடிவமைத்தது.


இறுதியான இன்று (மார்ச் 6) அன்று தலைமைச் செயலகத்தில் தமிழக முஸ்லிம் சமுதாய அமைப்புகளின் இந்த வல்லுனர் குழுவை சந்தித்து கருத்தறிய சட்ட அமைச்சர் துரைமுருகன் நேரம் ஒதுக்கினார். அரசு சார்பில் சட்ட அமைச்சருடன் தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர் திருமதி எஸ். மாலதி, தமிழக அரசின் பதிவுத் துறை தலைவர் ஆர். சிவகுமார், துணை முதல்வரின் துணைச் செயலாளர் கே. ரகுபதி, சட்டத்துறை துணைச் செயலாளர் திருமதி ஜானகி உள்ளிட்ட அதிகாரிகளும் பங்குக் கொண்டனர். சுமார் ஒன்னரை மணிநேரம் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையின் இறுதியில் தமிழக அனைத்து முஸ்லிம் சமுதாய அமைப்புகளின் வல்லுனர் குழு அளித்த கோரிக்கையை அமைச்சர் ஏற்றுக் கொண்டார். இது குறித்த முறையான அரச அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகின்றது.
கட்டாய திருமணப் பதிவுச் சட்டம் தொடர்பாக நிலவி வந்த சர்ச்சை இத்துடன் முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமுமுக துபை மண்டலம்] ஷார்ஜா-வில் முமுக மர்கஸ் திறப்பு நிகழ்ச்சி
முன்னேற்றக் கழகத்தின் ஷார்ஜா மண்டல மர்கஸ் திறப்பு நிகழ்ச்சி04.03.2010 அன்று ஷார்ஜா ரொடானா ஹோட்டலுக்கு எதிர்புறமுள்ள நத்தானி மெடிக்கல் சென்டர் பில்டிங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முமுக-வின் அமீரக துணைத் தலைவர் ஹுசைன் பாஷா தலைமை வகித்தார்.தன் தலைமையரையில் இஸ்லாமிய சொற்பொழிவுகள், திருக்குர்ஆன்;,கல்வி மற்றம் வேலை வாய்ப்பு பயிற்சி வகுப்புகள், ஆங்கிலம் மற்றும் அரபி மொழிகளை கற்றுக்கொள்ள பயிற்சித் திட்டங்கள் ஆகியவை முமுக மர்கஸில் நடைபெறும் என்று கூறினார்.அடுத்ததாக அழைப்புப் பணியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றிய இஸ்லாமியஅழைப்பாளர் நாஸர் அலிகான் அவர்கள், நம் ஒவ்வொருவர் மீதும் அழைப்புப் பணி என்பது கடமை எனவும், நபிமார்கள் எத்தனை சிரமங்களுக்கு மத்தியில் மார்க்கத்தை மக்களிடையே எடுத்துவைத்தார்கள் எனவும் எடுத்துரைத்தார். சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட முமுக-வின் அமீரக துணைத் தலைவர் அப்துல் ஹாதி அவர்கள் ஷார்ஜா மண்டல நிர்வாகிகளின் முயற்சியை பாராட்டியதோடு யார் ஒரு நல்ல விஷயத்தை தொடக்கி வைக்கிறார்களோ அவர்களுக்கு அதிகமான நன்மைகள் உண்டு என்று கூறினார்.இதுநாள் வரை ஷார்ஜா IAC-ல் வியாழன் தோறும் இரவு 09.30-10.30 வரை நடைபெற்று வந்த இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சிகள் இடமாற்றத்தின் காரணமாக முமுக மர்கஸில் இனி நடைபெறும் என மண்டலத் தலைவர் நெல்லிக்குப்பம் இக்பால் அவர்கள் கூறினார். பெண்களுக்கென தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையால் பெண்களும் இந்நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர்.இறுதியாக துபாயில் மிகப் பெரிய அளவில் மார்ச் 18 முதல் நடைபெறவிருக்கின்ற இஸ்லாமிய கண்காட்சிக்கு அனைவரும் சென்று பயனடைய வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டு, ஒரு சில வேலைவாய்ப்பு செய்திகள் அறிவிக்கப்பட்டு நிகழ்ச்சி முடிவடைந்தது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மண்டல நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!
Friday, March 5, 2010
குணங்குடி அனீபா வழக்கு விசாரணை முடிவு& விடுதலைக்கு பிரார்த்திக்க வேண்டுகோள்

1997ம் ஆண்டு நடைபெற்ற இரயில் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டு கடந்த 12 ஆண்டுகளாக விசாரணை சிறைவாசியாக சிறையில் வாடிவரும் குணங்குடி அனீபா அவர்களின் வழக்கு விசாரணை கடந்த 02-03-2010 அன்று முடிவடைந்தது. வழக்கறிஞர்கள் புகழேந்தி, பா.ப. மோகன், சேவியர் பெலிக்ஸ் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக ஆஜராகினர்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிரேம் குமார் 19.03.2010 அன்று வழக்கை ஒத்தி வைத்தார். அன்று இந்த வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
இந்நிலையில் தமுமுக வழக்கறிஞர் ஜைனுல் ஆபிதீன் சிறையில சென்று குணங்குடி அனீபாவை சந்தித்தார். அப்போது த.மு.மு.க தனது விடுதலைக்காக எடுத்து வந்த முயற்சிகளை நினைவு கூர்ந்த அனிபா அவர்கள் தனது வழக்கில் விரைந்து தீர்ப்பு அளிக்க கோரி தனது மனைவி மூலமாக தலைமை நீதிபதிக்கு மனு அளித்துள்ளதாகவும், விரைவில் தீர்ப்பு வெளிவந்து தானும், மற்ற சகோதரர்களும் விடுதலையாக எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு அனைத்து சகோதரர்களையும் கேட்டுக் கொண்டார்.
இடுப்பு வலியால் நடக்க சிரமப்பட்டு கைத்தடி மூலம் நடந்து வந்த அனீபா அவர்கள் விரைவில் உடல் நலம் பெற்று விரைவில் விடுதலையாக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ஒருவழியாக நீண்டகால விசாரணை இழுத்தடிப்புக்கு பின் வழக்கு விசாரணை முடிந்திருக்கிறது. அதே நேரத்தில் தீர்ப்பு வெளியாவதற்கு முன்னே தற்போதுள்ள நீதிபதியை மாற்றுவதற்கான வேலைகள் நடப்பதாகவும் தெரிகிறது. ஏற்கெனவே 6 நீதிபதிகள் மாறி 7வது நீதிபதியாக பிரேம்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இன்னொரு நீதிபதி வரும் பட்சத்தில் குறைந்தது இன்னும் இரண்டு மாதங்கள் தீர்ப்பு தாமதமாகலாம். இது ஏற்கெனவே வேதனையில் இருக்கும் அனீபா குடும்பத்தினரையும், முஸ்லிம் சமுதாயத்தையும் காயப்படுத்துவதாக இருக்கும்.
உயர்நீதிமன்றத்தில் அனீபாவுக்கு பிணை கேட்டபோது இன்னும் ஒரு மாதத்தில் வழக்கை முடித்து விடுவோம் என அரசு தரப்பு சொன்னது. ஆனால் 4 மாதம் கழிந்துதான் விசாரணை நிறைவுபெற்றிருக்கிறது.
தீர்ப்பு வெளிவருவதிலும் தாமதம் ஏற்பட்டால் அது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாகவே இருக்கும். தமிழக அரசு இந்த விசயத்தில் உரிய கவனம் செலுத்தும் என்று நம்புகிறோம்.
Thursday, March 4, 2010
இராமநாதபுரத்தில் 1000 மக்கள் உரிமை சந்தா சேர்க்கும் திட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் 1000 மக்கள் உரிமை சந்தா சேர்க்கும் திட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக நால்வர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. முதல் சந்தாவை இராமநாதபுர நகர வணிக சங்கத் தலைவர் ராமமூர்த்தியும், இரண்டாவது சந்தாவை காதர் பள்ளி ஜமாத் தலைவர் இஸ்மாயிலும் செலுத்தினர். இதற்கான ஒருங்கிணைப்பாளராக மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் செயலாளர் சலிமுல்லாஹ்கானும், மாவட்ட தமுமுக தலைவர் சாதிக் பாட்ஷாவும் செயல்பட்டு வருகின்றனர். மற்ற மாவட்ட நிர்வாகமும் இதனைப் பின்பற்றலாமே.
காரைக்கால் நகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து த.மு.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்
கண்டன ஆர்ப்பாட்டத்தில் ம.ம.க. மாவட்ட செயலாளர் லியாக்கத் அலி, ஹாஜா நஜிதீன், நைனா முஹம்மது, அக்பர்ஷா, ஹசனுதீன், முஹம்மது ஷரிபு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர், நகர தலைவர் ஜலாலுதீன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்திற்காக ஏற்பாடுகளை நகர பகுதி நிர்வாகிகள் சதாம், தமீம், அசாருதீன், சர்புதீன், ஆசிக், புஹாரி, ஆரிபு, ஹசன், தவ்ஃபிக் ஆகியோர் செய்திருந்தனர்.
Subscribe to:
Posts
(
Atom
)