Wednesday, April 14, 2010

விவசாயிகள் தற்கொலைக்கு ஒரே தீர்வு இஸ்லாமிய வங்கிமுறை மட்டுமே!


வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பேச்சு

கடன்சுமை தாளாமல் விவசாயி கள் தற்கொலை செய்து கொள்வது நம்நாட்டில் தொடர்கதையாகி விட்டது. சென்ற வாரம் கூட விதர்பா பகுதியில் 30 விவசாயிகள் கடன் கொடுமையைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர்.

இது குறித்து ஒரு விழாவில் கருத்து கூறிய பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், இஸ்லாமிய வங்கி முறையால் மட்டுமே இத்தகையத் தற்கொலைகளைத் தடுத்து நிறுத்த முடியும் என்று ஆணித்தரமாக எடுத்துரைத்துள்ளார்.

விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதற்குக் காரணம், கடனை செலுத்த முடியாமை அல்ல, அந்தக் கடனுக்கு விதிக்கப்படும் கொடுமை யான வட்டியைக் கட்டமுடியாமையே.

விவசாயிகள் மட்டுமின்றி, ஏழை எளிய மக்கள் கந்து வட்டிக் கொடுமை யின் காரணமாக, குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கிற செய்தி கள் அடிக்கடி நெஞ்சைச் சுடுகின்றன.

வட்டியில்லாத கடனை வழங்கும் இஸ்லாமிய வங்கிமுறையே, இந்தக் கொடுமைகளுக்கு ஒரே தீர்வு என சென்னையில் நடைபெற்ற ‘கருணா ரத்னா’ விருதுகள் வழங்கும் விழாவில் எம்.எஸ்.சுவாமி நாதன் பேசியுள்ளார்.

அகிம்சை, மரக்களி உணவு, சுற்றுப் புறச்சூழல் ஆகிய தளங்களின் சிறந்த சேவை ஆற்றுவோருக்கு கருணா ரத்னா விருது வழங்கப்படுகிறது.

இவ்வாண்டு பத்மஸ்ரீ முசாபர் ஹூசேன், சின்னி கிருஷ்ணா, நந்திதா கிருஷ்ணா ஆகியோருக்கு விருதும் 1 லட்ச ரூபாய் பொறிகிழியும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் விருதுகளை வழங்கிய எம்.எஸ்.சுவாமிநாதன் இஸ்லாமிய வங்கி முறையே தேசத்தின் பிரச்சினைக்குத் தீர்வு என்றுள்ளார். சு.சுவாமி என்ற அரசியல் தரகரோ, கேரள அரசு இஸ்லாமிய வங்கியைத் தொடங்குவதற்குத் தடை விதிக்குமாறு வழக்குப் போடுகிறார். எம்.எஸ். சுவாமி நாதன் உரையை கேட்டாவது, சுப்ரமணியசுவாமி திருந்த வேண்டும்.

ஹாஜாகனி

Sunday, April 11, 2010

இஸ்லாமிய வங்கி துவங்க கேரள உயர்நீதிமன்றம் அனுமதி

கொச்சி:கேரள மாநிலத்தில் இஸ்லாமிய வங்கியை தொடங்குவதற்கான நடவடிக்கைகளுக்கு கேரள உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

அதேவேளையில் அரசு அல்லது அரசு நிறுவனங்கள் இவ்வங்கியில் முதலீடுச் செய்வதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய வங்கிக்கெதிரான இறுதித் தீர்ப்புவரும் வரை இந்நிலைத் தொடரும். கேரளமாநிலத்தில் இஸ்லாமிய வங்கியல் நிறுவனம் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்க்கொண்டு வரும் அல்பராக்கா நிதியியல் நிறுவனம் சட்டப்படி நடவடிக்கைகளை ஆரம்பிக்கலாம் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இஸ்லாமிய வங்கியியல் நடவடிக்கைகளுக்கான தடையை நீக்கவேண்டுமென்று கோரி அல்பராக்கா நிதியியல் நிறுவனமும், இந்நிறுவனத்தின் ப்ரொமோட்டர் டைரக்டர் சி.கே.மேனனும் அளித்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜெஸ்தி செலமேஷ்வர், நீதிபதி சி.என்.ராமச்சந்திரன் நாயர் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்தது.

கேரள மாநில தொழில் வளர்ச்சிக் கழகத்தின்(K.S.I.D.C) பங்குகளுடன் மாநிலத்தில் இஸ்லாமிய வங்கி ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிராக முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், ஜனதா கட்சியின் தலைவருமான சுப்பிரமணிய சுவாமி அளித்த பொதுநல மனுவை விசாரித்த நீதிமன்றம் இஸ்லாமிய வங்கியியல் நடவடிக்கைக்கு தடைவிதித்தது.

மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தங்களின் நிலைப்பாட்டை அறிவிக்காததால் இவ்வழக்கில் இறுதித் தீர்ப்பை வழங்கவியலாது என நீதிமன்றம் அறிவித்தது.

அல்பராக்கா நிதியியல் நிறுவனத்திற்கு இதுவரை முதலீடுச் செய்யவில்லை என K.S.I.D.C உயர்நீதிமன்றத்திடம் தெரிவித்தது. இஸ்லாமிய வங்கியல் நடவடிக்கைகள் மதசார்பற்றது என்றும், இதில் எவர் வேண்டுமானாலும் முதலீடுச்செய்யலாம் எனவும் K.S.D.I.C யும் கேரள அரசும் நீதிமன்றத்திடம் விளக்கின.

இவ்வழக்கின் இறுதி விசாரணை வருகிற ஜுன் மாதம் 3 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்